18 April 2010

பிரச்சினைகள்தான் புலிகளையும் பிரபாகரனையும் உருவாக்கின- டியூ. குணசேகர

புலிகளோ பிரபாகரனோ பிரச்சினைகளை உருவாக்கவில்லை. பிரச்சினைகள்தான் புலிகளையும் பிரபாகரனையும் உருவாக்கின பிரச்சினை ஒன்று இருந்ததால்தான் இவ்வாறான அமைப்புக்கள் உருவாகின என இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளரும் அமைச்சருமான டியூ குணசேகர கேசரி வார இதழுக்கு அளித்த விசேட செவ்வி.

கேள்வி:- தமிழ் மக்களின் பிரச்சினை தொடர்பில் தமிழ் தேசிய கூட்டமைப்புடன் மட்டுமா அரசாங்கம் பேச வேண்டும்? அல்லது அனைத்துத் தமிழ் கட்சிகளுடனும் பேசிய தீர்வு காணப்பட வேண்டுமா?
பதில்
:- தமிழ் மக்களின் பிரச்சினை என்பது ஒரு தேசியப் பிரச்சினை. தமிழ் மக்களின் பிரச்சினை என்பதால் தமிழ் கட்சிகளுடன் கட்டாயம் பேசப்படவே வேண்டும். ஆனால் தீர்வு என்று வரும் போது அனைத்துக் கட்சிகளுடனும் பேசித்தான் தீர்வு காண வேண்டும். தமிழ் மக்கள் ஆதரிக்கும் கட்சிகளுடன் என்று மட்டுமல்லாமல் தமிழ் மக்களை ஆதரிக்கும் கட்சிகளுடனும் பேசப்பட வேண்டும். அந்த வகையில் எமது கட்சியையும் சேர்த்துக் கொள்ளலாம். எமது கட்சிப் பிரதிநிதிகள் தமிழ் பேசும் மக்களால் தெரிவு செய்யப்படாத பிரதிநிதிகளாக இருக்கலாம். ஆனால் தேசியப் பிரச்சினை என்று வரும் போது அனைவருடனும் பேசப்பட வேண்டும்.
கேள்வி:- தமிழ் தேசிய கூட்டமைப்பு இம்முறை தேர்தலில் திருப்திப்படக்கூடிய ஆசனங்களை பெற்றுள்ளது. தமிழ் மக்களும் அந்தக் கட்சியையே அங்கீகரித்துள்ளனரே?
பதில்:-
இதுவொரு தவறான கருத்து தமிழ் மக்கள் ஆதரித்துள்ளனர் என்பதற்காக அவர்கள்தான் தமிழ் மக்களின் ஏகபிரதிநிதிகள் என்று கூறமுடியாது. நாங்கள் இந்த நாட்டிலுள்ள அனைத்து மக்களையும் பிரதிநிதித்துவப்படுத்கிறோம். இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியான நாம் இன,மத, பிரதேச வேறுபாடுகள் கடந்த நிலையிலேயே செயலாற்றுகின்றோம். ஆகவே தமிழ் மக்களின் பிரச்சினை விடயத்தில் நான் எவ்வாறு செயற்பட்டேன்? அனைத்துக் கட்சிகளுடன் பேசி அவர்களின் இணக்கத்தைப் பெற்றுத்தான் இந்த அமைச்சரவைiயிலும் நாடாளுமன்றத்திலும் சமர்ப்பித்து அதற்கான இணக்கத்தை பெற்றுக் கொண்டேன். அப்போது எந்தக் கட்சியுமே எதிப்புத் தெரிவிக்கவில்லை.
கேள்வி:- தமிழ் மக்களின் பிரச்சினை தொடர்பில் தமிழ் தேசிய கூட்டமைப்புடன் மட்டும் பேச வேண்டுமென்பதில் என்ன குற்றம் காண்கிறீர்கள்?
பதில்
:- தங்களுடன் மட்டும்தான் பேச வேண்டுமென்பது பிரபாகரனின் கொள்கையாக இருந்தது. அது தவறானது. மேலும் பிரபாகரனும் இறந்த பின்னர் பல தமிழ் கட்சிகள் தாங்கள்தான் தமிழ் மக்களின் ஏகபிரதிநிதிகள் என நினைத்துக் கொண்டு இன்று செயற்பட நினைக்கிறார்கள். இது அவர்களின் சுயநல அரசியலை காட்டுகிறது.
ஆனால் தமிழ் மக்களின் நிலையோ கீழ் மட்டத்தில்தான் உள்ளது. தமிழ் மக்களின் ஏகபிரதிநிதிகள் என்று தமிழ் தேசிய கூட்டமைப்பினை எவ்வாறு கூற முடியும்? அப்படியாயின் வடக்கு கிழக்கைச் சேர்ந்த அனைத்து தமிழர்களும் தமிழ் தேசிய கூட்டமைப்பை ஒட்டுமொத்தமாக ஆதரித்தல்லவா இருக்க வேண்டும்.?
மேலும் தேர்தல் முடிவுகளை எடுத்துப் பாருங்களேன். வேறாக போட்டியிட்ட சிவாஜிலிங்கம், கஜேந்திரக்குமார் போன்றவர்கள் தமிழ் மக்களால் தோற்கடிக்கப்பட்டார்கள். இவர்கள் போன்றோர் யாரின் கொள்கையில் பற்று கொண்டவர்களாக இம்முறை தேர்தலில் நின்றார்கள் என்பதை அறிந்து கொள்ள முடியும். அவர்களே தமிழ் மக்களால் தோற்கடிக்கப்பட்டுள்ளனர். இது வடக்கு கிழக்கு மக்களின் மனதில் ஏற்பட்டுள்ள மாற்றத்தையல்லவா காட்டுகிறது?
கேள்வி:- கடந்த தேர்தலின் போது வலதுசாரிகளுடன் இணைந்து சில தமிழ் கட்சிகள் பலமானதொரு கூட்டமைப்பை உருவாக்கி அதன் மூலம் வடக்கு கிழக்கு மாகாணங்களில் தேர்தலில் குதித்து தமிழ் தேசிய கூட்டமைப்பை தோல்வியடையச் செய்யும் முயற்சியொன்று மேற்கொள்ளப்பட்டதுதானே?
பதில்:-
ஆம் இடதுசாரிகளும் தமிழ் கட்சிகளும் இணைந்து வடக்கு கிழக்குத் தேர்தலில் போட்டியிட்டு தமிழ் தேசிய கூட்டமைப்பை தோல்வியடைய செய்யும் வியூகம் ஒன்றினை வகுத்து அதனை இடதுசாரி அரசியல் கட்சியாக உருவாக்கும் முயற்சினய் மேற்கொள்ளப்பட்டன. அந்த முயற்சி வெற்றி பெற்றிருந்தால் சில வேளைகளில் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு வெற்றி வாய்ப்பு குறைந்திருக்கும்.
கேள்வி:- 13வது திருத்தச் சட்டத்தின் மூலமான அதிகாரங்கள் வழங்கப்படவில்லையென்று கிழக்கு மாகாண முதல்வர் உட்பட அதன் அமைச்சர்களும் கூறுகின்றார்களே?
புதில்:-
சொல்லிக் கொண்டிருப்பதில் பயனில்லையே கேட்டுப் பெற வேண்டுமல்லவா?
கேள்வி:- தமிழ் தேசிய கூட்டமைப்பினை அரசுடன் இணைந்து செயற்படுமாறு அரசாங்கம் கேட்டுள்ளதாக கூறப்படுகிறதே?
புதில்
:- அதுபற்றி எனக்குத் தெரியாது. முஸ்லீம் காங்கிரஸ_க்கு அழைப்பு விடுத்துள்ளதாக பத்திரிகையில் படித்தேன். அப்படி ஒன்றிருந்தால் அது நல்லதுதானே. நல்லதொரு சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. இதனை தமிழ் தேசிய கூட்டமைப்பு ஒரு சந்தர்ப்பமாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இதனைத் தவறவிட்டால் எதிர்காலத்தில் இப்படியொரு சந்தர்ப்பம் இல்லாமல் போகலாமல்லவா? முதலில் தமிழ் தேசிய கூட்டமைப்பு தனது கொள்கைகளை மாற்றி கொள்ள வேண்டியுள்ளது. யதார்த்த அரசியலை புரிந்து கொண்டு ஏற்றுக்கொள்ள வேண்டும். இவற்றினை அவர்கள் முதலில் செய்ய வேண்டும்.
கேள்வி:- தமிழ் மக்களின் பிரச்சினைக்கு இன்றைய அரசாங்கம் தீர்வு காணுமா?
பதில்
:- ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ சிங்கள தேசியவாதியே தவிர இனவாதியல்ல. அதுமட்டுமன்றி அவர் குருந்துவத்தை (கறுவாக்காடு) அரசியல் நடத்துபவர் அல்ல. தமிழ் மக்களின் பிரச்சினைக்கு நிச்சயம் அவர் தீர்வு காண்பார். புதிய நாடாளுமன்றம் அமைக்கப்பட்ட பின்னர் இதற்கான ஏற்பாடுகள் இடம் பெறும். நாடாளுமன்ற முதல் அமர்விலும் இந்த விடயம் தொடர்பில் ஜனாதிபதி தனது உரையில் கூறுவாரென நினைக்கிறேன். தமிழ் மொழி அமுலாக்கம் தொடர்பில் நான் ஜனாதிபதியுடன் பேசியபோது அவர்இது தொடர்பில் எவ்வித எதிர்ப்பினையும் தெரிவிக்காமல் ஏற்றுக் கொண்டார் என்பதனையும் இவ்விடத்தில் நான் கூறிக்கொள்ள வேண்டும்.
கேள்வி:- தமிழ் மொழி அமுலாக்கம் தொடர்பில் கடந்த காலங்களில் நீங்கள் எவ்வளவுதான் அக்கறையுடன் செயற்பட்டும் அது வெற்றியளிக்கவில்லை என்பதனை நீங்கள் ஏற்றுக் கொள்கிறீர்களா?
பதில்:-
மொழிப்பிரச்சினை என்பது இன்று நேற்று உருவானதொன்றல்ல. இது 50 வருடங்களுக்கு முன்னரே உருவானது. இந்த மொழிப்பிரச்சினைதான் அனைத்து பிரச்சினைகளுக்கும் காரணமாகவும் அமைந்திருந்தது. அப்படிபட்டதொரு பிரச்சினைக்கான தீர்வு என்பது கடந்த சில வருடங்களுக்கு முன்னர்தான் காணப்பட்டது. நீண்டகாலமாக இருந்து வந்த பிரச்சினை ஒன்றுக்கான தீர்வினை அமுல்படுத்துவது என்பது வெற்றியளிக்குமென்று எ;வாறு எதிர்பார்ப்பது? இந்த விடயத்தில் அரசியல் ரீதியாக நாம் வெற்றி பெற்றுள்ளோம். அதனை அமுல்படுத்துவதற்கான ஏற்பாடுகள் தொடர்பில் திருப்தியடைந்துள்ளோம். ஆனால் இதனை செயற்படுத்துவதில்தான் தாமதம் ஏற்பட்டுள்ளது. அதற்கான பல காரணங்கள் இப்போது கண்டறியப்பட்டுள்ளன. ஆகவே, எதிர்காலத்தில் இது தொடர்பில் அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு தமிழ் மொழி அமுலாக்கம் பூரணப்படுத்தப்படும்.
கேள்வி:- தமிழீழ விடுதலைப்புலிகளும் அதன் தலைமைத்துவமும் அழிக்கப்பட்டுவிட்டதால் தமிழ் மக்களின் பிரச்சினைக்குத் தீர்வு ஒன்று தேவை இல்லையென்று சில சிங்கள கட்சிகளின் தலைமைகள் கூறுவது தொடர்பில் உங்கள் கருத்து என்ன?
பதில்
:- இது அடிப்படைவாதிகளின் கருத்தல்லவா? இப்படிப்பட்ட கருத்துகளைக் கொண்டோர் நிச்சயம் அரசியலில் நிலைத்திருக்கப் போவதில்லை. இதற்கு உதாரணமாக மக்கள் விடுதலை முன்னணியையே எடுத்துக கொள்ளலாம். இன்று அவர்களின் நாடாளுமன்ற பிரதிநிதித்துவம் எப்படி போயுள்ளது. புலிகளோ பிரபாகரனோ பிரச்சினைகளை உருவாக்கவில்லை. பிரச்சினைகள்தான் புலிகளையும் பிரபாகரனையும் உருவாக்கின. புலிகள் 1980களில்தான் உருவானது. இதனை புரிந்துகொள்ள வேண்டும். பிரச்சினை ஒன்று இருந்ததால்தான் இவ்வாறான அமைப்புகள் உருவாகின. பிரபாகரனால் உருவாக்கப்பட்ட பிரச்சினை இது என்றால் அவரின் மரணத்துடன் இந்தப் பிரச்சினை முடிவுக்கு வந்திருக்க வேண்டுமே? தேசிய முக்கியத்துவம் வாய்ந்த இந்த பிரச்சினையை இவ்வாறெல்லாம் நோக்குவோர் வெறும் அரசியல் இலாபத்தைக் கொண்டு செயற்படுபவராகவே இருக்க முடியும். பிரச்சினைக்குத் தீர்வு காணப்பட வேண்டும்.
கேள்வி:- தமிழ் மக்களின் பிரச்சினைகள் அதற்கான தீர்வு தொடர்பில் உங்கள் கட்சியின் நிலைப்பாடு என்ன?
பதில்:- அன்றைய காலகட்டத்திலேயே இந்தப் பிரச்சினையை அணுகி தமிழ் பேசும் மக்கள் வாழும் பிரதேசங்களில் பிரதேச சுயாட்சி முறை உருவாக்கப்பட வேண்டுமென குரல் கொடுத்தவர்கள் நாங்கள்தான். 1956 களுக்கு முன்னரே நாம் இதனைத் தெரிவித்திருந்தோம். இதனை அடிப்படையாகக் கொண்டே இன்றைய மாகாண சபையும் உருவாக்கியுள்ளது என்றும் கூறலாம். தமிழ் பேசும் மக்களின் நியாயமான பிரச்சினைகளுக்குத் தீர்வு காணப்பட வேண்டுமமென்பதே எமது கட்சியின் நிலைப்பாடாகும்.
கேள்வி:- தற்போதைய அரசியலமைப்பில் மாற்றம் கொண்டு வரப்பட வேண்டுமா?
பதில்
:- நிச்சயமாக, முதலில் தற்போதைய தேர்தல் முறையில் மாற்றம் கொண்டுவரப்பட வேண்டியது அவசியமாகிறது.

நேர்காணல்- சித்திக்காரியப்பர்
நன்றி- வீரகேசரி

No comments:

Post a Comment