17 April 2010

யோசனைகள் புதிய உறுப்பினர்களின் ஆதரவுடன் அரசியலமைப்பு சீர்திருத்தத்தில் உள்வாங்கப்படும் - பேராசிரியர் திஸ்ஸ விதாரண

சர்வகட்சி குழுவின் யோசனைகள் புதிய பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டு புதிய உறுப்பினர்களின் ஆதரவுடன் சீர்திருத்தப்படும். அத்துடன் அரசியல் அமைப்பிலும் உள்வாங்கப்படும் என முன்னாள் அமைச்சரும் சர்வகட்சி குழுக்களின் தலைவருமான பேராசிரியர் திஸ்ஸ விதாரண தெரிவித்தார். சிறுபான்மை இன மக்களின் அரசியல் உட்பட ஏனைய பிரச்சினைகள் தொடர்பில் சகல அரசியல் கட்சிகளும் எவ்வித பேதமுமின்றி தீர்வு காண முன்வர வேண்டும் என்றார். புதிய பாராளுமன்றத்தில் சர்வகட்சி குழுவின் நடவடிக்கைகள் குறித்து தொடர்ந்து கூறுகையில் சிறுபான்மை இன மக்கின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் நோக்கிலேயே சர்வகட்சி குழு ஜனாதிபதியின் தலைமையில் அமைக்கப்பட்டது. ஆனால் பல்வேறு காரணங்களின் அடிப்படையில் பிரதான எதிர்கட்சியான ஐக்கிய தேசிய கட்சியும் தமிழ் தேசிய கூட்டமைப்பு உட்பட ஏனைய சில கட்சிகளும் சர்வ கட்சி குழுவிலிருந்து விலகிக் கொண்டமையினால் குழுக்களின் நடவடிக்கைகள் ஓரளவு பின்னடைவை சந்தித்தன.

ஆனால் தற்போது இலங்கையின் ஏழாவது பாராளுமன்றத்திற்கு புதிய உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். அத்தோடு ஏற்றுக்கொள்ளக்கூடியளவு தமிழ் அரசியல் பிரதிநிதித்துவங்களும் புதிய பாராளுமன்றத்தில் அங்கத்துவம் வகிப்பதால் தீர்மானங்களை நிறைவேற்றிக் கொள்வதில் சிக்கல்கள் தோன்ற வாய்ப்பில்லை.

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ ஏற்கனவே தமிழர்களின் பிரச்சினைகளுக்கான சர்வகட்சி குழுவின் தீர்மானங்கள் குறித்து அவதானம் செலுத்தியிருந்தார். தற்போதைய அரசாங்கத்திற்கு தீர்மானங்களை நிறைவேற்றக் கூடிய அதிகாரங்களும் பொதுமக்களின் ஆதரவும் காணப்படுகிறது. எனவே புதிய பாராளுமன்றத்தில் சிறுபான்மை இன மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியும் எனக் கூறினார்.

நன்றி- வீரகேசரி

No comments:

Post a Comment