02 May 2010

கற்பனைகளில் மூழ்காமல் யதார்த்தபூர்வமான தீர்வுக்கு முயற்சிக்க வேண்டும்- தி. ஸ்ரீதரன்,பொதுச்செயலாளர், பத்மநாபா ஈ.பி.ஆர்.எல்.எப்


தமிழ் மக்களின் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு தமிழ் கட்சிகள் அனைத்தும் இணைந்து பணியாற்ற வேண்டும் என்பதில் எமக்கு மாறுபட்ட கருத்து இல்லை. அது மிகவும் அவசியமானதும்கூட. தீர்வு விடயத்தில் கருத்தொருமிப்பை உருவாக்குவதற்கு இதயபூர்வமான அர்ப்பணத்துடன் கூடிய முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

கற்பனைகளில் மூழ்கி விடாமல் யதார்த்தபூர்வமான தீர்வுக்கு நாம் முயற்சிக்க வேண்டும்.

13வது திருத்தச் சட்ட மூலத்திற்கு சரியான முறையில் விளக்கமளித்து அது அமுல்படுத்தப்படுவது நல்லதொரு ஆரம்பம் என்பதில் எமக்கு மாறுபட்ட கருத்து இல்லை.

13வது திருத்தத்தை முடிந்தளவுக்கு மாகாணசபைகளுக்கு சார்பாக விளக்கம் அளிக்கும்படி அதிகாரம் கொண்ட ஆணைக்குழுவொன்று ஜனாதிபதியால் கட்சி சார்பற்ற நிபுணர்களை கொண்டு அமைக்கப்படல் வேண்டும். இந்த ஆணைக்குழுவின் பரிந்துரையின் அடிப்படையிலேயே அதிகாரப்பகிர்வின் நடைமுறைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

மதிப்புக்கூட்டு வரி உட்பட விற்பனை வரிகள், மதுபான வருமான வரிகள், சொத்துமாற்ற வரிகள் போன்றன உட்பட மாகாணசபைகளின் வரி வருமானங்கள் என 13வது திருத்தத்தில் உள்ள 19 வகை வருமானங்களும் திரட்டப்பட்டு காலதாமதமின்றி மாகாண ஆட்சிகளுக்கு உரியபடி பகிர்ந்தளிக்கப்பட வேண்டும்.

அரசாங்க அதிபர்கள் உட்பட பொதுநிர்வாக அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் அனைவரும் அந்தந்த மாகாண ஆட்சிகளின் நிர்வாகங்களுக்கு உட்பட்டவர்களாக ஆக்கப்படல் வேண்டும். மத்திய அரசின் விடயங்களை நிறைவேற்றுவதில் அந்த உயர் நிர்வாக அதிகாரிகள் மத்திய அரசின் கட்டளைகளுக்கு பணிவாக செயற்பட வேண்டும். அப்படி இல்லையாயின் மாமகாண ஆட்சிகள் தமக்கென மாவட்டங்கள், பிரதேச எல்லைகள் கிராமங்கள் வரை பொதுநிர்வாக அதிகாரிகளையும் ஊழியர்களையும் தனியாக கொண்டிருக்க வகை செய்ய வேண்டும்.

விவசாயம், நீர்பாசனம், மீன்பிடி, கிராமிய அபிவிருத்தி, நகரங்களின் அபிவிருத்தி, சிறுதொழில்கள் மற்றும் குடிசைக் கைத்தொழில்கள், சமூக நல சேவைகள், கூட்டுறவு அமைப்புக்கள், மாகாணங்களுக்குள் வர்த்தகம், போக்குவரத்து உள்ளுர் சுற்றுலாத்துறை போன்றவையும் அவை தொடர்பான விடயங்களும் முழுமையாக மாகாண அரசின் அதிகாரங்களாக அமையும் வகையில் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.

மத்திய அரசின் கல்வி நிலையங்களென விசேடமாக குறித்து அறிவிக்கப்பட்டவை தவிர ஏனைய அனைத்து பள்ளிக்கூடங்களினதும் மற்றும் தொழிற்பயிற்சி கல்வி நிலையங்களினதும் அபிவிருத்தி நிர்வாகம், ஆசிரியர் நியமனம் போன்றவற்றின் முழுமையான அதிகாரம் மாகாணசபைகளுக்கு உரியதாக விடப்படல் வேண்டும்.

மத்திய அரசுக்கு உட்பட்டதென திட்டவட்டமாக கூறப்பட்டவை தவிர ஏனைய அனைத்து வைத்தியசாலைகள் மற்றும் வைத்திய சேவைகளின் அபிவிருத்தி நிர்வாகமும் மேலும் சுகாதாரம், மருந்துகள் தொடர்பான அதிகாரங்களும் தலையீடு அற்ற வகையில் மாகாண அரசுகளிடம் ஒப்படைக்கப்பட வேண்டும்.

மாகாண பொலிஸ் பிரிவானது மாகாணசபையின் சட்டங்களுக்கும் மாகாண முதலமைச்சரின் கட்டளைகளுக்கும் கீழ்படிவாக செயற்பட வேண்டுமென்ற நிர்வாக ஏற்பாடொன்றை ஜனாதிபதி மேற்கொள்ள வேண்டும். அத்துடன் மாகாண மற்றும் தேசிய பொலிஸ் ஆணைக்குழுக்கள் நியமிக்கப்பட வேண்டும்.

காடு மற்றும் அரச நிலங்களின் பாவனை தொடர்பாக மத்திய அரசு மேற்கொள்ளும் சுற்றுசூழல் கொள்கைகளுக்கு அமைய மாகாண அரசுகளே நிலப்பாவனை நில நிர்வாகம் நில அபிவிருத்தி நிலப்பகிர்வு அரச நிலங்களில் குடியேற்றங்கள் மற்றும் காட்டு வளங்கள் பற்றிய விடயங்களில் முழுமையாக நிறைவேற்று அதிகாரம் கொண்டிருக்க வகை செய்ய வேண்டும்.

தேர்தல் நடத்துவதை தவிர உள்ளுராட்சி அமைப்புக்கள் தொடர்பான அனைத்து அதிகாரங்களும் மாகாண ஆட்சிகளுக்கு உட்பட்டவையே என்பது உறுதியாக நிலைநாட்டப்பட வேண்டும்.

நாட்டின் பாதுகாப்பு ஒருமைப்பாடு வெளிநாட்டு உறவு, கப்பல் துறை, மற்றும் துறைமுகங்கள், விமானங்கள், விமான நிலையங்கள் ரயில்வே மத்திய நிதி நிர்வாகம், வங்கிகள், தொலை தொடர்புகள், தொலைகாட்சிகள், மற்றும் வானொலி கட்டுப்பாடுகள், வெளிநாட்டு வர்த்தகம் போன்ற நாடு தழுவிய மற்றும் தேசிய விடயங்கள் தவிர ஏனைய விடயங்கள் பெரும்பாலும் மாகாணசபைகளால் நிறைவேற்றப்படுபவையாக இருக்க வேண்டும்.

13வது திருத்தச் சட்டமூலத்தை சரியான முறையில் அர்ததப்படுத்தி அதனை அமுல்ப்படுத்துவதானால் மேற்கூறியவாறே அதிகாரங்கள் பகிரப்படல் வேண்டும்.

ஒரே நேரத்தில் எல்லா நிகழும் என்று எதிர்பார்க்கா விட்டாலும் 13வது திருத்தத்தை சரியான முறையில் அமுல்ப்படுத்துவது இவ்வாறே அமைய வேண்டும்.

இறுதித் தீர்வு என்பது தமிழ் மக்கள் மாத்திரமல்ல முஸ்லீம், மலையக தமிழ் பேசும் சமூகங்கள் சிங்கள மக்களுடன் சமத்துவமான பங்காளர்களாக வாழ்வதாக மானசீகமாக உணர்வதற்கான நிலைமைகளை ஏற்படுத்துவதே. அதாவது இந்த நாட்டின் எண்ணிக்கையில் சிறுபான்மையான சமூகங்கள் தாங்கள் இலங்கையின் அரசாங்க முறைமையின் பங்குதாரர்கள் என்று உணரும் நிலைமையை ஏற்படுத்துவதே தற்போதைக்கு இறுதித் தீர்வாக அமையலாம்.


நன்றி வீரகேசரி வாரவெளியீடு

No comments:

Post a Comment