29 October 2009

எட்டு மாவட்டங்களில் கடும் வரட்சி- 20 மில்லியன் ரூபா அவசர ஒதுக்கீடு

நாட்டின் எட்டு மாவட்டங்களில் நிலவிவரும் வரட்சி காரணமாக பாதிக்கப்பட்ட சுமார் 2,00,000 குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக 20மில்லியன் ரூபா அவசரமாக வழங்கப்பட்டுள்ளதோடு உலர் உணவுப் பொருட்கள், குடிநீர் என்பனவும் வழங்கப்பட்டு வருவதாக அனர்த்த நிவாரண சேவைகள் நிலையப் பணிப்பாளர் சரத் பெரேரா தெரிவித்தார்.

இதில் மொனராகலை மற்றும் அம்பாறை மாவட்டங்களே கூடுதலாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலன்னறுவை, அம்பாந்தோட்டை, மட்டக்களப்பு, புத்தளம், மாத்தளை, குருணாகல் மாவட்டங்களும் ஓரளவு பாதிக்கப்பட்டுள்ளதாக இடர்முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

மொனராகலை மாவட்டம்- 1,28,290 குடும்பங்கள்- 5,77,341 பேர், அம்பாறை மாவட்டம்- 29,792 குடும்பங்கள் 1,11,352 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் குடிநீர் இன்றியும் ஏனைய தேவைகளுக்கு நீர் வசதியின்றியும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மொனராகலை மாவட்டத்திற்கு – 24 லட்சம் ரூபா வழங்கப்பட்டுள்ளதோடு 1000 லீட்டர் கனவளவுடைய 50 நீர்த்தாங்கிகளும் வழங்கப்பட்டுள்ளன. 12,000 குடும்பங்களுக்கு இரு வாரங்களுக்குத் தேவையான உலர் உணவுப் பொருட்களும் வழங்கப்பட்டுள்ளன.

நீர்ப்பாசனக் கிணறுகளை புனரமைப் பதற்காக 11 இலட்சம் ரூபா வழங்கப்பட்டுள்ளதாகவும் நிவாரண சேவைகள் நிலையம் தெரிவித்தது.இதேவேளை, அம்பாறை மாவட்டத்திற்கு ஆயிரம் கனலீட்டர் கொண்ட 81 நீர்த்தாங்கிகள் வழங்கப்பட்டுள்ளன. உலக உணவுத் திட்டத்தினூடாக கிணறுகளை புனரமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள கிணறுகளை புனரமைக்க 2,50,000 ரூபா வழங்கப்பட்டுள்ளது. பொலன்னறுவை மாவட்டத்திற்கு நிவாரணம் வழங்குவதற்காக 13 இலட்சம் ரூபா வழங்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து வரட்சி நீடிக்குமானால் 3 மாதங்களுக்குத் தேவையான உலர் உணவுப் பொருட்கள் வழங்கப்படுமென அனர்த்த நிவாரண நிலையம் கூறியது.

No comments:

Post a Comment