30 October 2009

செயல்ரீதியான நடவடிக்கையே தேவை : ஐரோப்பிய ஒன்றியம்

ஐரோப்பிய ஒன்றியத்தின் மனித உரிமைகள் குழு நடத்திய விசாரணைகளுக்கு அமைய ஐரோப்பிய பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டத் தீர்மானத்தின் மூலம் இலங்கை தொடர்பான நிலைப்பாடு தெளிவாக விளக்கப்பட்டுள்ளதென பாராளுமன்றத்தின் தெற்காசிய விவகாரப் பொறுப்பாளர் ஜேன் லெம்பார்ட் தெரிவித்துள்ளார். மனித உரிமை மீறல் மற்றும் ஊடக அடக்குமுறை போன்ற சம்பவங்கள் தொடர்பில் இலங்கை காத்திரமான நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும, குற்றச்செயல்களுக்கு தண்டனை வழங்கப்படாத நிலை, மற்றும் ஊடக அடக்குமுறைகள் உடனடியாக முடிவுறுத்தப்பட வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

எவ்வாறெனினும், ஜீ.எஸ்.பி. பிளஸ் சலுகைத் திட்ட நீடிப்பு தொடர்பில் ஐரோப்பிய பாராளுமன்றம் அழுத்தங்களைப் பிரயோகிக்க முடியாது எனவும், அது ஐரோப்பிய ஒன்றியத்தின் தனிப்பட்ட தீர்மானம் என அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை இது குறித்து அரசாங்கம் தெரிவிக்கையில் ஐரோப்பிய ஒன்றியத்துடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்குத் தயார் எனவும், விசாரணைகளுக்கு இடமளிக்கப்பட மாட்டாது எனவும் அரசாங்கம் தனது நிலைப்பாட்டை விளக்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

எவ்வாறெனினும், ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகளுடன் தொடர்ச்சியாக பேச்சுவார்த்தை நடத்தப்படும் என அரசு தரப்பு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment