24 October 2009

கிழக்கில் சட்டவிரோத குடியேற்றங்கள் உடனடி நடவடிக்கை தேவை- இரா.சம்பந்தன்

கிழக்கில் சிறுபான்மையினருக்கு சொந்தமான காணிகள் மற்றும் அரசாங்க காணிகளில் பெரும்பான்மையின மக்கள் அத்துமீறி சட்ட விரோதமாக குடியேற்றப்படுகின்றனர். இவ்வாறான குடியேற்றங்களை தடுத்து நிறுத்துவதோடு இவ்வாறு குடியேறியவர்களை வெளியேற்றுவதற்கு உடனடி நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுத் தலைவர் இரா. சம்பந்தன் பாராளுமன்றத்தில் உரையாற்றுகையில் கோரிக்கை விடுத்தார். நான் பெரும்பான்மை இனத்திற்கு எதிரானவன் அல்ல. எனினும், சட்டம் பெரும்பான்மை இன மக்களுக்கு பொருத்தமானதாக இல்லை. சட்டத்தை எவ்வாறும் பயன்படுத்தலாம் என்ற நிலையிலேயே அவர்கள் இருக்கின்றனர் என்றும் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில் எந்த மக்களுக்கும் தீங்கிழைக்கும் வகையில் நான் இந்த பிரேரணை கொண்டுவில்லை. பிரேரணையின் நோக்கம் அதுவல்ல. சட்டம் பேணப்படல் வேண்டும். சட்டத்தில் பாரபட்சமான அணுகுமுறை இல்லாதுவிடின் அது சகலருக்கும் பொதுவானதாக அமைய வேண்டும். காணி, பெறுமதியான பொருட்களுக்கு நடுநிலையில் நின்று நீதி வழங்கப்படல் வேண்டும். கிழக்கில் அரச காணிகளில் பெரும்பான்மையினத்தை சேர்ந்தவர்கள் சட்டவிரோதமாக குடியேறியுள்ளனர். இதனை அரசாங்கம் தடுக்க முயலவில்லை. நிறுத்தவும் முடியவில்லை. அவ்வாறவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

கிண்ணியா, மூதூர் பிரதான வீதியின் இரு பக்கங்களும் சுவீகரிக்கப்பட்டு அங்கு பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்தவர்கள் அரசாங்கத்தின் ஆதரவுடன் குடியேற்றப்படுகின்றனர்.
அவ்வாறான இடங்களுக்கு புதியவர்கள் வந்து செல்கின்றனர்.. குடிசைகள் நிர்மாணிக்கப்பட்டு வருகின்றன. சட்டவிரோத குடியேற்றம் நிகழ்ந்தால் காணியற்ற ஏழ்மையானவர்களுக்கு காணிகள் கிடைக்காமலே போய்விடும்.

சட்டவிரோதமான குடியேற்ற நடவடிக்கைகளுக்கு பின்னால் சில முக்கியஸ்தர்களும் இருக்கின்றனர். குடியேறியவர்கள் வெளி பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள். அவர்கள் யுத்த நடைபெற்ற இடங்களில் வாழாதவர்கள்.

அரசாங்கம் சட்டவிரோத குடியேற்ற நடவடிக்கைகளை தடுத்து நிறுத்துவதற்க நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். பொருளாதார பிராந்தியத்திற்கு ஒதுக்கப்பட்ட காணிகளுக்கு அமைச்சர்கள் தங்களது கையாட்களுக்கு ஒதுக்கி வைத்துள்ளனர். அவ்வாறு செய்ய முடியாது. முஸ்லிம்கள் காணிகளை அபகரித்திருந்தால் அரசாங்கம் அதற்கு அனுமதிக்குமா?

மாகாண சபையை புறக்கணித்தே அங்கு சட்டவிரோதமான குடியேற்றங்கள் முன்னெடுக்கப்படுகின்றனர். தமழ் மக்களுக்கென வழங்கப்பட்டுள்ள காணிகளில் சிங்கள குடும்பத்தினர் எவ்வாறு வாழ்வது? அங்கெல்லாம் தமிழர்கள் வேண்டுமென்றே வெளியேற்றப்படுகின்றனர். அதிகாரங்களை தரவும் மாட்டீர்கள். அதனை முறையாக செயற்படுத்தவும் மாட்டார்கள் என்பதனால் காணிகளுக்கு உரித்துடையவர்களிடம் அவற்றை மீண்டும் கொடுக்க வேண்டும்.

இராணுவத்தை கொண்டு தமிழ், முஸ்லிம் மக்களை அச்சுறுத்தி எதனை வேண்டுமானாலும் செய்வதற்கு முயற்சிக்கின்றீகள். நான் பெரும்பான்மை இனத்திற்கும், சமூகத்திற்கும் விரோதமானவன் அல்ல. எனினும் சட்டவிரோதமான நடவடிக்கைகள் தொடரக் கூடாது.

மொறவௌ முதலிக்குளம் பிரதேச செயலகப் பிரிவில் வேப்பங்குளம் மற்றும் முதலியார்குளம் ஆகிய கிராமங்களுக்கிடையில் பன்குளம் வரையில் திருகோணமலை ஹொரவபொத்தானை வீதியின் இரு மருங்கிலும், சேருவில பிரதேச செயலகப் பிரிவில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட சேருவில பொலனறுவை வீதியின் இரு மருங்கிலும், தம்பலகாமம் மற்றும் கந்தளாய் பிரதேச செயலகப் பிரிவுகளில் கிதுலுகு மாவட்ட எல்லை வரை திருகோணமலை ஹபரண வீதியில் பல பிரதேங்களில் , குச்சவெளி பிரதேச செயலகப் பிரிவில் இறக்கண்டி மற்றும் கும்புறுப்பிட்டி கிராமங்களில் கடற்றையை நோக்கி உள்ள பெறுமதிவாய்ந்த காணிகளில் குடியேற்றங்கள் நடைபெறுகின்றன.

சிறுபான்மைச் சமூகம் சட்டபூர்வமாக வாழ்ந்து வரும் காணிகளிலும் வீடுகளிலும் இருந்து அவர்களை வெளியேற்றுவதற்கு பெரும்பான்மைச் சமூகத்தினைச் சேர்ந்தவர்கள் பகீரதப் பிரயத்தனம் எடுத்து வருகின்றனர். சிறுபான்மைச் சமூகத்தினைச் சேர்ந்தவர்கள் அவ்வாறு வாழ்வதற்கு உரித்துடையவர்களாவார்கள். சில சந்தர்ப்பங்களில் அவ்வாறான வெளியேற்றல்கள் நிகழ்ந்துள்ளன. பெரும்பான்மைச் சமூகத்தினைச் சேர்ந்தவர்களின் இவ்வாறான முயற்சிகளுக்கு அரசாங்கத்தின் சில குறிப்பிட்ட பிரிவின் ஆதரவும் கிடைத்து வருகின்றது. சட்டவிரோதமான இந்த நடவடிக்கைகள் தடுத்து நிறுத்தப்பட்டு சிறுபான்மைச் சமூகத்தினருக்கு அவர்களுடைய வீடுகளிற்கும் காணிகளிற்குமான உரிமை மீள வழங்கப்படாவிட்டால் அது பாரதூரமான தீங்கினைச் சிறுபான்மைச் சமூகத்தினருக்கு ஏற்படுத்திவிடும். அத்துடன், சிறுபான்மையினர் தொடர்பில் சட்டத்தின் ஆட்சி செயலிழந்து போய்விடும். பின்வரும் இடங்களில் இவ்வாறான செயற்பாடுகள் இடம்பெற்று வருகின்றன.
திருகோணமலை நகரம் மற்றும் கிரேவெட் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட விளாங்குளம். குச்சிவெளி பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள இறக்கண்டி. தம்பலகாமம் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட பாலம்போட்டை மற்றும் பத்தினிபுரம்.சம்பூர் கிழக்கு , சம்பூர் மேற்கு, கூனித்தீவு, நவரத்னபுரம், சூடைக்குடா, கடற்ரைச்சேனை மற்றும் சம்பூர்க்களி கிராமசேவையாளர் பிரிவுகளைச் சேர்ந்த, வதிவிட வேளாண்மை மற்றும் தோட்ட நிலங்களுக்கு சட்டபூர்வமாக உரித்துடைய, இடம்பெயர்ந்த, 1486 சிறுபான்மைத் தமிழ் சமூகக் குடும்பத்தினர், அவர்களின் பிரதேசங்கள் அதியுயர் பாதுகாப்புப் பிரதேசம் எனப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள ஒரே காரணத்தினால் தமது வதிவிடங்களுக்கும் ஏனைய சொத்துக்களுக்கும் திரும்பி இயல்பு வாழ்க்கையைத் தொடங்குவதிலிருந்து தடுக்கப்பட்டுள்ளனர். இப்பிரதேசங்களில் பல பாடசாலைகளும், இந்துக்கோவில்களும் ஏனைய கட்டிடங்களும் இருந்தன. இப்பிரதேசத்திலிருந்த சகல கட்டிடங்களும் அழிக்கப்பட்டு விட்டன. தமக்குச் சொந்தமான இந்தக் காணிகளில் இக் குடும்பங்கள் பல தலைமுறைகளாக வாழ்ந்து அவற்றைப் பயன்படுத்தி வந்துள்ளன. நாட்டின் ஏனைய பகுதிகளில் உயர் பாதுகாப்பு வலயங்களுள் சிவிலியன்கள் வாழ்கின்றனர்.
அடிப்படை உரிமை மீறல்
அவர்களுக்குச் சொந்தமானவையும் இடம்பெயரும் வரை இவர்கள் வாழ்ந்து வந்தவையுமான காணிகளில் மீண்டும் குடியேறுவதற்கான உரிமை மறுக்கப்படுவது இம்மக்களின் அடிப்படை உரிமைகளின் மீறலாகும். இம்மக்கள் முன்போல் தமது வழமையான வாழ்க்கையை நடத்தக்கூடியதாக அவர்களுக்கு அவர்களுடைய வதிவிட மற்றும் ஏனைய சொத்துக்களின் உரிமை மீள வழங்கப்பட வேண்டும். அக் குடும்பங்கள் மீளக் குடியேறியதும் அரசாங்கம் விதிக்கும் நிபந்தனைகளுக்கு இயைந்தொழுகுவார்கள்.
உடனடி நடவடிக்கை தேவை
எனவே அரச காணிகளில் சட்டவிரோத குடியேற்றங்கள் அனைத்தையும் தடுத்து நிறுத்துவதற்கும் இப்பிரேரணையில் குறிப்பிடப்பட்ட அரச காணிகளில் சட்ட விரோதமாக குடியேறியிருப்பவர்கள் அனைவரையும் அங்கிருந்து வெளியேற்றுவதற்கும் அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும்,

சட்டபூர்வமாக உரிமை கொண்டிருக்கும் ஆட்களின் காணிகள் மற்றும் வீடுகளின் சட்டபூர்வ உரிமையைப் பாதுகாப்பதற்கும் அத்தகைய உடமைகளின் மீது சட்டவிரோதமான முறையில் தலையீடு செய்வதற்கு முயலுபவர்களுக்கெதிராக உரிய நடவடிக்கை எடுப்பதற்கும் அத்தகைய காணிகள்ஃ வீடுகளில் சட்டவிரோதமாக குடியேறியிருப்பவர்களை அங்கிருந்து அகற்றுவதற்கும் அவ்வீடுகளுக்கும் காணிகளுக்கும் சட்டபூர்வமாக உரிமை பூண்டிருக்கும் ஆட்களுக்கு அக்காணிகளை மீள வழங்குவதற்கும்,

சம்பூர் கிழக்கு, சம்பூர் மேற்கு, கூணித்தீவு, சூடைக்குடா, நவரத்தினபுரம், கடற்கரைச்சேனை, சம்பூர் கனி ஆகிய கிராமங்களின் 1486 குடும்பங்கள் தாம் எங்கிருந்து இடம்பெயர்ந்தார்களோ “ந்த வதிவிட வயல் மற்றும் தோட்டக் காணிகளுக்கு திரும்பிச் சென்று வழமையான வாழ்க்கையை மீண்டும் தொடங்குவதற்கு அனுமதிக்கும் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும் வலியுறுத்தப்படுகின்றது
நன்றி- வீரகேசரி

No comments:

Post a Comment