23 October 2009

இடம்பெயர்ந்த மக்கள் மீளக்குடியமர்த்தப்படுவதை வரவேற்கின்றோம்- த.சித்தார்த்தன்

மன்னார் மாவட்டம் மாந்தைப் பிரதேசத்தில் மீள்குடியேற்ற நடவடிக்கைகள் ஆரம்பமாகியுள்ளன. முதற்கட்டமாக அங்கு 1300பேர் குடியேற்றப்பட்டனர். ஓரிரு தினங்களுக்குள் 12ஆயிரம் குடும்பங்களைச் சேர்ந்த 41,685 மக்கள் மன்னார், கிளிநொச்சி, முல்லைத்தீவு உள்ளிட்ட பகுதிகளிலும் மீள்குடியேற்றப்படுகின்றனர். இதற்கான ஆரம்ப நிகழ்வு வடக்கின் வசந்தம் திட்டத்தின் பணிப்பாளரும், ஜனாதிபதியின் ஆலோசகருமான பாராளுமன்ற உறுப்பினர் பசில் ராஜபக்ச தலைமையில் மாந்தையில் நடைபெற்றது. இதில் மீள்குடியேற்ற அமைச்சர் ரிசாத், அமைச்சர் ஆறுமுகம் தொண்டமான், பிரதியமைச்சர் ஜெகதீஸ்வரன், புளொட் தலைவர் த.சித்தார்த்தன், தமிழ்க்கூட்டமைப்பு எம்.பி சி.கிஷோர், முன்னைநாள் ரி.யூ.எல்.எவ் எம்.பி சூசைதாசன், இராணுவத்தளபதி லெப்.ஜெனரல் ஜகத் ஜயசூரிய, சிரேஸ்ட பொலீஸ் அத்தியட்சகர் ஜெகத் பாலசூரிய உள்ளிட்டவர்களும், அரசாங்க உயரதிகாரிகளும் கலந்து கொண்டிருந்தனர்.மீள்குடியேற்ற ஆரம்ப நிகழ்வில் புளொட் தலைவர் திரு.த.சித்தார்த்தன். இம்மக்களை மீளக்குடியேற்ற வேண்டும் என்பதை பல காலமாக நாம் வலியுறுத்தி வந்தோம். தற்போது இம் மீள்குடியேற்றம் ஆரம்பிக்கப்பட்டிருப்பதானது எங்களுக்கும் எமது மக்களுக்கும் மிகவும் சந்தோசமான ஒரு விடயமாகும். இந்த மக்கள் நீண்ட காலமாக தொடர்ந்து இடம்பெயர்ந்து கொண்டே இருந்த நிலையில் இறுதியாக இடம்பெயர்ந்த இம்மக்கள் மெனிக்பாம் முகாமைச் சென்றடைந்தனர்.இவ்வாறு வந்துசேர்ந்த மக்கள் எப்போது மீள்குடியேற்றப்படுவார்கள் என பலரும் கேள்விக்குறிகளை எழுப்பிக் கொண்டே இருந்தனர். இந்நிலையில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அவர்கள், இந்தக் குடியேற்றங்களை சிறப்பாக ஆரம்பித்திருப்பதை நாம் வரவேற்கிறோம். இம்மக்களை மீண்டும் அமைதியாக தங்களுடைய சொந்தக் கால்களில் வாழவைப்பதற்கு நாங்களும் எமது முழுமையான முயற்சிகளை எடுப்போம் என்று தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment