30 October 2009

ஐ.நா. சான்றுக்குப் பிறகே தமிழர்கள் மறுகுடியமர்வு

கண்ணிவெடிகளை அகற்றுவது, மனிதநேய அடிப்படையிலான உதவிகளைச் செய்வது குறித்து ஐ.நா. அமைப்பு சான்றிதழ் அளித்த பிறகே இலங்கை முகாம்களில் உள்ள 1.86 லட்சம் தமிழர்கள் மறுகுடியமர்த்தப்படுவார்கள் என்று இலங்கை அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் தெரிவித்தார். அதே சமயம், கண்ணிவெடிகளை அகற்றுவதுதான் அங்கேயுள்ள பிரச்னை எனவும் அவர் கூறினார்.


இலங்கையில் இளைய சமுதாயத்துக்கு அதிகாரமளித்தல் மற்றும் சமூகப் பொருளாதார மேம்பாட்டுத்துறை அமைச்சரான ஆறுமுகன் தொண்டமான், முதல்வர் கருணாநிதியை அவரது இல்லத்தில் வியாழக்கிழமை மாலை சந்தித்துப் பேசினார். அரை மணி நேரத்துக்கும் மேலாக இந்தச் சந்திப்பு நடைபெற்றது. இதைத் தொடர்ந்து, ஆறுமுகன் தொண்டமான் அளித்த பேட்டி:
இலங்கை முகாம்களில் 3 லட்சம் தமிழர்கள் இருப்பதாகக் கூறுகிறார்கள். ஆனால், 1.86 லட்சம் தமிழர்களே உள்ளனர். தமிழகத்தில் இருந்து எம்.பி.க்கள் குழு வருவதற்கு முன்பே, 24 ஆயிரம் இலங்கைத் தமிழர்கள் அவர்களது இருப்பிடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.


தமிழக எம்.பி.க்கள் குழு வந்து சென்ற பிறகு, இதுவரை 57 ஆயிரம் தமிழர்கள் அவர்களின் வாழ்விடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். எம்.பி.க்கள் குழுவின் வருகைக்குப் பிறகு இலங்கைத் தமிழர்களை வாழ்விடங்களுக்கு அனுப்பும் பணி இருமடங்காக அதிகரித்துள்ளது.
சான்றிதழ் அளித்த பிறகே... இலங்கை அதிபர் ராஜபட்ச கொடுத்த வாழ்த்துச் செய்தியையும், அங்கு நடைபெற்று வரும் புனரமைப்புப் பணிகள் குறித்தும் முதல்வர் கருணாநிதியிடம் விளக்கினேன்.


இலங்கையில் தமிழர்கள் வாழும் பகுதிகளில் புதைத்து வைக்கப்பட்டுள்ள கண்ணிவெடிகளை அகற்றும் பணியில் இந்தியக் குழு ஈடுபட்டு வருகிறது. மேலும் ஒரு குழுவை அனுப்புவதாக இந்திய அரசு கூறியுள்ளது.


இலங்கைத் தமிழர்களை அவர்களின் வாழ்விடங்களுக்கு அனுப்ப, ஐ.நா.விடம் இருந்து சான்றிதழ் பெறுவது அவசியம். "தமிழர்களின் வாழ்விடங்களில் கண்ணிவெடிகள் ஏதுமில்லை என்றும், அவர்களுக்கு அடிப்படை வசதிகள், வருமானத்துக்கான வழி போன்றவை ஏற்படுத்தித் தரப்பட்டுள்ளன' எனவும் அகதிகள் நலவாழ்வுக்கான ஐ.நா. அமைப்பின் அதிகாரியிடம் இருந்து சான்றிதழ் பெற வேண்டும்.


இப்போது, 1.86 லட்சம் தமிழர்களின் வாழ்விடங்களில் கண்ணிவெடிகளை அகற்றுவதுதான் பிரச்னையாக உள்ளது. குடியமர்த்தப்பட்ட பிறகு, அவர்கள் தொழில் செய்யவோ, விவசாயம் செய்யவோ உதவி செய்கிறோம்.


இலங்கையில் நிவாரணப் பணிகளை மேற்கொள்ள மேலும் ரூ. 500 கோடி தருவதாக இந்திய அரசு கூறியுள்ளது. இதற்கான திட்டத்தை இலங்கை அரசின் சார்பில் கொடுக்க இருக்கிறோம். எந்தெந்த திட்டங்களுக்கு இந்தப் பணத்தை செலவிடுவது என்பது குறித்து விவாதிக்க இலங்கை அதிகாரிகள் குழு இந்தியா வர உள்ளது'' என்றார் ஆறுமுகன் தொண்டமான்.


ஆதாரம்- தினமணி

No comments:

Post a Comment