28 November 2009


தமிழ் மக்கள் மத்தியில் ஜனநாயக விரோதப் போக்குகளுக்கு ஜனாதிபதியின் தலைமையே முடிவு கண்டது

இன்றைய சூழ்நிலையில் தமிழ் மக்கள் அரசியலிலும் சமூக பொருளாதார அபிவிருத்தி நடவடிக்கைகளிலும், ஜனநாயகத்திற்கான ஒரு முக்கியமான அடி வைப்பாக அமைந்துள்ளதை நேர்மையாக சிந்திப்பவர்கள் எவரும் மறுத்துவிட முடியாதென பத்மநாபா ஈ. பி. ஆர். எல். எப். கட்சியின் பொதுச் செயலாளர் தி. ஸ்ரீதரன் தினகரனுக்குத் தெரிவித்தார்.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான எமது நிலைப்பாடு மிகவும் தெளிவானது. தென்னாசியாவில் இலங்கை ஒரு ஜனநாயக நாடு என்ற பாரம்பரியம் பாதுகாக்கப்பட வேண்டும். அது மேலும் செழுமைப்படுத்தப்பட வேண்டும்.

முப்பது ஆண்டுகளாக தமிழ்ச் சமூகத்தையும் இந்த நாட்டையும் ஆட்டிப்படைத்த பாசிச வன்முறை கலாசாரம் தற்போதைய ஜனாதிபதியின் தலைமையில்தான் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டது.

இது தமிழ் மக்களின் அரசியலிலும் சமூக பொருளாதார அபிவிருத்தி நடவடிக்கைகளிலும், ஜனநாயகத்திற்கான ஒரு முக்கியமான அடி வைப்பாக அமைந்துள்ளது என்பதை நேர்மையாக சிந்திப்பவர்கள் எவரும் மறுத்துவிட முடியாது. தற்போது மெதுவாகவேனும் ஜனநாயக நிறுவனங்களை கட்டியமைக்கும் சந்தர்ப்பம் வாய்த்துள்ளது.

யுத்தத்தின் தொடர்ச்சியாக முகாம்களில் முடக்கப்பட்ட மக்கள் தற்போது படிப்படியாக தமது சொந்த ஊர்களுக்கு அனுப்பப்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள்.

அவர்கள் முற்றுமுழுதாக விடுவிக்கப்பட்டு சொந்த ஊர்களில் கௌரவமாகவும், சுயமரியாதையாகவும் பாதுகாப்பாகவும் வாழ்வதற்கும் தமது பொருளாதார சமூக வாழ்வை மேம்படுத்திக் கொள்வதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும்.

மேலும் அதிகாரப் பகிர்வின் ஒரு அங்கமாக 13வது திருத்தச் சட்டத்தினை முழுமையாக அமுலாக்குவதற்கான கோரிக்கைகள் வலுத்துள்ளன.

மேலும் ஜனாதிபதி அவர்களால் அமைக்கப்பட்ட அனைத்துக் கட்சி பிரதிநிதிகள் குழு அதிகாரப் பகிர்வு தொடர்பாக பல கூட்டங்களை நடத்தி குறிப்பிடத்தகுந்த சில விடயங்களில் ஒரு ஆவணத்தை உருவாக்கியுள்ளது.

13வது திருத்தச் சட்டமூலம் அனைத்துக் கட்சி பிரதிநிதிகள் குழுவின் ஆலோசனைகளையும் உள்ளடக்கியதாக ஒரு பூரணத்துவமான அதிகாரப் பகிர்வு கட்டமைப்பு ஏற்படுத்தப்பட வேண்டும்.

இந்த நாட்டின் தமிழ், முஸ்லிம் மலையக மக்கள் தாம் இந்த நாட்டின் அரச முறைமையின் தாக்கமான பங்காளர்கள் என்று உணரும் வகையில் அதிகாரப் பகிர்வு நடைமுறை சாத்தியமாக்கப்பட வேண்டும்.

இலங்கையின் சிங்கள, தமிழ் பேசும் சமூகங்களிடையே உறவுகள் வலுப்படும் விதத்தில், தங்குதடையின்றி நாட்டின் எப்பகுதி மக்களும் நாட்டின் அனைத்துப் பகுதிகளுக்கும் சென்றுவரும் அதேவேளையில் சமூக பொருளாதார அபிவிருத்தி நடவடிக்கைகளில் ஈடுபடவும், ஆன்மீக கலாசார விடயங்களில் கலந்துகொள்ளவும் வாய்ப்புகள் திறந்துவிடப்பட வேண்டும்.

சாதாரண மக்களின் தேவைகளையும் அபிலாசைகளையும் முன்னிறுத்தி செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட வேண்டும். மொத்தத்தில் நாட்டின் ஜனநாயக அடித்தளமும், பன்முகத் தன்மையும், ஐக்கியமும் பாதுகாக்கப்பட வேண்டும்.

இதற்கான நம்பிக்கைகள் இப்போது வெளிப்படுத்தப்படுகின்றன. எனவே மக்கள்சார் செயற்பாடுகள் இடையூறு இன்றி தொடர வேண்டும். படைசார் ஆட்சியொன்று ஏற்பட்டு நாடு சர்வாதிகார வழிக்குச் செல்வதை அனுமதிக்க முடியாது.

இந்த நாட்டு மக்களினதும் இந்தப் பிராந்தியத்தினதும் நலன்களை நாம் மனதிலிருத்தியாக வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.


பி. வீரசிங்கம்... -

தினகரன் வாரமஞ்சரி

No comments:

Post a Comment