10 December 2009

ஜனவரி 10 இற்குள் தமிழர் மறு குடியமர்வு

இலங்கையில் தற்போது நிவாரண முகாம்களில் தங்கியுள்ள தமிழர்கள் அனைவரும் அடுத்த மாதம் 10-ம் தேதிக்குள் அவர்களது சொந்த வாழ்விடங்களில் மீண்டும் குடியமர்த்தப்படுவர் என, தில்லிக்கு வந்துள்ள அந்த நாட்டின் தூதுக் குழுவினர் தெரிவித்தனர்.

மேலும், இலங்கையில் அதிபர் தேர்தல் முடிந்தவுடன், தமிழர்கள் பிரச்னைக்கு அரசியல் தீர்வு காண்பதற்கான முயற்சிகளும் உடனடியாக மேற்கொள்ளப்படும் என அவர்கள் தெரிவித்தனர்.

இலங்கை அதிபரின் மூத்த ஆலோசகர் பசில் ராஜபட்ச, ஜனாதிபதி செயலர் லலித் வீரதுங்க, பாதுகாப்புத் துறை செயலர் கோத்தபய ராஜபட்ச ஆகியோர் அடங்கிய தூதுக் குழுவினர் தில்லியில் வியாழக்கிழமை மத்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணாவை சந்தித்துப் பேசினர்.

இலங்கையில் நிவாரண முகாம்களில் தங்கியுள்ள தமிழர்களை அவர்களது சொந்த வாழ்விடங்களில் மீண்டும் குடியமர்த்துவது குறித்து இந்தக் குழுவினருடன் கிருஷ்ணா விரிவாகப் பேச்சுவார்த்தை நடத்தினார்.

இந்தச் சந்திப்புக்குப் பிறகு, பாசில் ராஜபட்ச செய்தியாளர்களிடம் கூறியது:

இந்தப் பேச்சுவார்த்தை மிகவும் சுமுகமாகவும், நன்றாகவும் இருந்தது.

இலங்கையின் வடக்குப் பகுதியில் முகாம்களில் தங்கியுள்ள அனைத்து தமிழர்களுக்கும் எல்லாவிதமான ஜனநாயக உரிமைகளும் உள்ளன. வருகிற இலங்கை அதிபர் தேர்தலில் அவர்கள் வாக்களிப்பதற்கு உரிமை உண்டு.

தமிழர்கள் பிரச்னைக்கு அரசியல் தீர்வு காண இலங்கை அரசு உறுதிபூண்டுள்ளது. அதிபர் தேர்தல் முடிந்தவுடன், இந்த பிரச்னைக்கு அரசியல் தீர்வு காண்பதற்கான முயற்சிகள் உடனே மேற்கொள்ளப்படும்.

தமிழர்கள் பிரச்னைக்கு அரசியல் தீர்வு காண்பதற்காக, இலங்கை அரசியல் சட்டத்தில் தேவையான அனைத்து திருத்தங்களும் மேற்கொள்ளப்படும்.

இந்தியாவின் நலன்களையும், பாதுகாப்பையும் உறுதிப்படுத்துவதில் இந்திய அரசுடன் இலங்கை ஒருங்கிணைந்து செயல்படும். அதேநேரத்தில், இந்தப் பேச்சுவார்த்தையின் போது, இந்தியாவின் பாதுகாப்பு தொடர்பான பிரச்னை எதுவும் விவாதிக்கப்படவில்லை.

இந்திய மீனவர்கள் பிரச்னையை பொருத்தவரையில், இரு நாட்டு மீனவர்களிடமும் தத்தமது கடல் எல்லையைத் தாண்டி மீன் பிடிக்கும் போக்கு உள்ளது. கடல் எல்லை எது என்பது மீனவர்களுக்கு தெரியாததுதான் இந்த பிரச்னைக்கு காரணம்.

இந்த பிரச்னையை சட்டரீதியாக அணுகுவதைவிட, மனிதநேய அடிப்படையில் அணுகுவதுதான் சரியாக இருக்கும். மத்திய வெளியுறவு அமைச்சர் கிருஷ்ணாவுடனான பேச்சுவார்த்தையின் போது கச்சத்தீவு பிரச்னை பற்றி எதுவும் விவாதிக்கப்படவில்லை.

இலங்கையில் இடம் பெயர்ந்த தமிழர்களை அவர்களது சொந்த வாழ்விடங்களில் மீண்டும் குடியமர்த்துவதற்கு இந்தியா அளித்து வரும் உதவியைப் பாராட்டுகிறேன் என்றார் பசில் ராஜபட்ச.

நன்றி- தினமணி

No comments:

Post a Comment