10 December 2009

நாடகம் முடிவதற்குள் வேஷத்தைக் கலைக்கிறார்கள்!


அரசியல்வாதிகள் அடுக்கடுக்காக பொய்பேசுவது என்பது பிரபஞ்சம் தழுவிய ஒரு நடைமுறையாகும். தற்பொழுது இலங்கையில் ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ளதால், இலங்கை மக்களும் அரசியல்வாதிகளின் பொய்யுரைகளையும், போலித்தனமான வாக்குறுதிகளையும் தாராளமாகக் கேட்கலாம். உள்ளத்தில் ஒன்றை வைத்துக்கொண்டு, வெளியே வேறு ஒன்றைப் பேசுவதில் இந்த அரசியல்வாதிகள் அசகாய சூரர்கள். இருந்தாலும் சில வேளைகளில் தம்மையும் மீறி, தமது உள்ளத்தில் உள்ள கள்ளங்களை வெளிப்படுத்தியும் விடுவார்கள் அல்லது செய்கையில் காட்டிவிடுவார்கள். அதற்கு உதாரணமாக அண்மையில் நடந்த சில சம்பவங்களைக் கூறலாம்.

மனோகணேசனும் ஜனநாயகமும்

ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் என தன்னைத்தானே அழைத்துக்கொள்ளும் ஐக்கிய தேசியக்கட்சியின் கொழும்பு மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன், அண்மையில் ஊடக சந்திப்பு ஒன்றில் பேசும்போது, வடக்கு கிழக்கு தமிழ் மக்களின் வாக்குகளை (நாட்டின் ஏனைய பகுதி தமிழ் வாக்களர்களை தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார் போலும்!), தமிழ் தேசியக்கூட்டமைப்பு, எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளர் சரத் பொன்சேகாவுக்கு பெற்றுத்தரவேண்டுமென வேண்டுகோள் விடுத்ததுடன், தமிழ் மக்களை ‘மனச்சாட்சிப்படி வாக்களிக்க’ விட்டுவிடக்கூடாது எனவும் எச்சரித்துள்ளார்.
எப்படி இருக்கிறது, மனித உரிமைகள், ஊடக சுதந்திரம், ஜனநாயகம் என தொண்டை கிழியப்பேசி, அவற்றுக்காக கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்துக்கு முன்னால் அடிக்கடி ஆர்ப்பாட்டம் நடாத்தி வரும் ஒருவரான மனோ கணேசன், தமிழ் மக்களின் சொந்த சுதந்திர உரிமையை மதிக்கும் முறை! அவரது கூற்றுப்படி, தமிழ் மக்களை, அவர்கள் சுயமாகச் சிந்தித்து வாக்களிக்க, தமிழ் தேசியக்கூட்டமைப்பு அனுமதிக்கக்கூடாது! அவர்களது வாக்குகளை (கடந்த பொதுத்தேர்தலில் திருடியது போல) கள்ளத்தனமாகத் திருடியாவது, சரத் பொன்சேகாவுக்கு தமிழ் தேசியக்கூட்டமைப்பு வழங்க வேண்டும் என்பதாகும்!
இப்ப தெரிகிறதல்லவா, மனோ கணேசன், ரவூப் ஹக்கீம் போன்றோர், இராணுவ சர்வாதிகாரியாக மாறக்கூடிய சரத் பொன்சேகாவை, ஜனாதிபதி தேர்தலில் ஏன் ஆதரிக்கிறார்கள் என்று?
சரத் பொன்சேகா நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை ஒழிக்கப்போகும் இலட்சணம்!
ஐக்கிய தேசியக்கட்யினதும், ஜே.வி.பியும் நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதி முறைமையை ஒழிக்கவே சரத் பொன்சேகாவை ஜனாதிபதி தேர்தலில் ஆதரிப்பதாக அடிக்கடி பிரகடனம் செய்து வருகின்றன. அதையே மங்கள சமரவீர, ரவூப் ஹக்கீம், மனோ கணேசன் போன்ற வகையறாக்களும் கிளிப்பிள்ளை போலத் திருப்பிக் கூறுகின்றன. 1978ல் ஜே.ஆர்.ஜெயவர்த்தன புதிய அரசியல் சாசனத்தின் மூலம் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையைக் கொண்டுவந்தபோது, இடதுசாரிக் கட்சிகளும், மனித உரிமை அமைப்புகளும் மட்டுமே அதை எதிர்த்தன. இப்பொழுது எதிர்ப்பவர்கள் அப்பொழுது அதைத் தீவிரமாக ஆதரித்துக் கொண்டிருந்தவர்கள்தான். இதில் வேடிக்கை என்னவென்றால், மாமனார் ஜே.ஆர்.ஜெவர்த்தனா இந்த முறைமையைக் கொண்டுவந்த போது, அவரது அமைச்சரவையில் ஒரு அமைச்சராக இருந்து அதை ஆதரித்த ரணில் விக்கிரமசிங்க, இப்பொழுது அதை தீவிரமாக எதிர்ப்பதுதான்!
இதில் இன்னொரு வேடிக்கை என்னவென்றால், தமிழ் தேசியக்கூட்டமைப்பு தலைவர்கள் ஒரு இடைக்காலத்தில், ‘பெரும்பான்மையான சிங்கள மக்கள், தமிழ் மக்களுக்கு உரிமை வழங்க அனுமதிக்கமாட்டார்கள். எனவே நிறைவேற்று அதிகாரமுறை இருந்தால் தான், ஜனாதிபதியாக வருபவர் தனது அதிகாரத்தை பாவித்து என்றாலும் தமிழ் மக்களுக்கு ஏதாவது செய்ய முடியும்’ என உத்தியோகப்பற்றற்ற முறையில் கூறி வந்திருக்கின்றனர். ஆனால் அண்மையில் கொழும்பில் கருத்தரங்கு ஒன்றில் ரவூப் ஹக்கீமுடன் சேர்ந்து பங்குபற்றிய தமிழ் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், றிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதி முறை கேடானது என்றும், அதை ஒழித்துக்கட்ட வேண்டும் என்றும் ‘அறைகூவல்’ விட்டார். (சரத் பொன்சேகாவை ஆதரிப்பதற்கு ஏதாவது சாக்குப்போக்கு வேண்டுமே?)
நிறைவேற்று அதிகாரமுறையை ஒழிக்க வேண்டும் என்ற நிபந்தனையை ஐக்கிய தேசியக்கட்சியும், ஜே.வி.பியும் விதித்தபோது, ‘அப்படியானால் நான் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதில் என்ன பிரயோசனம்?’ என எதிர்க்கேள்வி எழுப்பிய பொன்சேகா, பின்னர் ‘சரி சரி, நான் அதற்கு ஒத்துக் கொள்கிறேன்’ என ஐக்கிய தேசியக்கட்யினதும், ஜே.வி.பியினதும் வாயை அடைத்துவிட்டார். (கூடவே ரணில் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட போட்டிருந்த திட்டத்திலும் மண்ணை அள்ளிப் போட்டுவிட்டார்) எனவே தான் நிறைவேற்று ஜனாதிபதி முறையை ஒழிக்கவே இராணுவவாதி பொன்சேகாவை தாம் ஆதரிப்பதாக எதிர்க்கட்சிகள் அமர்க்களம் செய்து வந்தன. ஆனால் தான் சொன்ன பொய்யை பொறுமையாக காக்க முடியாத பொன்சேகா இப்பொழுது உண்மையைப் போட்டு உடைத்துவிட்டார்!
அண்மையில் கொழும்பில் ஜே.வி.பியின் உள்ளுராட்சி சபை உறுப்பினர்களுடன் நடாத்திய உரையாடல் ஒன்றின்போது சரத் பொன்சேகா, தான் ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்றால் சம்பிரதாயபூர்வமான ஜனாதிபதியாக இருக்க விரும்பவில்லை எனக் கூறியுள்ளார். சம்பிரதாயபூர்வ ஜனாதிபதிக்கு உதாரணம் காட்டும் போது, வில்லியம் கோபல்லவ பற்றியும் அவர் பிரஸ்தாபித்துள்ளார். முன்னாள் பிரதமர் சிறீமாவோ பண்டாரநாயக்காவின் மாமனாரான வில்லியம் கோபல்லவ, இலங்கையை கைப்பற்றி அரசாண்ட பிரித்தானியர் தமது காலனித்துவ ஆட்சியின் பிரதிநிதியாக இலங்கையில் உருவாக்கிய கவர்னர் ஜெனரல் (மகாதேசாதிபதி) பதவியை சுதந்திர இலங்கையில் நீண்டகாலம் வகித்தவர். இலங்கையை சிறீமாவோ அரசு 1972ல் குடியரசு ஆக்கிய பின்னர், அந்த ஆட்சியால் சம்பிரதாயபூர்வ ஜனாதிபதியாக நியமிக்கப்பட்டவர். அந்த பதவி ஜே.ஆர்.ஜெயவர்த்தனா கொண்டுவந்த 1978ம் ஆண்டு அரசியல் சாசனத்தின் பின்னர் நிறைவேற்று அதிகாரம் உள்ளதாக மாறியது. அப்பதவிக்கு போட்டியிட்டு தோல்விகண்ட தற்போதைய ஐக்கிய தேசியக்கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்க, தனக்கு அப்பதவி ஒருபோதும் எட்டாது என்று கண்டபின்னர், “சீ..சீஸஇந்தப்பழம் புளிக்கும்” என்ற கணக்காக, இப்பொழுது அப்பதவியை ஒழிக்க வேண்டும் என கோரி வருகிறார்.
அவரது கோரிக்கைப்படி, தான் ஜனாதிபதியானால் நிறைவேற்று அதிகாரமுறையை ஒழித்து, ரணிலை காபந்து அரசின் பிரதமராக்கி அவரிடம் அதிகாரம் முழுவதையும் ஒப்படைப்பதாக முதலில் தெரிவித்த சரத் பொன்சேகா, இப்பொழுது தான் நிறைவேற்று அதிகாரத்தை வைத்திருக்கப் போவதாக கூறியிருப்பது ரணிலையும், ஜே.வி.பியினரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியிருப்பதாகத் தெரிகிறது.
எது எப்படியிருப்பினும் விஷயத்தை முதலிலேயே போட்டு உடைத்துவிட்ட பொன்சேகாவுக்கு ஒரு சபாஷ் போடத்தான் வேண்டும்!
ஐக்கிய தேசியக்கட்சி காப்பாற்றும் ஊடக சுதந்திரம்!
ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் ஆட்சியில் முன்னொருபோதும் இல்லாத வகையில் ஊடக சுதந்திரம் நசுக்கப்படுவதாகவும், ஊடகவியலாளர்களின் உயிருக்கு ஆபத்து நிலவுவதாகவும் அல்லும் பகலும் ஐ.தே.க பிராச்சாரம் செய்து வருகிறது. இதே ஐக்கிய தேசியக்கட்சியின் 17 வருட (1977 – 1994) ஆட்சியில் றிச்சாட் சொய்சா போன்ற புகழ்பெற்ற ஊடகவியலாளாகள் எவ்வாறு கொலை செய்யப்பட்டு கடலில் வீசப்பட்டார்கள் என்பதையும், ஊடகத்துறை என்ன பாடுபட்டதென்றும் மக்கள் அறிவார்கள். அதை மக்கள் மறந்து போகாமல் இருப்பதற்கு ஐக்கிய தேசியக்கட்சி குண்டர்கள் சமீபத்தில் நாடகம் ஒன்றை அரங்கேற்றி இருக்கின்றனர்.
அதாவது அண்மையில் ஐக்கிய தேசியக்கட்சி நடாத்திய அதன் வருடாந்த மாநாட்டில் செய்தி சேகரிக்கச் சென்ற அரச ஊடகங்களான ரூபவாகினி தொலைக்காட்சி, சுயாதீன தொலைக்காட்சி, இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம், லேக்ஹவுஸ் பத்திரிகை நிறுவனம் என்பனவற்றின் ஊடகவியலாளர்களை ஐக்கிய தேசியக்கட்சி குண்டர்கள் கடுமையாகத் தாக்கி காயம் விளைவித்ததுடன், அவர்களது ஒலி, ஒளி கருவிகளுக்கும், அவர்கள் சென்ற வாகனங்களுக்கும் பெரும் சேதத்தையும் ஏற்படுத்தியுள்ளனர். இதுதான் ஐக்கிய தேசியக்கட்சி ஊடகவியலாளர்களை நடாத்துகின்ற முறை. ஐ.தே.கவின் பரிபாi~யில் ஊடக சுதந்திரம் என்பது, ‘ஊருக்கேயொழிய, உனக்கல்ல’ என்பதுதான் நடைமுறையென்பதற்கு இதைத்தவிர வேறு உதாரணம் தேவையில்லை.
ஜே.வி.பியின் ‘ஊடக முன்னுதாரணம்’
ஐக்கிய தேசியக்கட்சி ஊடகவியலாளர்களை அழைத்துவிட்டு அடிபோடுகிறது என்றால், ஜே.வி.பி அழைக்காமலே அடிபோடுகிறது! ஆம். அரசாங்கத்தால் நிர்வகிக்கப்படும் ஊடகங்களைச் சேர்ந்தோர் ஜே.வி.பியின் கூட்டங்கள், நிகழ்ச்சிகளில் செய்தி சேகரிப்பதற்கு அக்கட்சி தடை விதித்துள்ளது. எப்படியிருக்கிறது இலங்கையின் தொழிலாளி வர்க்கத்தையும், உழைக்கும் மக்களையும் காப்பாற்றப் புறப்பட்டிருக்கும் இந்த ‘மார்க்சிய புரட்சியாளர்களின்;’ ஜனநாயக நெறிமுறைகள்.
நிமிடத்துக்கு நிமிடம், வார்த்தைக்கு வார்த்தை ஜனநாயகம், மனித உரிமை, ஊடக சுதந்திரம் என்று பேசிக்கொண்டு, நடைமுறையில் அவற்றுக்கு சவக்குழி தோண்டும் ஐ.தே.கவினர், ஜே.வி.பி, மனோ கணேசன் போன்றோரைப் பார்க்கையில், “சுதந்திரமா? அது கிலோ என்ன விலை?” எனக் கேட்ட புலிகளின் தலைவர் பல மடங்கு மேல் என்றுதான் சொல்லத் தோன்றுகிறது!

சூரியதீபன்


நன்றி – தேனீ இணையம்













No comments:

Post a Comment