10 December 2009

மதில்மேல் 22 நரிகள்!

- சதா. ஜீ

‘ஆடு நனைகிறதென்று ஓணான் அழுத’ கணக்காய் ஜனாதிபதித் தேர்தலில் குதித்திருக்கும் முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா நடந்துகொள்ள ‘ஓணான் அழுகிறதென்று ஆடு பக்கத்தில போன’ கணக்காய் நடந்துகொள்கிறது கூத்தமைப்பு.

முற்றும் துறந்த முனிவர்களாக - பற்றற்றவர்களாக அரசியல் தலைவர்கள் இருந்துகாட்ட வேண்டும். துரதிஸ்டம் பிடித்த பெரும்பகுதி மக்களுக்கு அப்படியான தலைவர்கள் கிடைப்பதில்லை. அதுவும் தமிழ் மக்களின் தலைவர்கள் தாம்தான் என்று சொல்லிக்கொள்பவர்களுக்கு சகலவிதமான பற்றுக்களும் மிக அதிகமாக இருக்கிறது. மண், பொன், பெண் ஆகியவற்றுடன் ‘மொழிப்பற்று?’, ‘இனப்பற்று?’ என்பனவும் அதிகமாகவே காணப்படுகிறது.

இதில் வேடிக்கையென்னவெனில் இதற்குப் பலிகடா மக்களே! மேலே குறிப்பிட்ட முதல் மூன்று பற்றுக்களுக்கு ஒரு மனிதன் ஆட்படுவது இயல்பானது. ஆதனை அவன் தனது திறனாலும் உழைப்பாலும் மட்டுமே அனுபவித்துக்கொள்ள வேண்டும். அறிவுசார் சமூகத்தின் தலைவர்கள் இன, மொழிப்பற்றுக்களை முன்னிறுத்தி அரசியல் செய்வதில்லை. ஆனால் தமிழ் தலைவர்வகளுக்கு இதைவிட்டால் வேறு வழியில்லை.

இலங்கை காலனித்துவ ஆட்சியிலிருந்து விடுபட்டதன் பின்னர் வடகிழக்கில் தோன்றிய மிதவாதத் தலைவர்கள் எவருமே குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய அபிவிருத்தியையோ மக்களின் உரிமையையோ பெற்றுக்கொள்ள முயற்சித்ததில்லை. நடைபெற்ற அபிவிருத்திகளும் வடகிழக்கு மக்கள் பெற்றுக்கொண்ட சொற்ப உரிமைகளும் சுதந்திரக் கட்சி ஆட்சியிலிருந்தபோதே நடைபெற்றிருக்கிறது. இதற்கு வடகிழக்கு மற்றும் தென்பகுதி இடதுசாரிகள் முன்னின்று உழைத்திருக்கிறார்கள். இதற்கு சிறந்த உதாரணமாக நாம் யாழ். பல்கலைக் கழகத்தை குறிப்பிடலாம். மிதவாத தமிழ் தலைவர்கள் இப்பல்கலைக் கழகம் அமைவதை கடுமையாக எதிர்த்தார்கள். திறப்பு விழாவுக்கு வருகைதந்த அன்றைய பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்கவுக்கு கறுப்புக்கொடி காட்டினார்கள். இப்பல்கலைக் கழகத்தின் முதலாவது பீடாதிபதி பேராசிரியர் கைலாசபதி. தற்போது கொழும்பில் வசிக்கும் ‘பேர்’ஆசிரியர் அப்பதவியை பெற்றுக்கொள்ள பின்கதவால் அரசாங்கத்தை நாடினார். மேலும் பேராசிரியர் கைலாசபதியின் நியமனத்தை தடுக்க திரைமறைவில் அனைத்து பிற்போக்கு சக்திகளும் ஈடுபட்டன. ஆனால் இடதுசாரிகளின் விடப்பிடியினால் பேராசிரியர் கைலாசபதி பீடாதிபதியாக நியமிக்கப்பட்டார்.

எனவே இன்றைய இனவாத தமிழ் தலைவர்கள் எதையும் உருப்படியாக செய்யப்போவதில்லை. மற்றவர்களை செய்ய அனுமதிக்கப்போவதுமில்லை. இனப்பிரச்சினைக்கு ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வினை சுதந்திரக் கட்சியின் கூட்டமைப்பான பொதுசன ஐக்கிய முன்னணி முன்வைத்தது. வடக்கு கிழக்கு மக்களின் அபிவிருத்தி பொதுசன ஐக்கிய முன்னணி ஆட்சிக் காலத்தில் மேம்பட்டது. ஆனால் தமிழ் இனவாத தலைவர்கள் சிங்கள இனவாத ஐக்கிய தேசியக் கட்சியையே காலம் காலமாக பலப்படுத்த முனைந்துவந்திருக்கிறார்கள்.

இளைஞர்களின் ஆயுதப்போராட்டம் தொடங்கப்பட்திலிருந்து 90 களின் ஆரம்பகாலம் வரை இலங்கையை ஆட்சி செய்த ஐக்கிய தேசியக் கட்சி தமிழர்களுக்கு இழைத்த அநீதிகள் அட்டூழியங்கள் சொற்களுக்குள் அடக்கிவிட முடியாதது. 83 இனக்கலவரத்தை பி(மு)ன்னின்று நடத்தியது ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கிய தலைவர்கள். இதே தலைவர்கள் இதற்கு முன்னர் யாழ். நூலகத்தை எரித்தார்கள். இப்படிப் பலநூறு. இன்று இதே தலைவர்களின் கரங்களைப் பலப்படுத்த துடிக்கிறது கூத்தமைப்பு.

‘காடு வா வா என்;கிறது, வீடு போ போ என்;கிறது’ என்ற நிலையிலும் ஆசை யாரைத்தான் விட்டுவைக்கிறது! கடைசிக்காலத்திலாவது பற்றுக்களைத் துறந்து தமிழ் மக்களின் குறைந்தபட்ச அபிலாசைகளையாவது பெற்றுக்கொடுக்க வேண்டும்.

அதைவிடுத்து தமிழ் மக்களுக்கு சம்பந்தமே இல்லாத ஜனாதிபதி ஆட்சிமுறையை அகற்ற வேண்டும் என்று நியாயம் கற்பித்தோ அல்லது இடைத்தங்கல் முகாமிலுள்ள மக்களுக்காக நீலிக்கண்ணீர் வடிப்பதை நம்பி, ‘கிழட்டுப் புலியிடமிருந்த தங்க காப்புக்கு ஆசைப்பட்டு குளத்துக்குள் இறங்கிய அந்தணன்’ போல தமிழ் மக்களை தள்ளிவிடக்கூடாது.

ஜனநாயக மற்றும் முற்போக்கு தமிழ் அரசியல் சக்திகள்.

இன்றைய பிரச்சினைகளைப் பற்றி நம் அறிவை ஆழப்படுத்தவதற்கு, நம் பொதுப்படையான ஞானத்தைக் கிளறுவதற்கு, பழைய கருத்தமைப்புகளை மறு சிந்தனை செய்வதற்கு நம் முன்னுள்ள சமூக, பொருளாதாரப் பிரச்சினைகளைப் பகுத்தாராய்வதற்கு நாம் முன்வரவேண்டும்.

தமிழ் சமூகத்தை சீர்குலைக்க முனைந்தள்ள வகுப்புவாத சக்திகளைப் பற்றி நாம் அறிந்துகொள்வது அவசியம். நந்திக்கடல்வரை ஏற்பட்ட அழிவுகள் தன்னியல்பாகத் தோன்றிய ஆவேசம் அல்ல. வெறியுணர்ச்சியையும் வன்முறையையும் போற்றி, மற்ற சமூகங்களின் மீது பொறாமைகொள்ளத் தூண்டி, சட்டம் மற்றும் ஜனாநாயக நெறிமுறைகளை மிதித்துவந்த புலிகளின் செயற்பாடே இவ்வளவு அழிவுக்கும் காரணம்.

எனவே தமிழ் மக்களுக்குக்கும் எமக்கும் இருக்கும் ஒரே ஒரு நம்பிக்கை ஜனநாயக மற்றும் முற்போக்கு சக்திகளே. இவர்கள் இதுவரை தமக்குள்ளான ஒருமைப்பாட்டையும் செயற்பாட்டையும் வெளிப்படுத்தவில்லையாயினும் இவர்கள் தொடர்பாக அனைவரது நெஞ்சிலும் ஒரு சிறு நம்பிக்கை சுடர்விட்டுகொண்டுதான் இருக்கிறது. பொதுவாழ்வுக்கு வந்த நீங்கள் பற்றற்று இயங்கவேண்டிய மிகச் சிறந்த தருணம் இதுதான்.

கடந்தகாலத்தில் இவர்களை புலிகள் தேடித்தேடி வேட்டையாடியது, இவர்கள் அரசாங்கத்துக்கு தகவல் கொடுக்கிறார்கள் என்பதற்காக அல்ல. ‘இணக்கப்பாட்டு’ அரசியலின் ஊடாக தமிழ் பிரதேசங்களை அபிவிருத்தி செய்ததும் தமிழ் மக்களுக்கான சலுகைகளைப் பெற்றுக்கொடுத்ததுமே புலிகளின் சீற்றத்துக்குக் காரணம்.

ஒப்பீட்டு ரீதியில் எது சிறந்தது என்பதைத் தெரிவு செய்யும் திறனும் தெளிவும் நமக்குத் தேவை. எனவே ஜனாதிபதித் தேர்தலில் தமது ஒன்றிணைந்த சக்தியின் மூலம் தாம் ஆதரிக்கும் ஜனாதிபதியை வெற்றியடையச் செய்வதன் மூலம் தமிழ் மக்களின் கணிசமான உரிமைகளைப் பெற்றுக்கொள்வதற்கான வாய்ப்பை நாம் ஏற்படுத்திக்கொள்ளலாம். நிர்கதியாக நிற்கும் இடைத்தங்கல் முகாமிலுள்ள மக்களின் வாழ்வாதாரத்தைப் பெருக்கிக்கொள்ளக்கூடிய அரிய சந்தர்ப்பம் இது. இந்த சக்தி பேரம்பேசும் அரசியலுக்கு நிட்சயமாக இட்டுச்செல்லும்.

மேலும் வரும் பாராளுமன்றத் தேர்தலில் தமிழ் இனவாத சக்திகளைத் தோற்கடித்து அனைத்து முற்போக்கு சக்திகளும் ஒன்றாக ஒரே அணியில் பாராளுமன்றத்தில் அமரக்கூடிய வாய்ப்பை பெறுவதன் மூலம் தமிழ் மக்களின் உண்மையான அரசியல் சக்தியாக மிளிர்வீர்கள் என்பதில் ஐயமில்லை. அதற்கு நீங்கள் அனைவரும் ஒன்றுபட வேண்டும். ஒன்றுபட்டு செயற்படவேண்டும். கடந்த காலம் என்பது ‘உடைந்த பானை’ அதை விட்டுத்தள்ளுங்கள். இன்று ஒன்றுபட்டு உழைப்பதன் மூலம், இனிவரும் காலங்களில் உரிமைகளுடன் கூடிய நல்வாழ்வுக்கு வழிசமைக்க வேண்டும்.

அதற்கு ‘பற்றுக பற்றாமை’

No comments:

Post a Comment