23 December 2009

இந்திய உயர் ஸ்தானிகர் தலைமையிலான குழுவினர் இடம்பெயர்ந்த மக்கள், மக்கள் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடல்


இம் மாதம் 22ம் திகதி இந்திய உயர் ஸ்தானிகர் அசோக் காந்த் இந்திய துணை தூதுவர் விக்ரம் மிஷ்ரி, அரசியல் செயலாளர் சியாம், இந்திய தூதரகத்தின் பாதுகாப்பு அதிகாரி ஆகியோர் அடங்கிய குழுவினர் மன்னார், வவுனியா மாவட்டங்களுக்கு சென்று இடம் பெயர்ந்தோர் மீள் குடியேற்றம் இப்பிரதேங்களின் சமூக பொருளாதார நடவடிக்கைகளை நேரி;ல் அவதானித்ததோடு சமூகத் தலைவர்கள், அரசியல் கட்சி பிரதிநிதிகள், அரச அதிகாரிகளுடன் கலந்துரையாடல்களை நடத்தினர். மக்களின் குறைகளையும், அவர்களின் கோரிக்கைகளையும் நேரில் அறிந்து கொண்டனர். மேலும் இடம் பெயர்ந்த மக்கள் மீளக்குடியமர்ந்த பிரதேசங்கள் சிலவற்றுக்கும், திருக்கேதீஸ்வரம் ஆலய பகுதிக்கும் விஜயம் செய்தனர்.

மன்னாரில் நடைபெற்ற கலந்துரையாடலில் புளொட் அமைப்பின் தலைவர் த.சித்தார்த்தன், புளொட் அமைப்பின் சிரேஷ்ட அங்கத்தவர்களான ராகவன், பவான் ஆகியோரும் பத்மநாபா ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் பொதுச்செயலாளர் தி.ஸ்ரீதரன், மன்னார் மாவட்ட அமைப்பாளர் க. ஞானதாஸ் (சிவம்), மத்தியகுழு உறுப்பினரான பே. குமார் ஆகியோரும் கலந்து கொண்டனர். மன்னார் பிரஜைகள் குழுவின் பிரதிநிதிகள், மீனவர் சங்கங்களின் பிரதிநிதிகள், அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள், சிரேஷ்ட அரச அதிகாரிகள் ஆகியோரும் பங்குபற்றியிருந்தார்கள்.

முக்கியமாக இடம் பெயர்ந்த மக்களின் மீள் குடியேற்றமும், அவர்களின் அடிப்படை ஆதார வசதிகளை மேம்படுத்துவது,

உயர் பாதுகாப்பு வலயங்கள் என பல நீண்ட வருடங்களாக மாற்றப்பட்டிருக்கும் மக்களின் வாழ்விடங்களை அவர்களிடம் கையளிப்பது,

சிறைகளில், சிறப்பு முகாம்களிலும் வாடும் அப்பாவிகளை விடுவிப்பது

மீனவ மக்கள் எவ்வித இடைஞ்சல்கள், அசௌகரியமின்றி தங்கள் தொழிலை நாளும் பொழுதும் மேற்கொள்ள அனுமதிப்பது.

வர்த்தக நடவடிக்கைகள், போக்குவரத்துக்களை சுமூகப்படுத்துவது,

மீண்டும் தலைமன்னார்- இராமேஸ்வரம் பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவையை மீள ஆரம்பிப்பது

பின்தங்கிய மாவட்டமான மன்னார் மாவட்டத்தை அபிவிருத்தி செய்வது,

நியாயமான அரசியல் தீர்வொன்றை தமிழ் மக்களுக்கு கிட்டச் செய்வது

ஆகிய விடயங்கள் உள்ளடக்கிய கோரிக்கைகளும், கருத்துக்களும் முன் வைக்கப்பட்டன.

இந் நிகழ்வில் உரையாற்றிய இந்தியத் உயர்ஸ்தானிகர் அசோக் காந்த் அவர்கள் மனிதாபிமானப் பணிகளிலும்- கண்ணிவெடிகளை அகற்றி மக்களின் வாழிடங்களை பாதுகாப்பானதாக மாற்றுவதிலும், விவசாயம், வீதிகளை புனரமைத்தல், நிர்மாணித்தல் மற்றும் அபிவிருத்தி நடவடிக்கைகளிலும், அரசியல் அதிகார செயன்முறையிலும் இந்தியாவின் பங்களிப்பை குறிப்பிட்டதோடு எதிர்காலத்தில் அரசியல் அதிகாரப் பகிர்வு செயற்பாடுகளை ஊக்குவிப்பதாகவும் தெரிவித்தார்.

மீனவர்களுடைய பிரச்சினைகள் இரு தரப்பு கலந்துரையாடல்களினூடாக பேசி தீர்வு காணலாம் எனவும் தெரிவித்தார்.

மன்னார் மாவட்ட பா.உ செல்வம் அடைக்கலநாதன் பாரதியாரின் பாடலை நினைவு கூர்ந்து திரும்பவும் தலைமன்னார்- ராமேஸ்வரம் கப்பல் சேவையை ஆரம்பிக்கப்பட வேண்டும் எனத தெரிவித்தார்.

புளொட் தலைவர் த. சித்தார்த்தன் அவர்கள் இடம்பெயர்ந்த மக்களுக்கு இந்தியா மேற்கொண்ட உதவிகளுக்கு நன்றி தெரிவித்ததோடு மனிதாபிமான பணிகள் மேம்படுத்தப்படுவதோடு அரசியல் அதிகார பகிர்வின் அவசியத்தை வலியுறுத்தினார்.

பத்மநாபா ஈ.பி.ஆர்.எல்.எப் பொதுச்செயலாளர் தி.ஸ்ரீதரன் அவர்கள் மக்கள் யுத்த சூழ்நிலையில் அல்லலுறும் போது இந்தியா அத்தியாவசியப் பொருட்களை அனுப்பி வைத்ததோடு இடம்பெயர்ந்த மக்களின் நலன்களுக்காக கட்டம் கட்டமாக 1000 கோடி ரூபாவை வழங்கியிருப்பதையும், இரவு பகல் பாராது இந்திய மருத்துவர்கள் எமது மக்களுக்கு வழங்கிய சேவைகளையும் நினைவு கூர்ந்ததோடு அண்மையில் இந்தியாவின் வெளிவிவகார அமைச்சர் தமிழ், முஸ்லீம் மக்களை இலங்கையின் அரசியல் முறைமையில் பங்குதாரர்களாக்கப்பட வேண்டும் என்று குறிப்பிட்டதையும் இந்தியா மிகப்பெரிய பல்லின , பல மொழி சமூகங்களின் ஜனநாயக நாடு என்ற வகையில் இலங்கையில் அதிகாரப் பகிர்வு நடைமுறை செயற்படுத்தப்படுவதற்கும் பல்லினங்களின் நாடாக இலங்கை மாற்றமுறுவதிலும் பங்களிக்க வேண்டுமென்றும் கேட்டுக் கொண்டார்.

No comments:

Post a Comment