14 December 2009


மனித உரிமை நிகழ்வில் ஸ்ரீதரன் உரை

இந்த வீரசிங்கம் மண்டபத்தின் கடந்த கால நிகழ்வுகள் என் மனத்திரையில் நிழலாடுகின்றன.

தமிழராய்ச்சி மாநாட்டின் இறுதி நாள் நிகழ்வில் ஒன்பது தமிழர்கள் பலியான சம்பவம் இந்த மண்டபத்தின் முன்றலில்தான் நடைபெற்றது.


அமிர்தலிங்கம், சண்முகதாசன் உள்ளிட்ட பல்வேறு அரசியல்

தலைவர்களின் உரைகளை இம் மண்டபத்தில் செவிமடுத்திருக்கிறேன். தந்தை செல்வாவின் பூதவுடல் இங்குதான் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது.

சங்காரம் உள்ளிட்ட பல அரங்காற்றுகைகள் இம் மண்டபத்தில் நிகழ்ந்தன

இதற்கு அண்மையில் உள்ள பண்ணைக் கடலில்தான் பயங்கரவாதத் தடைச்சட்டம் வந்ததன் பின் கொல்லப்பட்ட இன்பம், செல்வம் ஆகிய இளைஞர்களின் சடலங்கள் மிதந்தன. அந்த நாட்களில் இருந்து முள்ளிவாய்க்கால் வரை எமது மக்களின் வாழ்வு துயரமான ஒரு பாதையில் பயணித்தது.

இன்று எல்லாவற்றையும் கட்டுடைத்து பார்க்க வேண்டும். முன்னாள் யாழ் நகரபிதா அல்பிரட் துரையப்பாவின் படுகொலையிலிருந்து இப்போது நாம் பார்க்க வேண்டும்.

கருத்தை கருத்தால் எதிர்கொள்ளும் பண்பாடு எமது சமூகத்தில் மீள் கட்டியெழுப்பப்பட வேண்டும்.

அரச பயங்கரவாத வன்முறைகளுக்கப்பால் எமது சமூகத்தில் நிகழ்ந்த வன்முறைகளைப் பற்றியும் நாம் பார்க்க வேண்டும். தீண்டாமை கொடுமைக்கு கொடூரமாக பலியான அண்ணாசாமி போன்றவர்களையும் இவ்விடத்தில் நினைவுகூர வேண்டும்.

இங்கு கூடியிருக்கும் தலைவர்கள் வௌ;வேறு கருத்துக்களை கொண்டவர்களாக இருந்தாலும் சமூகம் தொடர்பாக அவர்களின் ஆக்கபூர்வமான பங்களிப்பை இங்கு குறிப்பிட்டாக வேண்டும்.

வடக்கு வலிகாமம் மக்கள் கடந்த 23 வருடங்களாக தமது சொந்த இடங்களுக்குத் திரும்ப முடியாமல் பல்வேறு இன்னல்கள் சிரமங்கள் மத்தியில் வாழ்கிறார்கள். சொந்த ஊரை இழப்பது எவ்வளவு கொடுமையானது. பிறந்து வளர்ந்த ஊர் என்பது ஒவ்வொரு மனிதனின் வாழ்விலும் அழுத்தமான பாதிப்பை ஏற்படுத்தும். கோயில், குளம், பாடசாலை, காதல், சிறு சிறு குழப்படிகள் என பல விடயங்களின் மனப்பதிவு அது. ஒரு மனிதனின் வாழ்வின் கட்டமைப்பு.

இதே பிரச்சினை முஸ்லீம் மக்களுக்கும் உண்டு. சோனகத்தெருவில் சென்றுதான் சாக வேண்டும் என்ற கனவுடன்தான் வாழ்ந்தார்கள். பலரின் கனவு புத்தளத்துடனேயே நிராசையானது.

நாம் வெ வ் வேறு கருத்துக்களுடன் நாகரிகமாக உறவாடப் பழகிக்கொள்ள வேண்டும்.

வேறுபட்ட அபிப்பிராயங்களுடன் ஒன்றிணைந்து வாழ்வதற்கான உரிமை பாதுகாக்கப்பட வேண்டும்.

தமிழ் அரசியலில் பெண்களின் பிரசன்னம் அரிதாகவே இருந்தது.

போராசிரியர் ரஜனி திரணகம, சட்டத்தரணி மகேஸ்வரி வேலாயுதம் போன்ற மனித உரிமைவாதிகள் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார்கள்.

அரசியல் வேறுபாடுகள் கொண்டவர்களை துரோகிகள் கைக்கூலிகள் என்று தீண்டாமை, பாராட்டும் போக்கு எமது சமூகத்தில் ஆதிக்கம் வகித்தது, வகிக்கிறது.

மனித உரிமைகள் இல்லத்தின் செரின் சேவியர் போன்றவர்கள் அந்த விடயத்தில் ஆரோக்கியமான முன்மாதிரி ஒன்றை ஏற்படுத்தியுள்ளார்.

வெ வ் வேறு கருத்துநிலை கொண்ட அரசியல் கட்சியினரை, சிவில் சமூகத்தைச் சேர்ந்தவர்களை ஓரிடத்தில் அமரச்செய்து இவர்கள் ஒன்றாக சென்று அகதி மக்களை பார்க்க அனுமதி பெற வேண்டும் என்ற முனைப்பில் யுத்தம் முடிவடைவதற்கு முந்திய ஏப்பிரல் மாதத்திலேயே ஒரு முன்னெடுப்பை மேற்கொண்டவர்.

எமது சமூகத்தில் இளந்தலைமுறைத் தலைவர்கள் உருவாக வேண்டும்.

இங்கு நிகழ்ந்த அரங்காற்றுகை ஒற்றுமையை வலியுறுத்தியதாகவும் மனிதத்தின் வாழ்வு பற்றிய தேடலைக் கொண்டிருந்தது.

இடம்பெயர்ந்த மக்கள் தமது சொந்த இடங்களில் குடியேற்றப்படுவதும், சுயமரியாதை கௌரவத்துடன் கூடிய வாழ்வு கிட்டுவதும் இன்றைய ஜீவாதாரமான விடயங்கள் என்றும் குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment