28 December 2009

வடக்கு முஸ்லிம்களின் ஏக்கம் தீருகிறது

அகதியாக வாழ்வதைப் போன்றதொரு துன்பம் வேறெதுவும் இல்லை. எமது நாட்டில் முப்பது வருட காலமாக நீடித்த யுத்தத்தின் விளைவாக வடக்கு, கிழக்கில் இடம்பெயர்ந்து வாழ்ந்த மக்களுக்கு இத்துன்பம் நன்கு புரியும்.

வடக்கு, கிழக்கில் தமிழ் மக்கள் மாத்திரமன்றி முஸ்லிம் மக்களும் இத்தகைய கொடிய துன்பத்தை நன்கு அனுபவித்தனர். யுத்தத்தின் விளைவாக முஸ்லிம்கள் எதிர் கொண்ட அவல வாழ்க்கைக்கு அடையாளமாக வடக்கிலிருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம்கள் விளங்குகின்றனர்.

கொடிய யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வந்ததன் மூலம் முப்பது வருட காலமாக நாட்டில் தொடர்ந்த அகதி வாழ்வை முடிவுக்குக் கொண்டு வந்தவர் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ ஆவார்.

வன்னியிலிருந்து இடம் பெயர்ந்த மக்களில் ஏராளமானோர் அவர்களது சொந்த இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு, எஞ்சியுள்ளோரையும் மீளக்குடியேற்றுவதற்கு அரசாங்கம் துரிதமான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது.

அதேசமயம் வட பகுதி யிலிருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களும் படிப்படி யாக அவர்களது முன்னைய இருப்பிடங்களில் மீள்குடி யேற்றப்பட்டு வருகின்றனர். இத்தகைய சூழ்நிலையில் வடக்கிலிருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம்கள் அனைவரும் அடுத்த வருடம் மே மாதமளவில் அவர்களது சொந்த இடங்களில் மீள்குடியேற்றப் படுவரென ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ நேற்று முன்தினம் புத்தளம், ஆலங்குடாவில் வைத்து அறிவித் துள்ளார்.

இதே சமயம் மன்னார் முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்தை இலகுபடுத்தும் வகையில் புத்தளத்திலிருந்து மன்னாருக்குச் செல்லும் பாதை அடுத்த மாதம் திறந்து வைக்கப்படுமெனவும் ஜனாதிபதி அங்கு அறிவித்துள்ளார்.

ஜனாதிபதியின் இந்த அறிவிப்பானது வட பகுதி முஸ்லிம்களுக்கு மிகவும் மகிழ்ச்சியை ஏற்படுத்துமென்பதில் ஐயமில்லை. தங்களது சொந்த வாழிடங்களில் மீண்டும் குடியேறி வாழும் பொற்காலம் வராதாவென இரு தசாப்த காலமாக ஏங்கிக் கொண்டிருக்கும் முஸ்லிம்களுக்கு இந்த அறிவிப்பை விட மகிழ்ச்சி வேறெதுவும் இருக்க முடியாது.
‘உலகில் நீ விரும்பும் சொர்க்கம் எதுவென யாரும் கேட்டால், நான் பிறந்த கிராமமே எனது சொர்க்கம் எனப் பதிலளிப்பேன்’ என்று யாரோவொரு அறிஞர் கூறியது இவ்விடத்தில் நினைவுக்கு வருகிறது.

அதுவும் கிராமத்து மண்ணில் பிறந்து வாழ்வதைப் போன்றதொரு பாக்கியம் வேறெதுவுமில்லை. இயற்கையுடன் சேர்ந்து வாழ்கின்ற வாழ்வு மனநிம்மதி தருவதாகும். கிராமத்துக் குடிமகன் ஒருவன் உலகின் எந்தவொரு நகரத்தில் நிரந்தரமாகி விட்டாலும் கூட, அவனுக்குள் வாழும் கிராமத்தை அழித்துவிட முடியாதென்பதே உண்மை.

வடக்கு, கிழக்கில் கடந்த காலங்களில் இருப்பிடங்களை விட்டு இடம்பெயர்ந்த மக்களின் மனோ நிலையையும் இவ்வாறே நாம் நோக்க வேண்டியுள்ளது. கிராமத்து நினைவுகளை மனதில் சுமந்த வண்ணம் எங்கோவொரு தற்காலிக வாழிடத்தில் அகதிகளாக அவல வாழ்வு நடத்திய பல்லாயிரம் மக்களின் வேதனைகளை அவர்கள் மாத்திரமே முழுமையாக உணர்வர்.

வடபகுதி முஸ்லிம்களும் இதுபோன்ற மன வேதனையையே நீண்டகாலமாக அனுபவித்து வந்துள்ளனர். புலிகளால் உடுத்த உடையுடன் வடக்கிலிருந்து வெளியேற்றப்பட்ட அவர்கள் கடந்த சுமார் இருபது வருட காலமாக நாட்டின் பல்வேறு பிரதேசங்களிலும் வாழ்ந்து வருகின்றனர். அவர்கள் படிப்படியாக மீள்குடியேற்றப்பட்டு வருகின்ற போதிலும் அப்பணி இன்னும் முழுமை பெறவில்லை.

முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் அடுத்த வருடம் மே மாத மளவில் நிறைவு பெறும்போது அவர்களது நீண்டகால ஏக்கமும் தீர்ந்து விடுமென்பதே உண்மை.

நன்றி- தினகரன்

No comments:

Post a Comment