07 January 2010


தெற்கிலும் வடக்கிலும் உள்ள இடதுசாரி, முற்போக்கு, சக்திகளின் நெருங்கிய ஒத்துழைப்பின் மூலமே நாம் விரும்புகின்ற தேசிய ஒற்றுமையை அடைய முடியும் என்பது எனது அசைக்க முடியாத நம்பிக்கை.

யாழ்நகரில் டி.யூ குணசேகர ஆற்றிய உரை

யுத்தம் தீவிரமடைந்திருந்த வேளையிலும் கூட தமிழ் பேசும் மக்களில் 61 சதவீதமானவர்கள் வடக்குக்கும் கிழக்குக்கும் வெளியே, சிங்கள மக்கள் மத்தியில் அச்சமும் சந்தேகமும் இல்லாமல் வாழ்ந்தார்கள் என்ற உண்மையை நாம் குறைவாக மதிப்பிட்டுவிடக் கூடாது.

1982 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலின் போது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் ஹெக்டர் கொப்பேகடுவவுக்கு ஆதரவாக நான் யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்தேன். இன்று ஏறக்குறைய 27 ஆண்டுகளின் பின்னர் நிம்மதி,உணர்ச்சி, பிரவாகம் பெருமகிழ்ச்சியோடு தோழர்கள் மத்தியில் உரையாற்றுகிறேன்.அவ்வேளையில், கம்யூனிஸ்ட் கட்சி மாத்திரமே ஹெக்டர் கொப்பேகடுவவை ஆதரித்தது. அப்போதைய ஜனாதிபதி ஜே.ஆர்.ஜயவர்தன, குமார் பொன்னம்பலம்,கலாநிதி கொல்வின் ஆர்.டி.சில்வா, வாசுதேவ நாணயக்கார, ரோஹண விஜேவீர ஆகியோர் ஜனாதிபதித் தேர்தல் களத்தில் இறங்கியிருந்தனர்.

யாழ்ப்பாணம், வவுனியா மாவட்டங்களைச் சேர்ந்த வட பகுதி மக்கள் எமது அன்பான அழைப்பை ஏற்று ஹெக்டர் கொப்பேகடுவ அவர்களுக்கு ஆகக்கூடிய விருப்பு வாக்குகளை அளித்தார்கள் என்பது இன்னமும் எனக்கு நினைவில் இருக்கிறது. அவருக்கு 10,0521 வாக்குகளை மக்கள் அளித்தனர். குமார் பொன்னம்பலம் 98,784 வாக்குகளைப் பெற்றார். ஜே.ஆர்.ஜயவர்தனவுக்கு 77,614 வாக்குகள் கிடைத்தன. வட பகுதியில் செல்லுபடியான வாக்குகளில் 67 சதவீதமானவை சிங்கள வேட்பாளர்களுக்கு ஆதரவாகவே கிடைத்தன. அரசியல் சித்தாந்த வேறுபாடுகள் இருந்த போதிலும் தேசிய ஐக்கியம் நிலவிய காலகட்டம் அது. மக்கள் மட்டத்தில் பார்த்தால் தேசிய ஐக்கியமும் சமூக ஒற்றுமையும் உச்ச நிலையில் இருந்தன. இந்த ஐக்கியத்தைத் தகர்த்தெறிந்து 1983 ஆம் ஆண்டின் ஆடிக் கலவரம். கடந்த 26 ஆண்டுகளாக இலங்கையின் பாலங்களுக்குக் கீழ் இரத்த ஆறு பெருக்கெடுத்தோடிற்று.

இன்று நாம் வட பகுதியில் மீண்டும் அரசியலுக்கு வந்திருக்கிறோம். ஆனால், முழுமையான நம்பிக்கையுடன் இந்தப் புண்களை ஆற்றுகின்ற சமரச இணக்கத்தை ஏற்படுத்துகின்ற இந்தக் காலகட்டத்தின்போது வருத்தம் தோய்ந்த கொடுமையான கடந்த காலத்தை நினைவுபடுத்திப் பார்க்கவும் நான் விரும்பவில்லை.இந்தச் சந்தர்ப்பத்தில் வட பகுதியில் கம்யூனிஸ்ட் இயக்கத்தை ஸ்தாபித்து கட்டி வளர்த்த பெருமைக்குரிய உன்னதத் தலைவர்களை மரியாதையுடனும் கௌரவத்துடனும் நினைவுகூருவது எனது கடமை. தோழர்கள் த.துரைசிங்கம், ஏ.வைத்தியலிங்கம்,பொன்.கந்தையா, எஸ்.ஜெயசிங்கம், என்.சண்முகதாசன், அ.அரியரத்னம்,வி.பொன்னம்பலம், எம்.கார்த்திகேசன், எஸ்.பி.நடராஜா,எம்.சி.சுப்பிரமணியம் ஆகியோரே வடக்கில் கம்யூனிஸ்ட் கட்சியை வளர்த்து போஷித்தார்கள். தலைசிறந்த தொழிற்சங்கத் தலைவர்களான கே.சி.நித்தியானந்தா, சி.குமாரசாமி,பொன்.குமாரசாமி,எஸ்.செல்லையா,எஸ்.கதிரவேல், கே.நவரட்ணம்,எஸ்.விஜயானந்தன் ஆகியோர் இடதுசாரி இயக்கத்துடன் இணைந்திருந்தனர்.

வட பகுதியைப் பிரதிநிதித்துவம் செய்த மூன்று பாராளுமன்ற உறுப்பினர்களைக் கொண்டிருந்த ஒரேயொரு இடதுசாரிக் கட்சி கம்யூனிஸ்ட் கட்சி மாத்திரமே. பொன்.கந்தையா,எம்.சி.சுப்பிரமணியம்,கே.நவரத்தினம் ஆகியோர் வௌ;வேறு காலங்களில் இந்தப் பிரதிநிதித்துவத்தை வகித்தனர். ஆனால், இடதுசாரி இயக்கத்தின் தோற்றம் 1920 ஆம் ஆண்டுகளை நோக்கிச் செல்கின்றது. ஆசியாவிலும் ஆபிரிக்காவிலும் லத்தீன் அமெரிக்காவிலும் தேச விமோசன மனப் போராட்டத்துக்கு கட்டியம் கூறிய 1917 ஆம் ஆண்டின் மகத்தான அக்டோபர் சோஷலிசப் புரட்சி பற்றிய செய்தியை வெளியுலகுக்குத் தெரியப்படுத்திய முதலாவது இலங்கையர் பொன்னம்பலம் அருணாச்சலம் அவர்களே என்பது ஒரு சிலருக்கு மாத்திரமே தெரிந்த உண்மை.

இந்தப் பின்னணியில் ஹென்டி பேரின்பநாயகம் தலைமையில் யாழ்ப்பாணம் மாணவர் காங்கிரஸ{ம் பின்னர் யாழ்ப்பாணம் இளைஞர் காங்கிரஸ{ம் 1924 ஆம் ஆண்டில் தீர்க்கமான வேலைத்திட்டத்துடன் உருவாகின. 1931 ஆம் ஆண்டில் அகில இலங்கை இளைஞர் காங்கிரஸ்,1933 சூரிய மலர் இயக்கம் ஆகியன பிறப்பெடுத்தன. இவை முழுமையான சுதந்திரத்துக்கான போராட்டத்தின் மேலும் வளர்ச்சிகளே. 1935 ஆம் ஆண்டில் முதலாவது இடதுசாரிக் கட்சி உருவானது. அது லங்கா சமசமாஜக் கட்சி. பின்னர் 1943 ஆம் ஆண்டில் கம்யூனிஸ்ட் கட்சி உருவாகிற்று. இவை எல்லாம் இடதுசாரி இயக்கத்தின் சித்தார்ந்த திசை வழியைக் கொண்ட நீடிப்புகள் தான்.

26 ஆண்டு காலம் நீடித்திருந்த யுத்தத்துக்குப் பின்னர் நாம் இன்று யாழ்ப்பாணத்தில் சந்திக்கின்றோம். 30 ஆண்டுகளாகப் பயங்கரவாதம் நிலவியது. இந்தக் காலகட்டத்தின் போது நடந்த சம்பவங்களையிட்டு எவரும் மகிழ்ச்சி அடைய முடியாது. விலைமதிக்க முடியாத உயிர்கள் பலியாகின. சொத்துகள் அழிந்தன. பொருளாதாரம் சீர்குலைந்தது. மக்களின் குறிப்பாக சமுதாயத்தில் கீழ் மட்டத்தில் உள்ளவர்களது துன்ப,துயரங்கள் நீடித்துக் கொண்டேயிருந்தன. கலாசாரம் சீர்குலைந்தது.வன்முறைக் கலாசாரம் தலைதூக்கியது. நல்லாட்சி வீழ்ச்சி கண்டது. தேசிய ஒற்றுமையும் ஒருமைப்பாடும் முற்றாக அழிந்தன. வடக்கிலும் தெற்கிலும் குறுகிய தேசிய இனவெறி தலைதூக்கியது. பாதாள உலகம் தோன்றியது. இவை எல்லாம் அதன் பின்னர் நிகழ்ந்த சம்பவங்களின் உற்பவிப்புகள், உப உற்பவிப்புகளின் விளைவுகளே.

நாம் இழந்துவிட்ட சமுகத் தலைவர்களுக்கோ அல்லது எமது தேசமான இலங்கையின் கதிப்போக்கிற்கு வழிகாட்டிய ஆட்சியாளர்களுக்கோ நான் அவமரியாதை செய்ய மாட்டேன். இப்போதைய காலகட்டம் புண்களை ஆற்றுவதும் சமரசமான இணக்கத்தை ஏற்படுத்துவதும் தான். துரதிர்ஷ்டவசமான சம்பவங்களை நான் கிளற விரும்பவில்லை. ஆனால், நாம் மறக்க முடியாத வரலாற்று உண்மைகள் உள்ளன. இந்தப் பேரழிவில் இருந்து மீண்டும் முன்னோக்கிச் செல்ல வேண்டுமானால் நாம் நிச்சயமாகக் கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்கள் உள்ளன. நாம் அவற்றை மன்னித்தும் விடலாம். வரலாற்றைக் கற்பவன் என்ற முறையில் பின்னோக்கிப் பார்த்தால் சுதந்திரம் பெற்ற காலம் முதல் எமது தலைவர்கள் தேசத்தைக் கட்டியெழுப்பும் கடமைக்குத் தலைமை தாங்கத் தவறிவிட்டனர் என்பதை நான் கூறியே ஆகவேண்டும். வரலாறு எமக்கு அநேக சந்தர்ப்பங்களை வழங்கிற்று. நாம் அவை அனைத்தையும் தவறவிட்டு விட்டோம். இன்று வரையிலும் கூட எமது தோல்விக்குத் தேசிய கருத்தொற்றுமை இல்லாமையே பிரதான காரணமாக இருந்து வந்துள்ளது.

இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியைப் பொறுத்தவரையில், தேசிய இனப் பிரச்சினையை அதன் கருத்தமைப்பில் இருந்தே நாம் இனங்கண்டோம். உண்மையில் பிரதேச சுயாட்சி கருத்தமைப்பு. அதாவது இன்றைய பின்புலத்தில் அதிகாரப் பரவலாக்கம்,சமகால அரசியலுக்கு எமது கட்சியாலேயே அறிமுகப்படுத்தப்பட்டது. அது சமூக,பொருளாதார, கலாசார எதார்த்தங்களின் விஞ்ஞானபூர்வமான பகுப்பாய்வையும் சர்வதேச அனுபவத்தையும் அடிப்படையாகக் கொண்டது.

சுதந்திரம் பெற்றது முதல் ஆட்சியில் இருந்துவரும் முதலாளித்துவக் கட்சிகள் இந்த எதார்த்தங்களைப் புரிந்துகொள்ளத் தவறின. அற்பமான, குறுகிய அரசியல் நலன்களால் இழுத்துச் செல்லப்பட்டன. அவை தேச நிர்மாணக் கடமையில் எமது வரலாற்று பூர்வமான பொறுப்புணர்வைக் கைதுறந்தன.வட பகுதியில் தமிழ்க் காங்கிரஸ்,தமிழரசுக் கட்சி ஆகியவற்றின் முதலாளித்துவத் தமிழ்த் தலைவர்களைப் பொறுத்த வரையிலும் கூட இதுவே உண்மை. அவர்கள் அரசியல் துறையில் ஒரு பழைமைவாய்ந்த அல்லது பிற்போக்கான பங்கை வகித்தார்கள். அவர்களது குறுகிய வர்க்க நலன்களுக்கான கடமைகளுக்கு முன்னுரிமை கொடுத்தனர்.

தேசிய ரீதியில் அவர்கள் அனைவரும் பிற்போக்கான பழைமை வாய்ந்த அரசியல் நிலைப்பாடுகளை இனங்காட்டினர். அவர்கள் முற்போக்கான எல்லாவற்றையும் எதிர்த்தனர். இவ்விதம் தென்பகுதி மக்களிடம் இருந்து தம்மை அந்நியப்படுத்திக் கொண்டனர்.தேசிய இனப்பிரச்சினைக்கு ஒரு தீர்வைக் காணத் தவறியமை. 1980 ஆம் ஆண்டுகளின் போது தமிழ் மக்களின் அரசியல் தலைமைத்துவத்தில் பூர்ஷ்வாவிலிருந்து குட்டி பூர்ஷ்வாவுக்கு மாற்றத்தை ஏற்படுத்திற்று.

துரதிர்ஷ்டவசமாக குட்டி பூர்ஷ்வாக்களின் வலதுசாரிப் பிரிவு தலைமைப் பொறுப்பை ஏற்றது. பின்னர் தமிழ் மக்களின் ஏகப் பிரதிநிதியாக அது தனக்குத் தானே கோரிக்கை விடுத்துக் கொண்டது. அது அதிதீவிர தேசிய வாதம் மாத்திரமன்றி, குறுகிய தேசிய இனவெறி அடிப்படையிலும் வன்முறை, பயங்கரவாதம், பிரிவினைவாதம் என்ற பாதையில் பிரவேசித்தது.

தேசிய ஒற்றுமைக்காகவும் ஜனநாயக வழியிலான அபிவிருத்திக்காகவும் ஐக்கிய இலங்கையின் கட்டமைவுக்குள் அரசியல் தீர்வுக்காகவும் முன்வந்த இடதுசாரிக் கட்சிகள் அனைத்தும் ஓரங்கட்டப்பட்டன. அல்லது அழிக்கப்பட்டன. மிதவாத பூர்ஷ்வா தலைவர்கள் கூட விட்டு வைக்கப்படவில்லை. மக்கள் மட்டத்திலும் முற்போக்குச் சக்திகள் மட்டத்திலும் வடக்குக்கும் தெற்கிற்கும் இடையிலான பாலம் தகர்ந்தது. கம்யூனிஸ்ட் கட்சி,லங்கா சமசமாஜக் கட்சி ஆகிய இடதுசாரி இயக்கத்தைச் சேர்ந்த நாமும் ஆரம்பம் முதலே தேசிய சிறுபான்மை இனங்களின் நோக்கங்களுக்காகவும் தேசிய ஒற்றுமைக்காகவும் நாட்டம் கொண்டிருந்தோம். 13 ஆவது திருத்தத்தை நடைமுறைப் படுத்துவதற்காகத் தமது உயிரைக் கொடுத்தவர்கள் கூட விட்டு வைக்கப்படவில்லை. பல்வேறு மட்டங்களிலும் பல்வேறு துறைகளில் இருந்த எமது தலைவர்களில் 54 பேர் மக்கள் விடுதலை முன்னணியினாலும் தமிழீழ விடுதலைப்புலிகளாலும் கொல்லப்பட்டனர்.

அக்குரஸ்ஸ துயரச் சம்பவத்தில் எல்.ரீ.ரீ.யினருக்கு பலிக்கடாவான ஐந்து பேர் எமது கட்சியின் இளம் மாவட்டத் தலைவர்கள், இவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள். மக்கள் விடுதலை முன்னணி நச்சுத்தன்மை வாய்ந்த தமிழ் விரோத, இந்திய விரோத,எல்.ரீ.ரீ.ஈ.விரோத அரசியல் நிலைப்பாடுகளைக் கொண்டிருந்த போதிலும் அதன் மீது எல்.ரீ.ரீ.ஈ. கை வைக்காதது வியப்புக்குரிய மர்மமான வரலாற்று உண்மையாகும். இரு பக்கங்களையும் சேர்ந்த அதிதீவிரவாதிகள் தமது பரஸ்பர இயக்கத்துக்கு உயிர் வாழ்வுக்குமாக ஒருவரை ஒருவர் போஷித்தும் போற்றி வளர்த்தும் வந்திருப்பதற்கு வரலாறு உண்மையிலேயே சான்று பகர்கின்றது.

கடந்த 30 ஆண்டுகளின் போது தெற்கிலுள்ள குறுகிய தேசிய இனவெறியர்களும் வடக்கிலுள்ள குறுகிய தேசிய இனவெறியர்களும் இடதுசாரி இயக்கம்,முற்போக்குச் சக்திகளைக் காட்டியே உயிர் பிழைத்தனர். சீவித்தனர்,செழுமையடைந்தனர். இவ்விதம் நாடு மிதவாதம்,ஒற்றுமை,ஐக்கிய உணர்வை இழந்தது. எமது கட்சி அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கான ஒரு மார்க்கமாகப் பயங்கரவாதத்தையோ,வன்முறையையோ ஒருபோதும் நாடியதில்லை. அதுபோலவே, எமது நோக்கங்களை முன்னெடுத்துச் செல்வதற்காகக் காடைத்தனம்,.துன்புறுத்தி இணங்க வைத்தல்,வன்செயல் ஆகியவற்றைக் கையாண்டதில்லை.

எமது கட்சி எப்போதுமே நாட்டுப்பற்று மிக்கதாக விளங்கி வந்துள்ளது. சம அளவில் எமது கட்சி சர்வதேசிய வாத கட்சி நாம் மனிதத்துவத்தைப் பற்றிப் பிழைத்திருப்பதால் நாட்டுப் பற்றும் சர்வதேசிய ஒரே நாணயத்தின் இரு பக்கங்களாக விளங்குகின்றன.

நாம் சோஷலிசக் கருத்தமைப்பை இந்த நாட்டில் அறிமுகப்படுத்தினோம். அதுபோலவே எமது நாட்டுக்குச் சோஷலிச நாடுகளை அறிமுகப்படுத்தியதும் எமது கட்சிதான் என்பதும் சம அளவில் உண்மையாகும். சுரண்டுகின்ற நிலவுடைமையின் பிதுரார்ஜிதமான சாதி முறைக்கு எதிராகத் தெற்கிலும் வடக்கிலும் போராட்டங்களை முன்னெடுத்ததும் எமது கட்சிதான்.

நாம் எமது மக்களை அறிவொளி மிக்கவர்களாக்கினோம். அவர்களின் மனங்களிலிருந்து மாயைகளையும் மூடநம்பிக்கைகளையும் களைந்தோம். இப்போது யுத்தம் முடிவுக்கு வந்துவிட்டது. வரலாறு மற்றுமொரு சந்தர்ப்பத்தை பொன்னான சந்தர்ப்பத்தை எமக்கு வழங்கியிருக்கிறது. அது,தேசிய ஒற்றுமைக்குப் போராடுவதும் அநீதியையும் பாரபட்சத்தையும் முடிவுக்குக் கொண்டு வருவதும் சமத்துவம்,சமூகநீதி,அபிவிருத்தி ஆகியவற்றை உறுதி செய்வதும் ஆகும்.

யுத்தம் முடிவடைந்த வேளையில்,வட மாகாணத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 2.9 சதவீதம் மாத்திரமே. யுத்த வலயத்துக்கு அணித்தாகவுள்ள வட,மத்திய,ஊவா மாகாணங்களின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 4 சதவீதமே. போரின் விளைவு வடக்குக்கும் கிழக்குக்கும் மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்டதாக இருக்கவில்லை. ஆயினும், மேல் மாகாணம் மொத்தத் தேசிய உற்பத்தியில் 51 சதவீதத்தைப் பெற்றது. இதற்கு யுத்தம் மாத்திரம் காரணமல்ல. ஐக்கிய தேசியக் கட்சியின் நவதாராளவாதக் கொள்கையும் ஒரு காரணம்.

ஆனால், கிராமியப் பொருளாதாரத்தை வியாபிப்பது,பிரதேச அபிவிருத்தி, உட்கட்டமைப்பு அபிவிருத்தி, சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழிலகங்கள் அமைத்தல் ஆகியவற்றின் மூலமாக கடந்த நான்கு ஆண்டு காலக் கொள்கை மாற்றத்தினால் இந்த நிலைமை மாற்றமடைந்துள்ளது.இதன் காரணமாகவே வடக்கு,கிழக்கில் உட்கட்டமைப்பு அபிவிருத்திக்கு நாம் ஆகக்கூடிய முன்னுரிமையைக் கொடுக்கின்றோம். சிவில் நிர்வாகத்தை மீண்டும் ஏற்படுத்த வேண்டும். அடிமட்டத்திலுள்ள நிறுவனங்களுக்குத் தமது தலைவர்களைத் தெரிவு செய்யும் வாய்ப்பு மக்களுக்கு அளிக்கப்பட வேண்டும்.அமைச்சரவையில் இருக்கும் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் என்ற வகையில் அரச கரும மொழியை நடைமுறைப்படுத்துவதில் எனது அமைச்சு துணிச்சலான,தீர்க்கமான நடவடிக்கைகளைத் துரிதமாக மேற்கொண்டது.

அமைச்சுகள், திணைக்களங்கள், உள்ளூராட்சி மன்றங்கள் ஆகியவற்றில் அரச கருமமொழிக் கொள்கையை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டது. இது அரச கரும மொழிகள் கொள்கையை நடைமுறைப்படுத்துவதற்கான பொறுப்பை ஒப்படைப்பது,மொழி நடைமுறைப்படுத்தல், பிரதான அலுவலரின் பொறுப்பு,மொழி நடைமுறைப்படுத்தல் அலுவலரின் பொறுப்பு ஆகியவற்றை வரையறுத்துக் கூறுகின்றது. அரச கரும மொழிக் கொள்கையின் நடைமுறைப்படுத்தலுக்கான பொறுப்பை ஒப்படைப்பது பற்றிய அறிக்கையின் மூலம் இந்த வர்த்தமானி அறிவித்தலை பொது நிர்வாக அமைச்சு நடைமுறைப்படுத்தும்.

இவ்வாறு இந்தக் கொள்கையை நடைமுறைப்படுத்துவதில் அமைச்சுகளில் அவற்றின் செயலாளர்களும் திணைக்களங்களுக்கு அவற்றின் தலைவர்களும் மாகாண சபைகளுக்கு பிரதம செயலாளர்களும் மாகாண அமைச்சுகளுக்கு அவற்றின் செயலாளர்களும் மாகாணத் திணைக்களங்களுக்கு அவற்றின் தலைவர்களும் மாநகர சபைகளுக்கு மாகாண ஆணையாளர்களும் நகர சபைகளுக்கு அவற்றின் செயலாளர்களும் பிரதேச சபைகளுக்கு அவற்றின் செயலாளர்களும் பிரதம அரச கரும மொழிகள் அமுலாக்கல் அலுவலர்களாக இருப்பார்கள். இது தவிர அரச கருமமொழிகள் அமுலாக்கல் அலுவலர்களும் உள்ளனர்.

அரச கரும மொழிகளை நடைமுறைப்படுத்துவதில் ஏட்டளவில் அன்றி செயலளவில் மேற்கொள்வதற்காக இத்தகைய நடவடிக்கைகளை எனது அமைச்சு மேற்கொண்டது. இத்தகைய திட்டத்தை அமுல்படுத்துவதில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ முழுமையான ஒத்துழைப்பை வழங்கினார் என்பதைக் குறிப்பிட்டாக வேண்டும். இந்தப் பூர்வாங்க நடவடிக்கைகள் ஒரு நிலையான அரசியல் தீர்வுக்கான தேடலுக்கு வாய்ப்பளிக்கக் கூடிய இசைவான சூழலை உருவாக்கும் என நான் நம்புகிறேன். சிங்கள, தமிழ் சமூகங்களுக்கு இடையே ஒரு பெரும் இடைவெளி இருப்பதை ஏற்றுக் கொண்டே ஆகவேண்டும். இந்த இடைவெளியை நாம் மக்கள் மத்தியில் நிரப்ப வேண்டும். பரஸ்பர அச்சம், அவநம்பிக்கை, சந்தேகம் ஒழித்துக் கட்டப்பட வேண்டும். யுத்தம் தீவிரமடைந்திருந்த வேளையிலும் கூட தமிழ் பேசும் மக்களில் 61 சதவீதமானவர்கள் வடக்குக்கும் கிழக்குக்கும் வெளியே, சிங்கள மக்கள் மத்தியில் அச்சமும் சந்தேகமும் இல்லாமல் வாழ்ந்தார்கள் என்ற உண்மையை நாம் குறைவாக மதிப்பிட்டுவிடக் கூடாது.

தெற்கிலும் வடக்கிலும் உள்ள இடதுசாரி, முற்போக்கு, ரெடிக்கல் சக்திகளின் நெருங்கிய ஒத்துழைப்பின் மூலமே நாம் விரும்புகின்ற தேசிய ஒற்றுமையை அடைய முடியும் என்பது எனது அசைக்க முடியாத நம்பிக்கை. பயங்கரவாதமும் யுத்தமும் இடதுசாரி, முற்போக்கு இயக்கங்களைப் பலவீனப்படுத்திவிட்டன. சர்வதேச அரங்கில் தற்போது இடம்பெற்று வரும் ஆழமான மாற்றங்கள் பற்றி உங்களிடம் கூறுவதற்கு நான் இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தியாக வேண்டும்.

இருபது ஆண்டுகளுக்கு முன்னர் 1989 ஆம் ஆண்டு பெர்லின் சுவர் தகர்க்கப்பட்ட வேளையில், அதாவது சோஷலிச நாடான கிழக்கு ஜேர்மனி வீழ்ச்சியடைந்த வேளையில், அதைத் தொடர்ந்து சோவியத் ஒன்றியம் வீழ்ந்த வேளையில், பூர்ஷ்வா தலைவர்கள் சோஷலிசம் முடிந்து விட்டதாகக் ஹேஷ்யம் கூறினார்கள். ஆனால், நாம் எதிர்பார்த்ததைவிட வேகமாக உலக அரங்கு மாற்றமடைந்து வருகிறது. சீனாவும் இந்தியாவும் உலகப் பொருளாதார வல்லரசுகளாகத் தோற்றம் பெற்றுள்ளன. மேற்கு நாட்டு வல்லரசுகளின் 500 ஆண்டுகால ஆதிக்கத்துக்குப் பின்னர் உலகப் பொருளாதாரத்தின் கேந்திரம் ஆசியக் கண்டத்துக்கு மாறி வருகின்றது.

உலக முதலாளித்துவத்தின் தொட்டில்களான அமெரிக்காவும் மேற்கு ஐரோப்பாவும் உலகளாவிய நிதி நெருக்கடி மோசமடைந்ததன் காரணமாகச் சரிந்து விட்டன. லத்தீன் அமெரிக்காவின் புத்தெழுச்சி பதின்மூன்று இடதுசாரி மற்றும் இடதுசாரிக்கு ஆதரவான கட்சிகளை ஆட்சிக் கட்டில்களில் ஏற்றியது. லத்தீன் அமெரிக்காவில் பிரேஸில், ஆபிரிக்கக் கண்டத்தில் தென்னாபிரிக்கா, சீனா, இந்தியா ஆகியவற்றுடன் ஐரோப்பியஆசியாவில் ரஷ்யா ஆகிய புதிய பொருளாதார மையங்கள் உலகப் பொருளாதார வல்லரசுகளில் சமநிலையை முற்றாக மாற்றி அமைத்துள்ளன.

டொலரின் மதிப்பு பலவீனமடைந்துவிட்டது. உலக வெளிநாட்டுச் செலாவணி ஒதுக்கத்தில் 75 சதவீதம் இன்று வளர்முக நாடுகளுக்கு உரியவை. உலக வெளிநாட்டுச் செலாவணி ஒதுக்கத்தில் மூன்றில் ஒரு பங்கு இப்போது சீனாவுக்கும் உரியதாகும். உலக நிகழ்வுகளின் புதிய எதார்த்தங்கள் இவை. எனவேதான் இலங்கை சம்பந்தமான விவகாரங்கள் பற்றிய சம மத்தியக் கூட்டத் தொடர்களில் மேலைய வல்லரசுகள் தமது சொந்த எண்ணங்களை நிறைவேற்றத் தவறியுள்ளன.

மக்கள் விடுதலை முன்னணி குறுகிய சிங்கள தேசிய இனவெறி அலைகளில் தனது பயணத்தை மேற்கொள்கின்றது. இந்திய விஸ்தரிப்பு வாதம் என்ற அலைகள் தனது பயணத்தை மேற்கொள்கின்றது. உலக இடதுசாரி இயக்கம் புத்துயிர் பெற்றுள்ளது. கம்யூனிஸ்டுகள், சோஷலிஸ்டுகள், இடதுசாரி கட்சிகள் மத்தியில் ஒருமைப்பாட்டின் உலகமயமாக்கல் இப்போது நிலவுகிறது. இயல் நிகழ்வு தற்போது வீழ்ச்சி கண்டு வருகின்றது. மக்கள் விடுதலை முன்னணிக்குள் உள்ள கருத்து வேறுபாடுகள் பல்வேறு பிரிவுகளாக அது பிளவுபடுவதற்கு வழிவகுத்துள்ளது.

இன்று வடக்கிலும் தெற்கிலும் உள்ள இரண்டு இடதுசாரி சக்திகளும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஜனாதிபதித் தேர்தலில் கூட்டாக ஆதரவு திரட்டுகின்றன. எதார்த்தத்தை கவனத்தில் கொண்டோமானால் வேறு தெரிவு நமக்குக் கிடையாது. உலகச் சக்திகளின் சமபலமும் இலங்கையின் அரசியல், சமூக சக்திகளின் சம பலமும் மாற்றத்துக்குள்ளாகியிருப்பதே இதற்குக் காரணம். கடந்த நான்கு ஆண்டுகளில் மகிந்த ராஜபக்ஷவின் அரசாங்கம் செயல்பட்ட விதம், ஓய்வுபெற்ற இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவின் பிரவேசத்தோடு இராணுவ ஆட்சி ஏற்படக்கூடிய ஆபத்து, இலங்கையின் விவகாரங்களில் மேற்குநாட்டு வல்லரசுகளின் நேரடியானதும் மறைமுகமானதுமான தலையீடு, தெற்கிலும் வடக்கிலும் ஐக்கியப்பட்ட இடதுசாரி இயக்கத்துக்கான வளர்ந்தோங்கி வரும் அவசியம் ஆகியவை இந்த எதார்த்தங்கள்.

இந்த நாட்டில் தேசிய ஒற்றுமையை உருவாக்குவதற்கு தென்பகுதி மக்களுடன் கைகோர்த்துச் செயல்படுமாறு வட பகுதி மக்களுக்கு எனது நேசக்கரத்தை நீட்டுகின்றேன். வட பகுதியில் உள்ள எமது தோழர்களுக்கும் இடதுசாரி இயக்கத்தைச் சேர்ந்த அனைத்து சக்திகளுக்கும் பிரிந்து நிற்கும் இடதுசாரி இயக்கத்தைக் கட்டியெழுப்புமாறு நான் நேசக்கரம் நீட்டுகின்றேன்.

சிங்கள,தமிழ்,முஸ்லிம் மக்களைப் பொறுத்தவரையில் உறுதியான அடித்தளங்கள் மீது ஒரு மறு சிந்தனை ஏற்பட்டிருக்கின்றது. ஒரு புதிய சூழ்நிலை உருவாக்கப்பட்டு வருகின்றது. எமக்களிக்கப்பட்ட இந்தப் பொன்னான சந்தர்ப்பத்தைச் சிறப்பான முறையில் பயன்படுத்திக் கொள்வோம்.

நன்றி- தேனீ இணையம்

No comments:

Post a Comment