31 March 2011

யாழ். மண்ணில் பௌத்த வரலாற்று பொக்கிஷம்

மதங்களின் வரலாறுகளைப் பறைசாற்றும் வகையில் பல்வேறு இடங்களிலும் பலவாறான வரலாற்றுப் பொக்கிஷங்கள் காணப்படுகின்றமை சிறப்பானதாகும். இருப்பினும் குறித்தவொரு பிரதேசத்துக்கு மாத்திரமே வரையறுக்கப்பட்டுள்ள சமய கலாசார சின்னங்களுக்கு மத்தியில் மற்றுமொரு மதத்தை வலியுறுத்தும் அதுவும் ஆயிரக்கணக்கான ஆண்டுகள் பழமைவாய்ந்த பொக்கிஷங்கள் காணப்படுவதென்பது அதிசயிக்கத்தக்க விடயமாகும்.
அந்தவகையில், தமிழர் தாயகமாம் யாழ். மண்ணில் அமைந்துள்ள வரலாற்றுப் புகழ்மிக்க புராதன விகாரையொன்று பற்றிய கண்ணோட்டமே இது. யாழ். சுண்ணாகம், கந்தரோடை பிரதேசத்தில் அமைந்துள்ளது இந்த வரலாற்றுப் புகழ்பெற்ற கந்தரோடை புராதன விகாரை. சுமார் 2,500 வருடங்கள் பழமை வாய்ந்த இந்த விகாரையில் பல்வேறு அளவுகளில் அமைக்கப்பட்டுள்ள தூபிகளே விசேடமானவை.
இலங்கைக்கு வருகை தந்த புத்த பெருமான் யாழ். நாகவிகாரைக்கு செல்வதற்கு முன்னர் இந்த கந்தரோடை விகாரை அமைக்கப்பட்டுள்ள பிரதேசத்துக்கு முதன் முதலில் வந்து ஓய்வு பெற்றதாகவும், அங்கிருந்தவாறே பல்வேறு தியானங்களில் ஈடுபட்டதாகவும் கந்தரோடை விகாரையின் வரலாறு கூறும் கண்டி இராசதானிக்கு உரித்தான விகாரைகள் மற்றும் புண்ணிய பூமிகள் தொடர்பான புத்தகமான 'நாமாவலிய'வில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, அரசமரக் கிளையுடன் இலங்கை வந்த சங்கமித்தை பிக்குனியுடன் 60 பிக்குமார்கள் வருகை தந்ததுடன் அவர்கள் அனைவரும் இந்த கந்துருகொட விகாரை அமைந்துள்ள பிரதேசத்திலேயே தங்கியிருந்ததாகவும் வரலாறுகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேற்படி 60 பிக்குமார்களும் இங்கிருந்தவாறே நாடு முழுவதிலும் பல்வேறு பௌத்த போதனைகளை மேற்கொண்டதாகவும் கூறப்படுகின்றது.
இவ்வாறிருக்க, புங்குடுதீவு பிரதேசத்தில் அமைந்துள்ள கிராமமொன்றில் வழங்கப்பட்ட அன்னதான நிகழ்வொன்றில் கலந்துகொள்ளச் சென்ற மேற்படி பிக்குமார்கள், அங்கு உணவுடன் வழங்கப்பட்ட காளான் கறி விஷமானதில் அவ்விடத்திலேயே உயிர் துறந்துள்ளனர். இதனையடுத்து பிக்குமார்கள் தங்கியிருந்த கந்தரோடை பிரதேசத்துக்கே அவர்களின் உடல்கள் கொண்டுவரப்பட்டு புதைக்கப்பட்டுள்ளன.


No comments:

Post a Comment