வன்னி திரும்பிய முதியவர்கள் பலர் வறுமை,தனிமையால் பரிதவிப்பு
மோதலினால் இடம்பெயர்ந்து பின்னர் வட பகுதிக்கு திரும்பிச் சென்றவர்களில் ஆயிரக்கணக்கான முதியவர்கள் தனிமைப்படுத்தப்பட்ட நிலையிலும் மருத்துவப் பராமரிப்பு தேவைப்படுபவர்களாக இருப்பதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.
இந்த மக்களுக்கு உதவுவதற்கான எந்தவொரு நிகழ்ச்சித்திட்டங்களும் இல்லையென்று கெல்ப் ஏஜ் சிறிலங்காவின் நிறைவேற்றுப் பணிப்பாளர் சமந்த லியன வதுகே கூறியுள்ளார். வயது முதிர்ந்த இந்த மக்களுக்கு உதவியளிக்கும் சில அமைப்புகளில் ஒன்றாக இந்த கெல் ஏஜ் சிறிலங்கா காணப்படுகிறது.
நிராதரவான நிலையிலுள்ள முதியவர்களின் எண்ணிக்கை தொடர்பாக உத்தியோகபூர்வமான தகவல்கள் கிடைக்கவில்லை. ஆயினும் வன்னியில் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் 60 வயதைத் தாண்டியவர்களாக இருப்பதாக மதிப்பீடுகள் தெரிவிப்பதாக ஐ.ஆர்.ஐ.என். செய்திச் சேவை தெரிவித்துள்ளது.
2009 மே யில் யுத்தம் முடிவடைந்த பின்னர் 3 இலட்சத்து 20 ஆயிரம் இடம்பெயர்ந்த மக்கள் தமது வீடுகளுக்கு திரும்பிச் சென்றோ அல்லது உறவினர்களுடனோ தங்கியிருப்பதாக ஐ.நா. அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
இந்த மக்களில் முதியவர்கள் உளநிலை பாதிக்கப்பட்டவர்களாக அல்லது தனித்துவிடப்பட்டவர்களாகக் காணப்படுவதாகவும் தமது அன்றாடத் தேவைகளை நிறைவேற்ற போராடிக் கொண்டிருப்பதாகவும் சமூகப் பணியாளர்கள் கூறுகின்றனர். குடும்ப ஆதரவு இல்லாத முதியவர்கள் பலர் வறுமையையும் தனிமையையும் மற்றவர்களில் தங்கியிருக்கும் நிலைமையையும் உடல் நலக் குறைவையும் போஷாக்கின்மையையும் எதிர்நோக்குவதாக சுகாதாரப் பராமரிப்பு அவர்களுக்குக் கிடைக்கவில்லையெனவும் தெரிவிக்கப்படுகிறது.
No comments:
Post a Comment