10 February 2014

மாகாணசபை மூலம் தேசிய பிரச்சனைக்கு தீர்வு கிடைக்காது என்பது தெளிவாகிறது.

மாகாண சபை மூலம் தேசிய பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும் என்று கூறப்பட்டது. ஆனால் அது சாத்தியமில்லை என்பதை தற்போது காண முடிகின்றது. வட மாகாண சபை தேர்தல் முடிந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அங்கு ஆட்சியமைத்துள்ளது. இருந்தபோதும் தமிழர்களது பிரச்சினை தீர்ந்தபாடில்லை. எனவே இந்த யதார்த்த நிலையினை அரசாங்கமும் தமிழ் கூட்டமைப்பினரும் உணர வேண்டும். எனவே, மாகாண சபை முறைமையை விட வேறு நல்ல முறைமையினை ஏற்படுத்த வேண்டுமென தெரிவித்துள்ள பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞான சார தேரர் மேலும் தெரிவிக்கையில் 

வட மாகாண மக்களின் பிரச்சினைகளை சரியாக இனங்கண்டு அம்மக்களின் மனங்களை வெற்றி கொள்ளும் வகையிலான வேலைத்திட்டங்களை முன்னெடுக்க வேண்டும். அதேபோன்று இலங்கை பிரச்சினைகள் என்ற வகையில் தமிழ், சிங்களம் என்ற இன வேறுபாடுகளை மறந்து தாய் நாட்டை நேசிக்க வேண்டும்.


அனைத்து மக்களின் மனங்களைக் கவரும் வகையிலான வேலைத்திட்டமின்மை மற்றும் முறையான வெளிநாட்டுக் கொள்கையின்மை போன்ற காரணங்களினாலேயே இந்தளவு சர்வதேச அழுத்தங்களுக்கு நாடு முகம்கொடுக்க வேண்டி ஏற்பட்டுள்ளது. 

மனித உரிமைகள் பிரச்சினையினை மேற்குலகம் தமது அரசியல் ஆயுதமாக பயன்படுத்துகிறது. மனித உரிமைகள் பற்றிப் பேசுகின்ற சர்வதேச நாடுகள் புலிகள் இயக்கம் மேற்கொண்ட மனித உரிமை மீறல்கள் பற்றி பேசுவதில்லை. எனவே அவர்களது சுயாதீனமற்ற செயற்பாட்டினை நன்றாக அறிய முடிகின்றது.

எதிர்வரும் மார்ச் மாதம் இலங்கைக்கு எதிராக ஜெனீவா மனித உரிமைகள் பேரவையில் பிரேரணையொன்றினைக் கொண்டு வருவதற்கு சர்வதேச நாடுகள் தீவிரம் காட்டி வருகிறது. அவ்வாறு இலங்கைக்கு எதிராகக் கொண்டு வரப்படும் பிரேரணையால் ஏற்படும் பாதிப்புக்கள் இலங்கையர்களான நம் அனைவருக்குமே தாக்கத்தை ஏற்படுத்தும் எனவே இந்தத் தருணத்தில் மிகவும் அவதானமாக செயற்பட வேண்டும்.

அரசாங்கமும் இவ்வாறான சர்வதேச அழுத்தங்கள் நாட்டுக்கு வராத வகையிலான வேலைத்திட்டங்களைச் செய்ய வேண்டும். அவ்வாறு செய்யும் பட்சத்தில் சர்வதேச நாடுகள் தேவையற்ற வகையில் எமது நாட்டின் உள்ளக விவகாரங்களில் தலையிடாது.

மூன்று தசாப்தங்களுக்கு மேலாக நாட்டைப் பீடித்திருந்த யுத்தம் தற்போது முடிவுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது. யுத்தத்தில் இன, மத, மொழி வேறுபாடின்றி அனைவரும் பாதிக்கப்பட்டார்கள். ஆனால் அவ்வாறானதொரு நிலைமை தற்போது இல்லை. எனவே அந்த யதார்த்தத்தை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்.

மீண்டுமொரு யுத்தத்திற்கோ, பிரிவினை வாதத்திற்கோ இடமளிக்கக் கூடாது. அரசாங்கமும் இந்த விடயத்தைக் கருத்திற் கொண்டு ஐக்கியத்தையும் நல்லிணக்கத்தையும் ஏற்படுத்தும் வகையிலான வேலைத்திட்டங்களை முன்னெடுக்க வேண்டும் என்றார்

No comments:

Post a Comment