17 February 2014

இலங்கைக்கு எதிராக இந்தியா தனித்தீர்மானம் கொண்டுவர வேண்டும்.

இலங்கை அரசுக்கு எதிராக அமெரிக்க அரசு கொண்டுவரவுள்ள தீர்மானததிற்கு இந்தியா ஆதரவு வழங்குவதோடு இந்தியா இலங்கை அரசுக்கு எதிராக  தனியாகவும் ஒரு தீர்மானத்தை ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் முன்மொழிந்து நிறைவேற்றுவதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டுமென திருச்சியில் இடம் பெற்ற தி.மு.க வின் 10வது மாநில மாநாட்டில் 15 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இத் தீர்மானங்களில் மூன்றாவதாக ஈழத் தமிழர் பிரச்சினை தொடர்பாக குறிப்பிடப்பட்டுள்ளதாவது,   இலங்கையில் நடைபெற்ற தமிழினப் படுகொலை, மற்றும் இன அழிப்புக் கொடுமைகளைக் கண்டித்து ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தில் மீண்டும் அமெரிக்கா வருகின்ற மார்ச் மாதம் தீர்மானம் கொண்டுவர முடிவு செய்துள்ளது.   இப்பிரச்சினையில் இலங்கை அரசு மீது சுதந்திரமான சர்வதேச விசாரணை வேண்டுமென்று கடந்த 2009 முதல் உலகத் தமிழ்ச் சமுதாயமும், சர்வ தேச சமூகத்தின் பல்வேறு அமைப்புகளும் வலியுறுத்தி வருகின்றன.    கடந்த காலத்தில் இரண்டு முறை இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் அமெரிக்காவினால் முன்னெடுத்துச் செல்லப்பட்டு நிறைவேற்றப்பட்டது. 

இலங்கையில் நடைபெற்ற பொதுநலவாய மாநாட்டில் கலந்துகொண்ட பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கமரூன் இலங்கையில் நடந்த இனஅழிப்புக்கு சுதந்திரமான சர்வதேச விசாரணை வேண்டுமென்று வலியுறுத்தியுள்ளார். அதை பிரிட்டிஷ் அரசாங்கம் முன்னெடுத்து செல்லும் என்று உறுதியளித்துள்ளார்.    அமெரிக்காவில் உள்ள அமெரிக்க தமிழ்ச் சங்கப் பேரவை, இலங்கை தமிழ்ச் சங்கம், அமெரிக்கத் தமிழ் அரசியல் செயல்பாட்டுக் குழுமம் மற்றும் உலகத் தமிழ் அமைப்பு ஆகிய அமைப்புகள் கடந்த 22.1.2014 அன்று தலைவர் கலைஞர் அவர்களுக்கு எழுதிய வேண்டுகோள் கடிதத்தில், சுதந்திரமான சர்வதேச விசாரணைக்கு தலைவர் கலைஞர் அவர்கள் இந்திய அரசை வலியுறுத்த வேண்டுமென்று கேட்டுக் கொண்டுள்ளன.   

தற்போது அமெரிக்கா சென்றுள்ள இலங்கை அதிபர் ராஜபக்ஷவின் செயலாளர் லலித் வீரதுங்கா அமெரிக்காவினால் முன்மொழியப்படும் தீர்மானத்தை முறியடிக்க ஐ.நா. உறுப்பு நாடுகளிடம் ஆதரவு திரட்ட, தங்கள் நாட்டுப் பிரதிநிதிகள் வௌ;வெறு நாடுகளுக்கு அனுப்பப்பட்டு வருவதாகவும் கூறியுள்ளார். இது மனித உரிமையில் நாட்டமும் நம்பிக்கையுமுள்ள அனைவருக்கும் அதிர்ச்சியளிக்கக் கூடியதாகும்.    இந்நிலையில் வருகின்ற மார்ச் மாதம் நடைபெறவிருக்கும் ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில், இலங்கை அரசின் நோக்கத்திற்கு எவ்விதத்திலும் துணை போகாமல், இலங்கை அரசுக்கு எதிராக அமெரிக்க அரசு முன்மொழிய உள்ள தீர்மானத்தை ஆதரிப்பதோடு, சுதந்திரமான சர்வதேச விசாரணை வேண்டுமென்றும், ஈழத் தமிழர்கள் விரும்பும் அரசியல் தீர்வினை அவர்களே தேர்ந்தெடுத்துக் கொள்வதற்கு ஏதுவாக ஐ.நா. மன்றத்தின் மேற்பார்வையில் பொது வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டுமென்றும், இந்திய அரசே தனியாகவும் ஒரு தீர்மானத்தை ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் முன்மொழிந்து நிறைவேற்றுவதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டுமென்று இம்மாநில மாநாடு இந்திய அரசை வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறது என தீர்மாணம் நிறைவேற்றப்பட்டுள்ளது. 

No comments:

Post a Comment