13 February 2014

பிரேரணையை தோற்கடிக்க நடவடிக்கைகள்

இலங்கைக்கு எதிராக ஜெனீவாவில் கொண்டு வரப்பட உள்ள பிரேரணையை தோற்கடிப்பதற்கு சகல மட்டத்திலுமான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி யின் தலைமையகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் தெரிவித்துள்ளார். 

அவர் மேலும் அங்கு தெரிவிக்கையில் ஜெனீவா பிரச்சினையின் பாரதூரத்தை உணர்ந்தே தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அதனை வெற்றிகொள்வதற்கு தேவையான திட்டங்கள் தயாரிக்கப்பட்டு அவற்றை பல்வேறு மட்டங்களில் முன்னெடுத்து வருவதாக குறிப்பிட்ட அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா இலங்கை குறித்து விசாரணை நடத்துவதற்கு முன்பாக மனித உரிமை மீறல்கள் குறித்து தாம் ஈராக்கிலும் ஆப்கானிஸ்தானிலும் செய்த குற்றச் செயல்கள் குறித்தும் அமெரிக்காவும் பிரிட்டனும் விசாரணை நடத்த முன்வர வேண்டுமென்றார். 

எமது முயற்சியின் பலன் எதிர்காலத்தில் தெளிவாக தெரிவும். இலங்கைக்கு எதிரான சர்வதேச சக்தி குறித்தும் அதற்கு உதவும் இலங்கை தரப்பினர் குறித்தும் தெளிவாக அறிந்தே எமது நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதோடு, எமக்கு எதிரான போலி பிரசாரங்களுக்கு பதில் வழங்கவும் பல்வேறு மட்டங்களில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார்

வட மாகாண சபையில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானம் குறித்து தெரிவிக்கையில் வட மாகாண தீர்மானத்தினால் இலங்கைக்கு புதிதாக எந்த அழுத்தமும் ஏற்படாது. தமிழ் டயஸ்போரா குழுக்களே வட மாகாண சபையை ஆட்டுவிக்கிறது. வடபகுதி மக்கள் எம்முடனே பேச முன்வரவேண்டும். தந்தை இங்கிருக்க வேறு நாட்டிலுள்ள சிறிய தந்தையுடன் பேசுவது உகந்ததல்ல. வட மாகாண சபையை அழிப்பதற்கே இது வழிவகுக்கும்.

வட மாகாண சபையுடன் ஒத்துழைப்புடன் செயற்பட அரசாங்கம் எப்பொழுதும் தயாராகவே உள்ளது. நாம் சமாதானத்தின் கரங்களை நீட்டுகையில், அவர்கள் கையை கடித்து விடுகிறார்கள் என்றார்.

No comments:

Post a Comment