08 February 2014

இலங்கை மீனவர்களின் ஜீவனோபாயம் பாதிக்கப்படாமல் இந்தியாவுடன் பேச்சு

இலங்கை மீனவர்களின் நலனுக்குப் பாதகம் ஏற்படாத வகையில் இலங்கை, இந்திய மீனவர் விவகாரத்தை சுமுகமான முறையில் தீர்ப்பதற்கு வெளிவிவகார அமைச்சு, பகிரங்கமாக வெளிப்படுத்தாத பல தொடர் நடவடிக்கைகளை எடுத்து வருவதாக இலங்கை வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.

இந்திய மீனவர்கள் இலங்கையின் கடல் எல்லைக்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபடுவதால் இலங்கை மீனவர்களின் ஜீவனோபாயம் பாதிக்கப்பட்டுவிடக்கூடாது என்பதில் வெளிவிவகார அமைச்சு தொடர்ந்தும் அக்கறை காட்டி வருவதாகவும், இரு நாட்டு மீனவர் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு தொடர்ச்சியான நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்ததாகவும் வெளிவிவகார அமைச்சு விடுத்திருக்கும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ், இவ்விடயம் தொடர்பில் இந்தியத் தலைவர்களுடனான சந்திப்புக்களின் போது கூடுதல் கவனம் செலுத்தியுள்ளார்.

அண்மையில் ஜெருசலேமுக்கு விஜயம் மேற்கொண்டிருந்தபோது, அங்கிருந்து இந்திய வெளிவிவகார அமைச்சர் சல்மான் குர்ஷித்துடன் தொலைபேசியில் கலந்துரை யாடியிருந்தார். இதன் தொடர்ச்சியாக ஜனவரி மாதம் நடுப் பகுதியில் இந்திய, இலங்கை மீனவர்கள் பரஸ்பரம் சிறையிலிருந்து விடுவிக்கப்படுவதற்கான நடைமுறை செயற்பாட்டுக்கு வந்தது என்றும் வெளிவிவகார அமைச்சின் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அதற்கு முன்னதாக 2013ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ், இந்தியாவுக்குச் சென்றிருந்த போது அந்நாட்டு வெளிவிவகார அமைச்சரிடம் இந்திய மீனவர்களின் அத்துமீறல் தொடர்பில் முறைப்பாடு செய்திருந்ததுடன், கடந்த ஜனவரி மாத இந்திய விஜயத்தின்போது இவ்விடயம் குறித்து பிரஸ்தாபிக்கப்பட்டதாகவும் வெளிவிவகார அமைச்சின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை மீனவர்களின் ஜீவனோபாயம் பாதிக்கப்பட்டு விடக்கூடாது, பாதுகாக்கப்பட வேண்டும் என்பதில் வெளிவிவகார அமைச்சு தொடர்ந்தும் உயர்மட்ட ஈடுபாடு காட்டி வருகிறது. இவ்விடயத்தில் இரு நாட்டுக் குமிடையில் கூடுதலான புரிந்துணர்வு ஏற்படுவதற்கும் அமைச்சு வழிவகுத் திருப்பதாக அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கையின் வெளிவிவகாரக் கொள்கையை நடைமுறைப் படுத்துவதில் பொறுப்பு வாய்ந்த அமைச்சாக வெளிவிவகார அமைச்சு காணப்படுகிறது. வெளிவிவகார அமைச்சானது பொருத்தமான வழிவகைகள் மூலமாக இராஜதந்திர நடைமுறையில் ஏற்றுக்கொள்ளப்பட்ட வழக்கங்களுக்குள் ஏற்றுக்கொள்ளப்பட்ட தேசிய கொள்கைக் குறிக்கோள்களை நடைமுறைப்படுத்தி வருவதாகவும் வெளிவிவகார அமைச்சு தெரிவித் துள்ளது.

தேசிய முக்கியத்துவம் வாய்ந்த விடயங்களில் அரசாங்கத்துக்கு ஒத்துழைப்பாக ஏனைய அமைச்சுக் களுடனும், முகவர் நிறுவனங்க ளுடனும் தொடர்புகொண்டு செயற்பட்டு வருகிறது. இவ்விடயங்கள் தொடர்பில் வெளிவிவகார அமைச்சானது பகிரங்கப்படுத்தாத நடைமுறையைப் பின்பற்றி வந்துள்ளது என்றும் வெளிவிவகார அமைச்சின் அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது. 

No comments:

Post a Comment