13 August 2014

பொலிசார்- பொதுமக்கள் மோதல் - பொலிஸ் ஜீப் தீக்கிரை- ஐவர் காயம்

மட்டக்களப்பு மாவட்டம் கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவில் காஞ்சிராங்குடா பனையறுப்பான் என்னுமிடத்தில் நேற்று மாலை(12-08-2014) பொலிஸாருக்கும் பொதுமக்களுக்கும் இடையில் ஏற்பட்ட மோதலில் பொலிஸ் ஜீப் வண்டி தீவைத்து எரிக்கப்பட்டுள்ளதோடு 3 பொலிஸாரும் 2 பொதுமக்களும் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
 
இச் சம்பவம் தொடர்பாக தெரிவிக்கப்படுவதாவது கள்ளச்சாராய விற்பனையாளர்களைக் கைது செய்வதற்காக அங்கு சென்ற பொலிஸார் மீதே நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவத்தில் பொலிசார் மூவர் படுகாயமடைந்துள்ளனர் எனத் தெரிவித்துள்ள பொலிசார் காயமடைந்தவர்கள் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அவசர பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், இரு பொலிசாரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. 

எட்டுப் பேர் சென்ற பொலிஸ் அணியில் மூவர் கிராமவாசிகளால் தாக்குதலுக்குள்ளானதாக தெரிவிக்கப்படுகிறது. தாக்குதலுக்குள்ளானவர்களான பொலிஸ் உத்தியோகத்தர் வீரசிங்ஹ (60217) மற்றும் விக்கிரமசிங்ஹ (43029) ஆகியோராவர்
 
இதேவேளை பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்ததாகக் கூறப்படும் கிராமவாசியான வள்ளியம்மை (வயது 52) என்பவர் வயிற்றில் காயம்பட்ட நிலையிலும், ஆறுமுகம் சறோஜினி (வயது 24) என்பவர் கையில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான நிலையிலும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
 
கொக்கட்டிச்சோலைப் பகுதிக்கு அருகிலுள்ள பொலிஸ் நிலையங்களிலிருந்து மேலதிக பொலிஸார் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த சம்பவ இடத்திற்கு த.தே.கூ பாராளுமன்ற உறுப்பினர், மாகாணசபை உறுப்பினர் இரா. துரைரெத்தினம் ஆகியோர் சென்று நிலைமைகளை நேரில் பார்த்தனர்.

No comments:

Post a Comment