11 August 2014

நிறைவேற்று அதிகாரம் - 30 ஆண்டு யுத்தத்துக்கு முடிவுகட்டியது இந்த நிறைவேற்று அதிகாரந்தான்

ஊவா மாகாண சபைத் தேர்தல் சூடு பிடித்திருக்கும் இந்த வேளையில் நிறைவேற்று அதிகாரம் தொடர்பான சர்ச்சையும் எதிர்க்கட்சிகளால் இப்போது தூக்கிப் பிடிக்கப்பட்டிருக்கிறது.

நிறைவேற்று அதிகார முறை நாட்டிலிருந்து ஒழிக்கப்பட வேண்டுமென்பதே எதிர்க் கட்சிகளின் கோரிக்கையாக இருக்கிறது.

நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதி முறையை இந்த நாட்டுக்கு அறிமுகப்படுத்தியவர்கள் ஐக்கிய தேசியக் கட்சியினரே. 1978 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட புதிய அரசியல் யாப்பின் கீழ் இந்த முறை நாட்டுக்குள் திணிக்கப்பட்டது.

முன்னாள் ஜனாதிபதி ஜே. ஆர். ஜெயவர்த்தன தலைமையிலான ஐ. தே. க. அரசு 1977 ஆம் ஆண்டு தேர்தலில் அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சியமைத்து அவசர அவசரமாக அரசியல் யாப்பை மாற்றியதோடு நிறைவேற்று அதிகார முறையையும் கொண்டுவந்தது.

அதிகாரங்கள் ஓரிடத்தில் குவிக்கப்பட்டிருப்பதால் பாராளுமன்றத்துக்குரிய அதிகாரங்கள் மட்டுப்படுத்தப்படுகிறதென்பது அரசியல் கட்சிகளின் வாதமாக இருக்கிறது. அதேநேரம் இந்த நாட்டின் சிறுபான்மை மக்களுக்கு பாதுகாப்பானதொரு அரசியல் யாப்பாக இது இருக்கிறதென தமிழ், முஸ்லிம் கட்சிகள் கருதுகின்றன.

1978 ஆம் ஆண்டு கொண்ட வரப்பட்ட இந்த அரசியல் யாப்பானது நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை அறிமுகப்படுத்தியது. இதன் மூலம் தான் நினைத்ததையெல்லாம் செய்யலாமென இந்த நாட்டின் முதலாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியான ஜே. ஆர். ஜயவர்த்தனா கருதினார்.

“இந்த அரசியலமைப்பு மூலம் ஆணை பெண்ணாக்குவதும் பெண்ணை ஆணாக மாற்றுவதையும் தவிர என்னால் எல்லாவற்றையும் செய்ய முடியும்” என அரசியலமைப்பின் பிதாமகன் ஜே. ஆர். ஜெயவர்த்தனா அப்போது கூறியிருந்தார். இந்தக் கூற்றின் மூலம் அவருடையதும் ஐக்கிய தேசியக் கட்சியினதும் இலக்கு என்ன என்பது தெளிவாகின்றது.

இந்த அரசியல் யாப்பின் தந்தை முன்னாள் ஜனாதிபதி ஜே. ஆர். ஜெயவர்தனா, அவருடைய பதவிக் காலத்தின் பின்னர் ஆர். பிரேமதாசா, டி. பி. விஜயதுங்க, திருமதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க ஆகியோர் ஆட்சி பீடத்தில் இருந்தார்கள். இப்போது ஜனாதிபதியாக இருக்கின்ற மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஐந்தாவது ஜனாதிபதி.

நடைமுறையில் இருக்கின்ற அரசியல் யாப்புக்கு இப்போது 36 வயதாகின்றது. நிறைவேற்று அதிகார முறையை ஒழிக்க வேண்டுமென்ற கோஷம் 36 வருடங்களாக இருந்து வருகின்றதென்பது உண்மை. ஆனால், ஆட்சியில் இருந்த எவரும் இந்த முறையை இல்லாதொழிப்பதில் ஆர்வம் காட்டியதாகத் தெரியவில்லை.

இந்த அரசியலமைப்பின் கீழ், நிறைவேற்று அதிகாரம், பாராளுமன்றம், நீதித்துறை ஆகிய மூன்றும் முக்கிய அதிகார வரம்புகளாக இருக்கின்றன. இவற்றில், பாராளுமன்றம் என்பது மக்களால் தெரிவு செய்யப்படும் ஒரு சட்டவாக்க சபையாக இருக்கின்றது.

பாராளுமன்றத்துக்கு நிறைவேற்று அதிகாரம் வழங்கப்பட வேண்டுமென்பதில் எவரிடமும் மாற்றுக் கருத்துக்கள் இல்லை. ஆட்சியில் இருந்து அனுபவித்தவர்களும் இப்போது ஆட்சியில் இருப்பவர்களும் இதனையே விரும்புகிறார்கள்.

ஆனால் சுதந்திரமடைந்த காலத்தில் இருந்து 1978 ஆம் ஆண்டு வரைக்கும் நிறைவேற்று அதிகாரம் கொண்ட சபையாக இருந்த இந்த பாராளுமன்றத்தினால் தேசியப் பிரச்சினைக்கு சரியான தீர்வைக் காண முடியாமல் போய்விட்டது என்பது ஏதோ ஒரு குறையை நமக்கு சுட்டிக்காட்டுகின்றது.

அதிகாரம். ஒரு தலைமையின் கீழ் குவிக்கப்பட்டிருப்பதை ஏற்க முடியாதென கோஷம் முன்வைக்கப்படுகிறது. இதில் யதார்த்தமும் இருக்கலாம். ஆனால் 30 ஆண்டு காலம் நிலவிய யுத்த சூழ்நிலைக்கு முடிவுகட்டியது இந்த நிறைவேற்று அதிகாரந்தான் என்பதை எவரும் மறந்துவிடமுடியாது.

1977 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் ஜே. ஆர். ஜயவர்தன தலைமையிலான ஐ. தே. க 5ஃ6 பெரும்பான்மையைப் பெற்றிருந்தது. பாராளுமன்ற அதிகாரத்தை ஜே. ஆர். பயன்படுத்திய விதம் நாட்டில் பிரச்சினையை அதிகரித்ததே தவிர எதற்கும் தீர்வு காணப்படவில்லை.

இந்த நிலையை வைத்துப் பார்க்கின்ற போது நிறைவேற்று அதிகாரமோ, பாராளுமன்றமோ எதுவாக இருந்தாலும் இருக்கும் தலைமையில்தான் தங்கியுள்ளதென்பது தெளிவாகின்றது.

நிறைவேற்று அதிகாரமுறைமையை மாற்ற வேண்டும் அல்லது ஒழிக்க வேண்டுமென கூறுவோர் இன்னுமொரு விடயத்தையும் சிந்திக்க வேண்டும். இந்த நிறைவேற்று அதிகாரத்தை பலப்படுத் தியது பாராளுமன்றந்தான் என்பதை மறந்துவிடக் கூடாது. அரசி யலமைப்புக்கான 18 ஆவது திருத்தம் இதற்கு ஓர் உதாரணம்.

ஆகவே நிறைவேற்று அதிகாரமோ பாராளுமன்ற அதிகாரமோ எந்த முறையென்றாலும் ஆட்சியில் அமரும் தலைமையின் குணாம்சத்தில்தான் தங்கியுள்ளதென்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

இது தொடர்பில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் மிகவும் தெளிவான நிலைப்பாட்டிலேயே இருக்கிறார்.

“தலைவலிக்கு தலையணையை மாற்றுவதால் பலனில்லை. நிறைவேற்று அதிகார முறையை மாற்றுவது எனக்குப் பிரச்சினை இல்லை. ஆனால் இதுதொடர்பில், மக்கள் தான் தீர்மானிக்க வேண்டும்” என ஜனாதிபதி கூறியுள்ளார்.

No comments:

Post a Comment