29 June 2015

துன்பங்களுக்கு மத்தியில் கட்டைப்பறிச்சான் அகதிகள் முகாமில் வாழும் மக்கள்

திருகோணமலை சம்பூரிலிருந்து 2006ஆம் ஆண்டில் இடம்பெயர்ந்த மக்கள் மூதூரில் உள்ள கட்டைப்பறிச்சான் அகதி முகாமில் பெரும் அசௌகரியங்களுக்கு மத்தியில் தங்கள் வாழ்க்கையை முன்னெடுத்து வருகின்றனர். 

கடந்த பத்து வருடங்களாக பல்வேறு நெருக்கடிகளின் மத்தியில் அகதிமுகாம் வாழ்க்கையை அனுவித்து வருகின்ற இம் மக்கள் தகரக் கூடாரங்களில் வசிக்கும் தாம் கோடைக் கால உஷ்ணத்தால் பெரும் அவதிக்குள்ளாவதாக கூறுகின்றனர்.

குழந்தைகள், வயோதிபா, பெண்கள்; என அனைவரும் தகரக் கூடாரங்களின் கீழ் இன்னலின் மத்தியில் வாழ்ந்து வருவதாக குறிப்பிடுகின்றனர். 

இதேவேளை குடிநீர், மலசலகூடம் என அடிப்படைத் தேவைகளை கூட நிவர்த்தி செய்து கொள்வதிலும் பெரும் அசௌகரியங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.

விரைவில் தமது சொந்த நிலத்திற்குத் திரும்ப வேண்டும் என்றும் அங்கு நிம்மதியாக வாழ வேண்டும் என்றும் வாழ்வு குறித்த கனவோடு காத்திருக்கின்ற இந்த முகாமில் வசித்துவரும் ஒருவர் தெரிவிக்கையில் இந்த முகாமுக்கு நாங்கள் வந்து பத்து வருடமாகிறது. இதற்கு மேல் இங்கு எங்களால் வாழ இயலாது. இந்த பத்து வருடங்களுக்குள் பல முகாமில் வாழ்ந்திருக்கின்றோம். ஆனால் இனிமேல் இங்கு வாழ முடியாது என்றார். 

மற்றுமொருவர் அங்கு தெரிவிக்கையில் நீண்டகாலமாக இங்குதான் இருக்கின்றோம். எங்களுக்கு ஒரு வசதியும் இல்லை. எங்களுடைய சொந்த இடத்தை எங்களுக்கு தந்தால் நாங்கள் நிம்மதியாக எங்கள் இடங்களில் வாழலாம். செய்திகளில் சொல்லும் போது உங்களுடைய சொந்த காணிகள் விடுவிக்கப்பட்டு விட்டன நீங்கள் உங்கள் சொந்த இடங்களுக்கு செல்லுங்கள் என்று கூறப்படுகிறது. நாங்களோ கத்தி, கோடரி ஆயதங்களை இங்குள்ளவர்களிடம் வாங்கிச்சென்று முள்ளுக் காடுகளையெல்லாம் துப்பரவு செய்த பின்பு வேறு ஆட்கள் சொல்லுகிறார்கள் இந்த இடத்தை நாங்கள் காசு கொடுத்து வாங்கிவிட்டோம் நீங்கள் இங்கு இருக்கக் கூடாது என்று எங்களை துரத்துகிறார்கள் என்றார் வேதனையுடன்

No comments:

Post a Comment