02 November 2015

வடக்கு முஸ்லிம்களின் காணிகளை அபகரிக்க புலிகள் அனுமதிக்கவில்லை

காணிகளை தமிழர் பறித்திருந்தால் முஸ்லிம்கள் மீள்குடியேற முடிந்திருக்காது தமிழர்களின் விடு தலை போராட்டம் முடக்கப்படக்கூடாது என்கின்ற தூரநோக்கிலும் துரதிஷ்ட வசமான சூழ்நிலையிலுமே முஸ்லிம்களை வடக்கிலிருந்து புலிகள் வெளியேற்றினார்களே தவிர முஸ்லிம்களின் காணிகளை புலிகள் பறித்தெடுக்கவில்லையென த. தே. கூட்டமைப்பின் வன்னி மாவட்ட உறுப்பினர் சி. சிவனேசன் குறிப்பிட்டார்.
 
வவுனியா, விருந்தினர் விடுதி ஒன்றில் சனிக்கிழமை இடம்பெற்ற தனியார் பேருந்துகள் சங்க பொதுக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போது அவர் தெரிவிக்கையில்,
 
இராணுவம் தமிழ், முஸ்லிம் மக்களின் வடக்கு, கிழக்கு மாகாண காணிகளை அபகரித்து சிங்கள மக்களுக்கு பகிர்ந்தளித்தது போல் விடுதலைப் புலிகள் முஸ்லிம் மக்களின் காணிகளை அபகரிக்க அனுமதிக்கவில்லை. நான் வன்னி நிலப்பரப்பில் வாழ்ந்தவன். வன்னி நிலப்பரப்பில் நடந்தேறிய அரசியல் போராட்ட சூழல் தெரிந்தவன்.
 
துரதிஷ்டவசமான ஒரு சூழலில் தமிழரின் விடுதலைப் போராட்டம் முடக்கப்பட அனுமதிக்க முடியாத நிலையிலேயே முஸ்லிம்களை வட பகுதியில் இருந்து விடுதலைப் புலிகளால் வெளியேற்றப்படவேண்டி இருந்தது.இருப்பினும் முஸ்லிம் மக்களின் காணிகளை தமிழ் மக்கள் அபகரிக்க என்றும் விடுதலைப் புலிகள் அனுமதிக்கவில்லை.
 
விடுதலைப் புலிகள் தூரநோக்கில் செயல்பட்டதால் தான் இன்று எவ்வித தங்கு தடையும் இன்றி முஸ்லிம் மக்கள் தமது காணிகளில் குடியேறக் கூடியதாகவுள்ளது. முல்லை மாவட்டத்தில் வண்ணாங்குளம், நீராவிப்பிட்டி, கிச்சிராபுரம் போன்ற முஸ்லிம் மக்கள் வாழ்ந்த பகுதிகளில் தமிழ் மக்கள் குடியேற விடுதலைப் புலிகளும் அனுமதிக்கவில்லை. அதனாலேயே அவர்கள் இன்று மீள்குடியேறக் கூடியதாகவுள்ளது.
 
விடுதலைப் புலிகளின் ஆரம்பகால போராட்டத்தில் முஸ்லிம் இளைஞர்களும் முக்கிய பங்கு வகித்தனர். முஸ்லிம் மக்களை இன சுத்திகரிப்பு செய்யும் நோக்கில் விடுதலைப் புலிகள் செயற்படவில்லை. அதனால் தான், 20 ஆண்டு காலத்தின் பின்னும் முஸ்லிம் மக்கள் தமிழர்களுடன் சேர்ந்து மீள்குடியேறி வருகிறார்கள்.
 
வடக்கு கிழக்கு மாகாணம் முஸ்லிம். தமிழ் மக்கள் வாழும் தமிழ் மொழி பேசும் மாகாணம், இங்கு முஸ்லிம் மக்களுக்கு எதிராக எந்த தமிழனும் யதார்த்தத்திற்கு மாறாக செயல்படமாட்டார்கள்.
 
ஒரு சில தமிழ், முஸ்லிம் இனவாதிகளால் தமிழ் மொழி பேசும் எமது மக்களின் ஒற்றுமை குலைக்கப்பட இடமளிக்க முடியாது. அமைச்சர் றிசாட் பதியுதீன் முஸ்லிம் மக்களின் மீள்குடியேற்றத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு தடங்கலாகவுள்ளது என கூறுகின்றார். இது உண்மையில்லை.
 
அதேசமயம் எமது வடக்கு, கிழக்கு பிரதேச மக்கள் வலுக்கட்டாயமாக இடம்பெயரச் செய்யப்பட்டபின் சிங்கள இராணுவம் எமது காணிகளை அபகரித்து சிங்கள மக்களுக்கு வழங்கியது பாரிய தவறு.
 
மேற்படி தமிழ் மொழி பேசும் தமிழ், முஸ்லிம் மக்களின் இன சுத்திகரிப்பு நடவடிக்கைகளுக்கு சிங்கள அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் துணைபோயினர். தமிழ் மக்கள் எந்தத் தவறும் செய்யவில்லை. எந்தத் தவறும் செய்யாத நிலையில் தமிழ் மக்கள் எதற்காக முஸ்லிம் மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.
 
நன்றி- தினகரன்(02-11-2015)

No comments:

Post a Comment