08 August 2016

அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டங்கள்

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி கொழும்பு மகசீன் சி;றைச்சாலை முன்பாகவும் யாழ்ப்பாணத்திலும் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் இடம் பெற்றன. இந்த ஆர்ப்பாட்டத்தில் அரசியல்வாதிகள், சிவில் சமூக பிரதிநிதிகள் மதத் தலைவர்கள் அரசியல்கைதிகளின் பெற்றோர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்கு உடன் நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டுமென்றும், காரணங்கள் கூறி காலம் கடத்தாது பயங்கரவாதத் தடைச்சட்டம் நீக்கப்பட வேண்டும் என்பதோடு சுயாதீன விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என்ற கோரிக்கைகளை முன் வைத்து கொழும்பு வெலிக்கடை சிறைச்சாலைக்கு முன்பாக நேற்றுக்காலை (08-08-2016) காலை 10.00 மணிக்கு ஆரம்பமான பகல் 12.00 மணிவரை இடம் பெற்ற ஆர்ப்பாட்டத்தில் அரசியல் கைதிகளின் விடுதலைக்கான தேசிய இயக்கம் ஈடுபட்டிருந்தது. ஆர்ப்பாட்டத்தின்போது பயங்கரவாதத் தடைச்சட்டத்தை உடனடியாக நீக்கு, அரசியல் கைதிகளை நிபந்தனையின்றி விடுதலை செய், போன்ற கோசங்களை கொண்ட பதாதைகளை ஆர்ப்பாட்டக்காரர்கள் தாங்கியிருந்தனர். 
இதேவேளை யாழ்ப்பாணம் மத்திய பஸ் போக்குவரத்து நிலையத்திற்கு அருகில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் கைதிகளின் உறவினர்கள், தமிழ் தேசிய கூட்டமைப்பின் பங்காளிக்கட்சியான ஈ.பி.ஆர்.எல்.எப்.பின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன், புளொட் அமைப்பின் தலைவரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், மாக்சீச லெனினிச கட்சியின்தலைவர் சி.க செந்தில்வேல் உட்பட சிவில் சமுக செயற்பாட்டாளர்கள், கைதிகளின் பெற்றோர்கள் உறவினர்கள் உள்ளிட்டோரும் கலந்கொண்டிருந்தனர்.
ஆர்ப்பாட்டத்தின் போது கலந்து கொண்டவர்கள் நல்லடாட்சி அரசாங்கமே அரசியல் கைதிகளை விடுதலை செய், பழி வாங்காதே, அரசியல் கைதிகளை பழிவாங்காதே, என்ற கோசங்களை தாங்கிய பதாதைகளை ஏந்தியிருந்தனர். 

பயங்கரவாதத் தடைச்சட்டம் நீக்கப்படாமை துரதிஸ்டமே

பயங்கரவாதத்தடைச்சட்டத்தை நீக்குவது என பல வாக்குறுதிகளை சர்வதேசத்திற்கு உறுதியளித்துள்ளபோது அதனை நிறைவேற்றாது பின்வாங்கி செல்வது துரதிஸ்டமே என ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் அங்கு உரையாற்றுகையில் தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் பல தடவைகள் அரசாங்கத்தால் எமக்கு உறுதி மொழி வழங்கப்பட்டுள்ள போதிலும் பல மாதங்கள் கடந்தும் இதுவரை நிறைவேற்றப்படவில்லை. நூற்றுக்கும் மேற்பட்ட அரசியல் கைதிகள் இன்னமும் சிறையில் வாடிக்கொண்டிருக்கின்றனர். உண்மையிலேயே நல்லிணக்கத்தை தற்போதைய அரசாங்கம் வெளிப்படுத்துகிறதென்றால் அவர்கள் அனைவரும் எந்தவித நிபந்தனைகளுமின்றி உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும். அதன் மூலம்தான் உண்மையான நல்லிணக்கத்தை எமது மக்களுக்கு உணர்த்த முடியும் என்றார். 

No comments:

Post a Comment