28 November 2016

பிடல் காஸ்ட்ரோ, சாசுவதமான புரட்சியாளர்

பிடல் காஸ்ட்ரேதா தன்னுடைய 90ஆவது முதிர்ந்த வயதில் இறந்திருக்கிறார். ஆனால், உலகத்தின் கண்களில்  அவரது சித்திரம் என்றென்றும் இளமையாகவும், கியூப புரட்சியின் ஒளிவீசும் தலைவராகவும்தான் நீடித்து நிலைத்து நின்றுகொண்டிருக்கிறது. பிடல், 32ஆவது வயதில் தன்னுடைய புரட்சியாளர்களுடன் ஆட்சியைக் கைப்பற்றினார்.
மிகவும் வெறுக்கத்தக்க பாடிஸ்டா ஆட்சியைத் தூக்கி எறிந்ததன் மூலம், உலகில் மேற்கத்திய அரை உருண்டையில் முதல் சோசலிஸ்ட் புரட்சியை தோழர் பிடல் நிறுவினார். தோழர் பிடலின் வீரமிக்க தலைமையின்கீழ், கியூபா, அரைக் காலனிய நுகத்தடிகளிலிருந்தும், அமெரிக்காவின் `மஃபியா` கூட்டத்திடமிருந்தும் தன்னை விடுவித்துக்கொண்டு முன்னேறியது. அரசாங்கத்திற்குத் தலைமையேற்றிருந்த பிடல், கியூபாவை ஒரு மகத்தான சோசலிச சமூகமாக உருவாக்கினார்.
தோழர் காஸ்ட்ரோவும், அவரது புரட்சிகர அரசாங்கமும் சோசலிசம் என்றால் என்ன  என்பதை உலகுக்குக் காட்டினார்கள். அதாவது, கல்லாமையை இல்லாமையாக்கியது, அனைவருக்கும் கல்வி அளித்தது, வளர்ந்த முதலாளித்துவ நாட்டில் உள்ள மக்களைக் காட்டிலும் சிறந்த விதத்தில் அனைவருக்கும் சுகாதாரப் பாதுகாப்பு அமைப்புமுறை, அனைத்து இடங்களிலும் பெண்களுக்கு சம உரிமை, தோட்டத் தொழிலாளர்களாக இருந்த அடிமைகள் அனைவரையும் விடுவித்து ஓர் இன சமத்துவ அமைப்பு ஆகியவற்றை உருவாக்கினார்.
கியூபா என்னும் ஒரு சிறிய தீவில் சோசலிசம் கட்டி எழுப்பப்படுவதை அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு  சகித்துக்கொள்ளவே முடியாத ஒன்றாக இருந்தது. கடந்த ஐம்பது ஆண்டு காலமாக பிடல் காஸ்ட்ரோ சோசலிஸ்ட் கியூபாவை அழித்திட மேற்கொள்ளப்பட்ட எண்ணற்ற சதிகளையும் முறியடித்தார்.  சிஐஏ அவரைப் படுகொலை செய்திட மேற்கொண்ட நூற்றுக்கணக்கான முயற்சிகள் குறித்து சமீபத்தில் வெளி உலகுக்குத் தெரிய வந்திருக்கிறது.
லத்தீன் அமெரிக்க நாடுகளின் அனைத்துப் புரட்சிகர மற்றும் முற்போக்கு இயக்கங்களுக்கும் கியூபா புரட்சி ஒரு கலங்கரை விளக்காகத் திகழ்ந்தது. அந்நாடுகள் அனைத்திலும் இடதுசாரிதகள் முன்னேறுவதற்கு உத்வேகத்தை ஊட்டியது.  பிடல் காஸ்ட்ரோவும், அவரது நெருங்கிய சக போராளியான சேகுவேராவும் இளம் சந்ததியினருக்கு புரட்சிகர சின்னங்களாக மாறி இருக்கிறார்கள். லெனினுக்கு அடுத்தபடியாக வேறெந்தவொரு கம்யூனிஸ்ட் தலைவரும் பிடல் அளவிற்கு சர்வதேசப் புகழை (internationalist vision)எட்டியதில்லை. புரட்சிகர கியூபா, உலகம் முழுதும் நடைபெற்ற புரட்சிகரப் போராட்டங்களுக்கு, குறிப்பாக லத்தீன் அமெரிக்கா மற்றும் ஆப்ரிக்காவில் நடைபெற்ற போராட்டங்களுக்கு  அனைத்துவிதமான உதவிகளையும் அளித்து வந்தது.
தென் ஆப்ரிக்காவில் இனவெறி ஆட்சியாளர்களுக்கு உதவி வந்த எதிர்ப்புரட்சி சக்திகளுக்கு எதிராகப் போராடிவந்த அங்கோலா மற்றும் மொசாம்பிக் ஆயுதப்படையினருக்கு உதவிட கியூபா ஆயுதப்படையினரை பிடல் அனுப்பி வைத்தார். கியூபா மருத்துவர்கள் மற்றும் ஆசிரியர்களின்  சர்வதேச அளவிலான சேவையின்மூலம் புதிதாக உருவான எண்ணற்ற நாடுகளில் உள்ள மக்கள் பயன் அடைந்தார்கள்.
தோழர் பிடல் காஸ்ட்ரோ மார்ச்சியத் தத்துவத்தையும் நடைமுறையையும் மிகச் சரியாக இணைத்திட்ட ஒரு மார்க்சிய சிற்பியாக வரலாற்றில் இடம் பெறுவார். மாசேதுங் மற்றும் ஹோசிமின் போன்று பின்தங்கியிருந்த நாடுகளில் உள்ள துல்லியமான நிலைமைகளுக்கு ஏற்ப மார்க்சியத்தை பிடல் பொருத்தி, சோசலிசப் பாதையை நோக்கி முன்னெடுத்துச் சென்றார். இது மூன்றாம் உலக நாடுகளில் வியக்கத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தியது. 
என் தலைமைமுறையைச் சார்ந்த மக்களுக்கு, தோழர் பிடல் புரட்சியின் உயிரோட்டமான சின்னமாகத் திகழ்கின்றார். நான் அவரை முதன்முதலாக 1978இல் ஹவானாவில் நடைபெற்ற உலக இளைஞர் திருவிழாவில் பார்த்தேன், அவரது பேச்சைக் கேட்டேன். அந்த சர்வதேச நிகழ்வின்போது உலகம் முழுதுமிருந்து 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இளைஞர்கள் திரண்டு வந்திருந்தார்கள். பின்னர் 20 ஆண்டுகள் கழித்து, 1998இல் நான் சே குவேராவின் தியாகத்தின் 30ஆம் ஆண்டு விழா சாந்தா கிளாராவில் நடைபெற்றபோது, அதில் கலந்து கொள்வதற்காக சென்றிருந்தபோது அவரைப் பார்த்தேன். அந்த சமயத்தில் தோழர் பிடல் ஆற்றிய உரை இப்போதும் என் நினைவில் நீங்கா இடம் பெற்றிருக்கிறது. கியூபா புரட்சி குறித்து ஓர் ஆய்வினையும் ஏகாதிபத்தியத்திற்கு எதிராக உலகம் முழுதும் நடைபெற்று வரும் போராட்டங்களையும் அப்பேச்சில் அவர் அடிக்கோடிட்டிருந்தார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, கியூபா கம்யூனிஸ்ட் கட்சியுடன் நெருங்கிய உறவுகளைப் பேணிப் பாதுகாத்து வந்திருக்கிறது. இந்தியாவில் உள்ள இடதுசாரி மற்றும் முற்போக்கு சக்திகள் கியூபா புரட்சியினால் எப்போதும் உத்வேகம் பெற்று வந்திருக்கிறார்கள். சோவியத் யூனியன் வீழ்ச்சிக்குப்பின்னர், அமெரிக்கா கியூபாவிற்கு எதிராகத் தன்னுடைய பொருளாதாரத் தடையை இறுக்கிப்பிடித்தபோது,  கியூபா மிகவும் மோசமான பொருளாதார இக்கட்டில் இருந்தது. அந்த சமயத்தில் தோழர் ஹ்ர்கிசன் சிங் சுர்ஜித் தலைமையில், இந்தியாவிலிருந்து, கோதுமை அனுப்பிட ஒருமைப்பாட்டுப் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது. அதன் விளைவாக, 1992 டிசம்பரில் 10 லட்சம் டன் கோதுமை அனுப்பி வைக்கப்பட்டது.  பிடல் ஹவானா துறைமுகத்திற்கு வந்து சுர்ஜித் முன்னிலையில் கோதுமை ஏற்றி வந்த கப்பலை பெற்றுக்கொண்டார். அந்த சமயத்தில் பிடல் பேசுகையில், “10.105 டன் கோதுமையும், மருந்துப் பொருள்களும் என்பதன் பொருள் ஓர் அடையாளத்தைவிட அதிகமானதாகும். இந்த 10,105 டன் ஒருமைப்பாடும், 10,105 டன் தார்மீக ஆதரவும் எங்களை மேலும் அதிக அளவிலான சர்வதேசவாதியாகவும், மேலும் அதிக அளவிலான நாட்டுப்பற்றாளர்களாகவும். மேலும் அதிக அளவிலான புரட்சியாளர்களாகவும், நம்முடைய உன்னதமான லட்சியத்தினைக் காப்பாற்றுவதற்கான உறுதிபடைத்தவர்களாகவும் மாற்றிடும்” என்றார்.
அமெரிக்கா ஏற்படுத்தி இருந்த 50 ஆண்டுகளுக்கும் மேலான  பொருளாதாரத் தடைக்குப்பின்னர், கியூபா முதலாளித்துவத்தின் சுரண்டல் அமைப்பை நிராகரித்து, சோசலிச அமைப்புடன் ஓர் உன்னதமான நாடாக சுதந்திரமான நாடாக உயர்ந்து நிற்கிறது. இது பிடலின் புரட்சிகர பாரம்பர்யமாகும்.
-பிரகாஷ் காரத்-
(தமிழில்: ச.வீரமணி)

நன்றி- தேனீ

No comments:

Post a Comment