05 November 2016

கம்யூனிஸ்ட்டுகள் சுயவிமர்சனம் செய்துகொள்ள வேண்டும்!

விடுதலைப்புலிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக கலைஞரிடம் ராஜீவ் சொன்னார். அதை விடுதலைப்புலிகளிடம் சொல்லச் சொன்னார். கலைஞர் சொன்னாரா? அதனை விடுதலைப்புலிகள் ஏற்றுக்கொண்டார்களா? ஏற்றுக்கொண்ட பிறகுதான் ராஜீவைத் திட்டமிட்டுக் கொன்றார்களா?” என்ற சந்தேகம் நீடிக்கிறது. இதைப் போக்க வேண்டிய பொறுப்பு கலைஞருக்கு உண்டு. அவர் சொன்னால்தான் 25 ஆண்டுகாலக் குழப்பத்தில் தெளிவு ஏற்படும்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான தா.பாண்டியனுக்கு, 84 வயதாகிறது என்பது அவருடன் பேசும்போது மறந்துபோகிறது. அவ்வளவு வேகம், அவ்வளவு துடிப்பு, அவ்வளவு ஞாபகசக்தி. அவ்வப்போது சுயவிமர்சனமும் செய்துகொள்கிறார். ஆனால், மற்றவர்களைப் புண்படுத்திவிடக் கூடாது என்பதில் கவனமாக இருக்கிறார். “போகிற வேகத்தில் எதையாவது சொல்லியிருந்தாலும்கூட, மற்றவர்கள் மனம் புண்படாதவாறு அதை மாற்றிவிடுங்கள்” என்று கிளம்பும்போது சொன்னார். மனம் விட்டுப் பேசியவரின் பேட்டியிலிருந்து முக்கியமான சில பகுதிகள்.

தமிழகத்தில் நிழல் அரசாங்கம் நடப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டுகின்றனவே?

எதிர்க்கட்சிகள் மட்டுமல்ல, அவர்களது கட்சிக்காரர்களே சொல்கிறார்கள். மிக முக்கியமான, நியாயமான காரணங்களுக்குக் கூட யாரும் முதல்வரைச் சந்திக்க முடியவில்லை. முதல்வரைச் சந்திக்க வேண்டும் என்றால் யாரைப் போய்ப் பார்ப்பது என்று பெரிய பொறுப்பில் இருப்பவர்களே கேட்கிறார்கள். குறிப்பாக என்னைப் போன்றவர்களிடம் எல்லாம் கேட்கிறார்கள். நான் என்னவோ, தினமும் காலையும் மாலையும் முதல்வரைப் பார்த்துவிட்டு வருவதைப்போல! ஒன்றைப் புரிந்துகொள்ளுங்கள், உங்களைப் போன்ற நிலையில்தான் நானும் இருக்கிறேன்.

விடுதலைப்புலிகள் செய்த தவறுகள் குறித்து அந்த இயக்கத்தில் இருந்தவர்களே பேச ஆரம்பித்திருக்கிறார்கள். ராஜீவ் கொலையான சம்பவத்தில், நூலிழையில் உயிர் பிழைத்தவர் நீங்கள். விடுதலைப்புலிகள் என்ன செய்திருக்க வேண்டும் என்று கருதுகிறீர்கள்?

ஒன்றை அழுத்தமாகச் சொல்லிவிடுகிறேன். விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தவறு பற்றி முழு உண்மை தெரிந்தவர்கள் தமிழ்நாட்டில் மொத்தமே மூன்று பேர்தான். கலைஞர், முரசொலி மாறன், நான். இதுபற்றி கலைஞரே எழுதிய கட்டுரை இரண்டு ஆண்டுகளுக்கு முன் முரசொலியில் வந்துள்ளது. பிரதமராக இருந்த ராஜீவ்காந்தி, தன்னையும், முரசொலி மாறனையும் கடைசிக் கட்டத்தில் அழைத்துப் பேசியதாகவும், அப்போது, “விடுதலைப்புலிகள் என்ன கோரிக்கை வைத்திருக்கிறார்களோ அதைப் பெற்றுத்தருவதற்காக சகல அதிகாரத்தையும் பயன்படுத்தத் தயாராக இருக்கிறேன். இந்தியா முழு வாக்குறுதி தருகிறது” என்று ராஜீவ் சொன்னதாகவும் கலைஞர் எழுதியிருக்கிறார். அது உண்மைதான். ஏனென்றால், இதே விஷயத்தை ராஜீவ் என்னிடமும் சொல்லியிருக்கிறார். இந்த விவரங்கள் எங்கள் கூட்டணியில் உள்ள ஒரு தலைவருக்கும் தெரிந்திருக்கலாம். முரசொலி மாறன் இப்போது இல்லை. நான் கேட்டவன் மட்டுமே. கலைஞர்தான் கலந்துகொண்டவர். “கலைஞரிடம் ராஜீவ் சொன்னார். அதை விடுதலைப்புலிகளிடம் சொல்லச் சொன்னார். கலைஞர் சொன்னாரா? அதனை விடுதலைப்புலிகள் ஏற்றுக்கொண்டார்களா? ஏற்றுக்கொண்ட பிறகுதான் ராஜீவைத் திட்டமிட்டுக் கொன்றார்களா?” என்ற சந்தேகம் நீடிக்கிறது. இதைப் போக்க வேண்டிய பொறுப்பு கலைஞருக்கு உண்டு. அவர் சொன்னால்தான் 25 ஆண்டுகாலக் குழப்பத்தில் தெளிவு ஏற்படும். ஆனால், அவர் சொல்லத் தயங்குகிறார். இலங்கை மக்கள் மீது தமிழக மக்களுக்கும், உலக மக்களுக்கும் இருக்கிற கொஞ்ச நஞ்ச அனுதாபமும் இத்தகைய செய்திகளை நாம் வெளியிடுவதால் பாழ்பட்டுவிடுமோ என்று அவர் அஞ்சுகிறார். “பாதிக்கப்பட்டுள்ள மக்களைக் காப்பாற்றுவதைப் பற்றித்தான் இப்போது யோசிக்க வேண்டும்”என்று ரொம்பவே உருக்கமாக என்னிடம் சொன்னார். ஆனாலும், அவர் உண்மையைத் தெளிவுபடுத்த வேண்டும் என்றே நான் விரும்புகிறேன்.

காவிரிப் பிரச்சினையில் வேகமாக ஒலிக்கிற கம்யூனிஸ்ட் கட்சிகளின் குரல், அதே தீரத்தோடு முல்லைப் பெரியாறு பிரச்சினையில் ஒலிப்பதில்லையே ஏன்?

நன்றாகக் குத்திக்காட்டிவிட்டீர்கள் (சிரிக்கிறார்). காவிரிப் பிரச்சினையில் உடனடித் தீர்வு என்பது, உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி தண்ணீர் திறந்துவிடுவதாக இருக்கலாம். ஆனால், இரு நதிநீர்ப் பிரச்சினைகளுக்கும் நிரந்தரத் தீர்வு என்பது தென்னக நதிகளை இணைக்கிற திட்டம்தான். அது அனைவரும் ஒப்புக்கொண்ட திட்டம். தமிழ்நாடு, கர்நாடகம், ஆந்திரம், கேரளம், புதுச்சேரி என்று அத்தனை பேருக்கும் நன்மை தரும். திமுக, அதிமுக மட்டுமல்ல; மோடியின் தேர்தல் அறிக்கையிலும் அது இருக்கிறது. ஆனால், கம்யூனிஸ்ட்டுகளின் தேர்தல் அறிக்கையில் மட்டும் அது இருக்கவே இருக்காது. என்ன செய்வது?

தமிழகத்தில் மீண்டும் திராவிடக் கட்சிகளை நோக்கி கம்யூனிஸ்ட்டுகள் செல்வார்கள் என்று எடுத்துக்கொள்ளலாமா?

இரண்டு திராவிடக் கட்சிகளுமே பதவியைக் கைப்பற்றுவதிலும், பதவியைப் பயன்படுத்திப் பல வகையில் பணம் திரட்டுவதிலும், திரட்டிய பணத்தைக் காப்பாற்ற மீண்டும் பதவியைப் பிடிக்க வேண்டும் என்பதிலும்தான் முழுக் கவனம் செலுத்துகின்றன. இதில் இரு திராவிடக் கட்சிகளுக்கும் பெரிய வேற்றுமை இல்லை. கம்யூனிஸ்ட், திராவிடக் கட்சிகள் கூட்டணிக்கு வாய்ப்பு இருக்கலாம். அவர்கள் பாஜகவை எதிர்த்து கொள்கையில் உறுதியாக நின்றால், மற்றவற்றை மறந்து ஒத்துழைக்கலாம்.

தற்போதைய சூழலில் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கூட்டணி ஏற்படும் என்று நினைக்கிறீர்களா?

இதற்கு ஒரே சொல்லில் பதில் சொல்லிவிட முடியாது. காங்கிரஸ் கட்சியில் ஆரம்பக் காலத்தில் இருந்தே இரண்டுவிதப் போக்குகள் உண்டு. மிதவாதிகள், தீவிரவாதிகள், முற்போக்காளர்கள், பிற்போக்காளர்கள் என்று. இப்போது அது மாநிலத்துக்கு மாநிலம் வேறுபடுகிறது. சில இடங்களில் காங்கிரஸ் கட்சி பழைய கொள்கைகளைக் கைவிட்டும் இருக்கிறது. நாங்கள் ஒப்புக்கொள்ளக்கூடிய கொள்கைகளுக்கு அது மாறினால்தான், அந்தக் கட்சியுடன் உறவு வைப்பது பற்றி யோசிக்க முடியும்.

காஷ்மீர் பிரச்சினை தொடங்கி எல்லாப் பிரச்சினைகளுக்கும் நேருதான் காரணம் என்கிறார்கள் பாஜகவினர். இதை எப்படிப் பார்க்கிறீர்கள்?

இந்தியாவின் முதல் பிரதமராக நேரு தேர்வுசெய்யப்பட்டபோது, காங்கிரஸ் கட்சிக்குள்ளேயே கடுமையான எதிர்ப்பு கிளம்பியது உண்மைதான். இதற்கு நாடாளுமன்ற நூலகத்திலேயே ஆதாரங்கள் இருக்கின்றன. சர்தார் படேலைப் பிரதமராக்க வேண்டும் என்று வட இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள் வலியுறுத்தினார்கள். காரணம், நேரு இந்துவாகவோ, இந்துவைப் போலவோ நடந்துகொள்ளவில்லை. இருந்தாலும், “கட்சிக்குள் அவரது போக்கு நமக்குப் பிடிக்காமல் இருக்கலாம். ஆனால், அவர் மக்களின் பிரதிநிதியாக இருக்கிறார். எனவே, அவரை வைத்துக்கொண்டுதான் இந்தக் ஆட்சி நடக்க வேண்டும்” என்று படேலே சொல்லும் நிலை வந்தது. நேருவே பிரதமர் என்பதில் காந்தியும் உறுதியாக இருந்தார். தேசப் பிரிவினை, சாதி மதச் சண்டைகள், உணவுப் பஞ்சம் என்று அல்லாடிய இந்தியாவுக்கு அன்றைக்கு வருமானமே வெறும் ரூ.450 கோடிதான். அவ்வளவையும் சமாளித்து, ஐந்தாண்டு திட்டங்கள் போட்டு, கனரகத் தொழில்களைக் கட்டி நாட்டை வளர்த்த பிறகு பேரன் சொல்கிறான் தாத்தா மோசம் என்று. சொல்கிறவன் யார்? அவர் கட்டிவிட்டதை விற்றுப் பணம் சம்பாதிக்கிறவன். தாத்தாவோ அனைத்தையும் கட்டி இவர்களுக்காக விட்டுச் சென்றவர். அவர் அமைத்த அடித்தளம்தான் இந்தியாவை இன்றைக்கும் காப்பாற்றிக்கொண்டிருக்கிறது என்பதை மறந்துவிடக் கூடாது. யாரையும் சரியாக மதிப்பிட வேண்டும். இது பெரியார், அம்பேத்கருக்கும் பொருந்தும்.

இந்தியாவுக்குக் குடைச்சல் கொடுத்துக்கொண்டே இருக்கிறதே கம்யூனிஸ நாடான சீனா?

(குறுக்கிடுகிறார்) நமக்கும் பாகிஸ்தானுக்கும் உள்ள தகராறில் சீனா நம் பக்கம் நிற்க வேண்டும் என்று நினைக்கிறோம். பாகிஸ்தானை ஆதரித்தால், அவர்கள் இந்தியாவுக்கு எதிராக நிற்கிறார்கள் என்று கருதுகிறோம். இலங்கைக்கு அவர்கள் பிரேமதாசா காலத்துக்கு முன்பிருந்தே உதவுகிறார்கள். இலங்கை சின்ன தீவு என்பதால், சீனா மட்டுமல்ல; உலக நாடுகள் எல்லாவற்றிடமும் ஏதாவது ஒரு உதவியை வாங்கிவிடுகிறது. இலங்கையில் போய் கேட்டீர்கள் என்றால், அவர்கள் சிரித்துக்கொண்டே சொல்வார்கள். ‘அந்தக் கட்டிடம் சீனா கட்டியது, இது இந்தியா கட்டியது, இது கனடா கட்டியது, இங்கிலாந்து கட்டியது’ என்று. அந்த நாட்டு பட்ஜெட் என்பதே, பெருமளவில் பல நாடுகளின் நன்கொடைகள்தான். சீனாவுக்கு நான் போயிருக்கிறேன். சீன கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய செயற்குழு உறுப்பினர்களிடம் இரண்டு மணி நேரத்துக்கு மேலாகப் பேசியிருக்கிறேன். அந்த மக்களிடமோ, அரசாங்கத்திடமோ இந்தியா மீது துளிகூட வெறுப்பை நான் பார்க்கவில்லை. இரு நாடுகளும் அரசியல், பொருளாதார விஷயங்களில் ஒத்துழைக்க வேண்டும் என்றுதான் விரும்புகிறார்கள். அப்போது இரண்டு நாடுகளும் ஒரே மாதிரியான பொருளாதாரக் கொள்கைக்கு வந்துவிட்டன. இரண்டு நாடுகளுக்கும் பொதுவான அம்சங்கள், பொதுவான பிரச்சினைகள் நிறைய இருக்கின்றன. இரண்டு தரப்பும் ஒத்துழைப்பதன் மூலம் உலகத் தலைமையை மேற்கொள்ளலாம். இரண்டு பேரும் மோதிக்கொண்டால், நடுவிலே நரிகளுக்குக் கொண்டாட்டமாகிவிடும்.

எல்லோரையும் விமர்சிக்கும் கம்யூனிஸ்ட்டுகள் தங்களை யாரும் விமர்சிப்பதை அனுமதிப்பதேயில்லை. கம்யூனிஸ்ட் இயக்கங்களின் இன்றைய போக்கு உங்களுக்குத் திருப்தி தருகிறதா?

மற்ற அரசியல் கட்சிகளுக்கும் கம்யூனிஸ்ட்டுகளுக்கும் உள்ள முக்கியமான வித்தியாசம் - கம்யூனிஸ்ட் கட்சி சமுதாய மாற்றத்துக்காக நிற்கிற கட்சி. அந்தச் சமுதாய மாற்றத்தைக் கொண்டுவருவதற்காகவே அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்ற வேண்டும் என்று முயல்கிற கட்சி. அது நடக்கிற வரையில், சமுதாய மாற்றத்துக்காகச் செய்யப்படுகின்ற ஒவ்வொரு காரியத்துக்கும், அதை யார் செய்தாலும் ஆதரவு தர வேண்டும். சமுதாய மாற்றத்துக்கு முட்டுக்கட்டையாக இருப்பவர்களை மட்டும்தான் எதிர்க்க வேண்டும். ஆதரவாக உள்ளவர்களை ஒன்று நண்பராக்க வேண்டும்; முடியாவிட்டால் எதிரி என்று சொல்லக் கூடாது. என்னைப் பொறுத்தவரையில் கொள்கை, சித்தாந்த அடிப்படையில் கம்யூனிஸ்ட்டுகளின் முதல் எதிரி பாஜகதான். அதைத்தான் முழுமூச்சாக எதிர்க்க வேண்டும். அவர்களுக்கு எதிராகத்தான் அணி திரட்ட வேண்டும். அந்த அணியில் காங்கிரஸைக்கூட சேர்த்துக்கொள்ளலாம். காங்கிரஸின் தவறுகளை விமர்சிக்கலாம். ஆனால், எதிரியாகக் கருதக் கூடாது. திராவிட இயக்கம் அடிப்படைக் கொள்கையில் கம்யூனிஸ்ட் கட்சிக்கு எதிராக இருக்கவே முடியாது. நாட்டுப் பிரிவினை, தனித்தமிழ்நாடு கோரிக்கை போன்றவை விமர்சனத்துக்கு உரியவைதான். ஆனால், அவற்றைப் போகிற போக்கில் துணிச்சலோடு தூக்கி எறிந்துவிட்டார்கள். அப்படிக் காலத்துக்கு ஒவ்வாதவற்றைத் தூக்கியெறியும் துணிச்சல் கம்யூனிஸ்ட்டுகளுக்கும் வேண்டும்.

வலதுசாரிகளின் இந்த எழுச்சியை எப்படிப் பார்க்கிறீர்கள்?

எழுச்சி என்ன எழுச்சி, அதிகாரத்துக்கே வந்துவிட்டார்கள். உலக முதலாளித்துவமும், இந்திய முதலாளித்துவமும் இரண்டறக் கலந்துவிட்டன. கார்ப்பரேட் நிறுவனங்கள்தான் இப்போது இந்திய அரசின் கொள்கைகளைத் தீர்மானிக்கின்றன. சமூக நீதியைப் பொறுத்தவரையில் ஆர்எஸ்எஸ் தீர்மானிக்கிற விஷயங்களும், மனு தர்மத்தில் சொல்லப்பட்டவையும்தான் இப்போது நிறைவேற்றப்படுகின்றன. வலதுசாரிகளின் எழுச்சிக்குக் காரணம், அவர்களின் அடிப்படைக் கொள்கைதான். அதாவது, இந்தியச் சமுதாயத்தில் ஏற்கெனவே இருக்கிற சாதி, மதப்பிளவுகளை அப்படியே மூலதனமாக வலதுசாரிகள் பயன்படுத்துகிறார்கள்.

ஒவ்வொரு 20 ஆண்டுகளுக்கும் இடையில் மக்கள் கருத்தில் மாற்றம் ஏற்படுவதுபோல் தோன்றுகிறது. கடவுள் மறுப்பாளர்களின் வாரிசுகள் கோயிலுக்குப் போகிறார்கள், சாதியைப் பெயருக்குப் பின்னால் போடுவதே தவறு என்றவர்களின் வாரிசுகள் சாதிப் பெருமை பேசித் திரிகிறார்கள், கம்யூனிஸ்ட் நாடுகள் முதலாளித்துவத்தை நோக்கி நகர்கின்றன. அடுத்த 20 ஆண்டுகள் எப்படி இருக்கும் என்று ஊகிக்கிறீர்கள்?

முதலில் என் கட்சியைப் பற்றி மட்டும் சொல்கிறேன். கம்யூனிஸம் பேசுகிறவர்கள் இரண்டு புத்தகங்களைப் படித்தே ஆக வேண்டும். ஒன்று முன்னாள் கம்யூனிஸ்ட்டான மைக்கேல் லிபோவிட்ஸ் எழுதிய ‘தி கன்ஸ்ட்ரக்‌ஷன் ஆஃப் ரியல் சோஷலிஸம்’, மற்றொன்று இந்தியாவில் இரு கம்யூனிஸ்ட் கட்சிகளிலும் இருந்த மூத்த தோழரான பித்வாய் எழுதிய ‘தி ஃபீனிக்ஸ் மொமண்ட்: சேலஞ்சஸ் கன்ஃப்ரான்டிங் தி இண்டியன் லெஃப்ட்ஸ்’. இந்தப் புத்தகங்கள் சொல்ல வரும் கருத்தோடு நான் 99% உடன்படுகிறேன். கம்யூனிஸ்ட் இயக்கம் தற்காலிகமாக மக்களுடைய ஆதரவை இழந்திருக்கிறது என்பதை ஒப்புக்கொள்கிற துணிவு வேண்டும். அதை மறுத்துவிட்டு “அப்படி ஒன்றும் நடக்கவில்லை… பார்த்துக்கொள்கிறோம்” என்று சொல்வதும், அடுத்தவர்கள் மீது பழிபோட்டு நம்முடைய குறைகளைப் பார்க்கத் தவறுவதும் தவறு. கம்யூனிஸ்ட்டுகள் சுயவிமர்சனம் செய்துகொள்ள வேண்டும்.

தேசிய இன வேறுபாடுகள், ஏற்றத்தாழ்வுகளை ஒழித்து, எல்லா மொழிகளையும் வளரச்செய்து, எல்லாருக்கும் சம பொருளாதார வளர்ச்சியைக் கொடுத்த சோவியத் ஒன்றியம் 16 நாடுகளாக நொறுங்கியதோடு, அந்நாடுகள் ஒன்றுக்கொன்று மோதிக்கொண்டுமிருக்கின்றன. ஆனால், பல தேசிய இனங்கள், ஏற்றத்தாழ்வுகள், பல மதங்கள், சாதிகளைக் கொண்ட இந்தியா உணவுப் பஞ்சம், மூன்று பெரும் போர்கள் எல்லாவற்றையும் தாண்டியும் உடையாமல் இருக்கிறது. இதற்கான காரணங்களை ஆழமாகச் சிந்திக்க வேண்டும். ரஷ்யா இந்தியாவிடம் கற்றுக்கொள்வது இருக்கட்டும். நாம் முதலில் இந்தியாவிலேயே கற்றுக்கொள்ளவே நிறைய இருக்கிறது.
இரண்டாம் உலக மகா யுத்தத்துக்குப் பிறகு கம்யூனிஸ்ட் கட்சிக்குள்ளும் மக்களிடமும் ஜனநாயகத்தைக் கடைப்பிடித்திருக்க வேண்டும். கடைசி வரையில் அதை கடைப்பிடிக்கத் தவறியது பெருங்குற்றம். இப்போதாவது தவறுகளை ஒப்புக்கொள்ள வேண்டும். மற்ற கட்சிகளைப் பற்றி நான் எதுவும் சொல்ல விரும்பவில்லை. இப்போது மக்கள் மத்தியில் மறு சிந்தனைகள் நிறைய வருகின்றன. ஆனால், அவர்களது வாழ்க்கைச் சிக்கல்கள் அவர்களை மேலும் மேலும் முற்போக்கை நோக்கியே கொண்டுவந்து சேர்க்கும். பல கட்சிகள் இருக்கலாம். ஆனால் மக்கள் முற்போக்கான பாதையில்தான் நடப்பார்கள்.

நவீன காலத்துக்கேற்ப கட்சியை வளர்க்கவும், புதிய தலைமுறையை ஈர்க்கவும் என்ன உத்தியைப் பரிந்துரைக்கிறீர்கள்?

முதலில் கம்யூனிஸ்ட் கட்சி தன்னுடைய நடைமுறைகளைக் கால மாற்றத்துக்கேற்ப மாற்றிக்கொள்ள வேண்டும். ரகசியமாக இயங்குகிற முறையில் இருந்து பகிரங்கமாக இயங்குகிற முறைக்கு வர வேண்டும். கட்சி அமைப்பையே திருத்த வேண்டியிருக்கும்; கட்சியின் அணுகுமுறைகளையும் மாற்ற வேண்டியதிருக்கும். இளைஞர்களை ஈர்ப்பதற்கென்று தனி உத்தி என்று இன்று எதுவும் இல்லை. முதலில் கட்சி என்ற அமைப்பு தன்னை சரிப்படுத்திக்கொண்ட பிறகு, நாட்டின் முன்னேற்றத்துக்காக, மக்களின் முழு விடுதலைக்காகச் சரியான திட்டங்களை வைத்து இயக்கங்களை நடத்துகிறபோது, இளைஞர்களும் மாணவர்களும் அணி அணியாகத் திரண்டு, தாங்களாகவே வந்து சேர்வார்கள்.

இரு கம்யூனிஸ்ட் கட்சிகளின் இணைப்பு பற்றி...

கட்டாயம் இணைய வேண்டும். இணையவில்லை என்றால் எதிர்காலம் இல்லை.


-தா.பாண்டியன் பேட்டி - 

நன்றி -ஹிந்து

No comments:

Post a Comment