05 November 2016

தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தப்படாது: நிரந்தர தீர்வு காண கூட்டு பணிக்குழு

டெல்லியில் இடம்பெற்ற இந்திய  இலங்கை வெளியுறவு அமைச்சர்களுக்கிடையிலான கூட்டத்தில் இரு நாட்டு மீனவாகள் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்காக கூட்டு பணிக்குழு அமைக்க முடிவு செய்யப்பட்டதுடன் தமிழக மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்லும் போது எல்லைத்தாண்டும் மீனவர்கள் மீது தாக்குதல் இடம்பெறாது என்ற முடிவும் எட்டப்பட்டது.

மீனவர் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்காக, இரு நாட்டு மீனவர்கள் பங்கேற்ற பேச்சுவார்த்தை டெல்லியில் கடந்த 2-ம் தேதி நடந்தது. இதில் இந்தியா சார்பில் தமிழகத்தின் தஞ்சாவூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி மற்றும் புதுச்சேரி மீனவ அமைப்புகளின் பிரதிநிதிகள் 13 பேரும், இலங்கை சார்பில் 10 மீனவ பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர்.

தமிழக அரசு சார்பில் பங்கேற்ற மீன்வளத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் பேச்சுவார்த்தை சுமுகமாக நடந்ததாக தெரிவித்திருந்தார். இதன் தொடர்ச்சியாக இருநாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர்கள் இடையிலான டெல்லியில் நேற்று நடைபெற்ற கூட்டத்தில்; இந்தியா சார்பில் வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், மத்திய வேளாண் துறை அமைச்சர் ராதா மோகன், இலங்கை அரசு சார்பில் மங்கள சமரவீர மற்றும் மீன்வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் மகிந்தா அமரவீர ஆகியோர் பங்கேற்றனர்.

பின்னர் இது குறித்து வெளியிடப்பட்ட கூட்டறிக்கையில், ''இந்திய, இலங்கை மீனவர்கள் இடையிலான பிரச்சினையை பேசி தீர்த்துக் கொள்வதற்காக கூட்டு பணிக் குழு அமைக்கப்படும். இந்தக் குழு 3 மாதங்களுக்கு ஒரு முறை கூடி, இருதரப்பிலும் நிலவும் பிரச்சினைகள் குறித்து ஆராயும். வெளியுறவு அமைச்சர்கள் நிலையிலும் 6 மாதங்களுக்கு ஒருமுறை கூட்டம் நடத்தப்படும். இருதரப்பிலும் வெளியுறவு அமைச்சகம், கடலோர காவல்படை மற்றும் கடற்படை பிரதிநிதிகள் பங்கேற்பர். இரு நாட்டு வெளியுறவு அமைச்சர்கள் இடையிலான முதல் கூட்டம் வரும் 2017, ஜனவரி 2-ம் தேதி இலங்கை தலைநகர் கொழும்புவில் நடக்கும். சிறைபிடிக்கப்பட்ட மீன்பிடி படகுகளை விடுவிப்பது குறித்து கூட்டு பணிக்குழுவின் முதல் கூட்டத்தின்போது விவாதிக்கப்படும்'' என குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் கைது செய்யப்பட்ட மீனவர்களை ஒப்படைப்பது தொடர்பான வழிமுறைகளை வகுத்தல், மீன்வளத்தை காக்க ஆழ்கடலில் இரட்டைமடி, சுருக்கு வலை, இழுவை வலை வீசி மீன்பிடிக்கும் முறைக்கு விரைவாக முற்றுப்புள்ளி வைத்தல், கடலோர ரோந்துக்கு ஒத்துழைப்பதற் கான சாத்தியங்கள் உள்ளிட்ட வைகளை கூட்டு பணிக்குழு ஆராயும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மீனவர்களை எளிதில் தொடர்பு கொள்ள வசதியாக இரு நாட்டு கடலோர காவல் படை இடையே 'ஹாட்லைன்' இணைப்பு வசதியை அமைக்கவும் ஒப்புதல் தெரிவிக்கப்பட்டது. இந்த கூட்டத்தின்போது எல்லை தாண்டும் மீனவர்களை தாக்கக் கூடாது என்றும் இருநாட்டு கடற் படையினரும் மீனவர்களை பத்திரமாக அவரவர் நாடுகளில் ஒப்படைக்க வேண்டும் என்றும் மீனவ அமைப்பு பிரதிநிதிகள் சார்பில் விடுக்கப்பட்ட கோரிக்கையும் ஏற்கப்பட்டது. இந்தக் கூட்டத்தில் மத்திய சாலை போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் கப்பல் போக்குவரத்து துறை இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், இலங்கை எம்பி எம்.ஏ.சுமந்திரன் ஆகியோரும் பங்கேற்றனர்.

முன்னதாக இந்த கூட்டத் தில் பேசிய மத்திய வேளாண் துறை அமைச்சர் ராதா மோகன், ''இந்திய, இலங்கை மீனவர்கள் பிரச்சினையில் நிரந்தர தீர்வுகாண இந்திய அரசு உறுதியுடன் உள்ளது. அதே சமயம் இயற்கை வளங்கள் அடுத்துவரும் தலைமுறையினருக்கும் எளிதில் கிடைக்க வேண்டும் என்பதை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகளிலும் கவனம் செலுத்தப்படுகிறது'' என்றார்.

பின்னர் அவர் வெளியிட்ட அறிக்கையில், ''தமிழகத்தின் விழுப்புரம் மாவட்டம், முகையூரில் மீன்பிடி துறைமுகம் அமைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதேபோல் ராமேஸ்வரம் மற்றும் எண்ணூரிலும் மீன்பிடி துறை முகங்கள் கட்டுவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படும் இதன் மூலம் மீனவர்கள் பிரச்சினைக்கு தீர்வுகாண முடியும்'' என குறிப்பிட்டுள்ளார்.

நன்றி -ஹிந்து

No comments:

Post a Comment