02 June 2017

ஸ்ரீலங்காவில் புதிய வடிவத்திலான ஒரு முஸ்லிம் எதிர்ப்பு பயங்கரவாதம்: செய்ய வேண்டியது என்ன?

தற்போது நிகழும் சம்பவங்கள் புவியியல் ரீதியாக சிதறிப் போயுள்ளன. ஆனால் விரைவிலேயே இதை தூண்டுபவர்களைக் கைது செய்வதற்கு கடுமையான நடவடிக்கை எடுக்காவிட்டால், விஷயங்களை மையப்படுத்தி அவை பெரிய அளவிலான விகிதாச்சாரத்தில் அதிகரிக்க இடமுண்டு. வெள்ள அவசர நிலை மற்றும் இயற்கை அனர்த்தங்கள் மற்றும் நிருவாகக் கவனக்குறைவினால் ஏற்பட்ட அழிவுகளுக்கு தீர்வு காண்பதைப் போலவே இதுவும் முக்கியமான ஒன்று மற்றும் வெள்ளத்தினால் பாதிப்படைந்த அனைவருக்கும் இதயபூர்வமான அனுதாபங்கள்.
சமீபத்தில் மசூதிகள் மற்றும் முஸ்லிம்களுக்குச் சொந்தமான வியாபார நிறுவனங்கள் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்ட பாணி, அவை சாதாரண மக்களின் கோபத்தின் பிரதிபலிப்பினால் ஏற்பட்டது அல்ல என்றும், ஆனால் மத தீவிரவாத மற்றும் தேசியவாத குழுக்களினால் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட செயற்பாடு என்றும் காண்பிக்கிறது. எனினும் இதில் உள்ள ஆபத்து என்னவென்றால் விஷயம் அதி வேகமாகப் பரவுவதுடன் மற்றும் இதைத் தூண்டுபவர்கள் பெரிய குழுக்களாக ஆட்களை நியமித்துக்கொண்டு மற்றும் இதே வழியில் மற்றவர்களையும் நடந்து கொள்ளும்படி செல்வாக்கு செலுத்துவதற்கும் இடமுண்டு. நிலமையை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவருவதற்கு விரைந்து நடவடிக்கை மேற்கொள்ளாவிட்டால், நாட்டிற்கு உள்ளும் மற்றும் வெளிநாட்டிலும் உள்ள நிலமைகள் அவர்களுக்கு சாதகமாக வேலை செய்யக்கூடும்.
பொது பல சேனா (பி.பி.எஸ்) மற்றும் அதன் தலைவர் கலகொட அத்தே ஞ}னசார இதில் நேரடியாக ஈடுபட்டிருப்பதற்கான தெளிவான அடையாளங்கள் மற்றும் சாட்சிகள் உள்ளன. அவரை வணக்கத்துக்குரிய தேரர் என்று அழைக்கவோ அல்லது ஒரு முறையான பௌத்த குரவாகக் கருதுவதற்கு எனக்கு கஷ்டமாக உள்ளது. அவரைப் பின்தொடரும் ஒரு சிறிய குழுவினர் நாடு முழுவதும் சென்று முஸ்லிகள், அவர்களது வணக்கத் தலங்கள் மற்றும் அவர்களது வியாபார நிலையங்களை தாக்கி வருவது போலத் தெரிகிறது. குருநாகல் மசூதிமீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் உட்பட, அதுபோன்ற அநேக சம்பவங்களில் அவரது நேரடித் தலையீடு இருப்பது வெகு தெளிவாகத் தெரிகிறது. வெகு சமீபத்தைய தாக்குதல் இரத்தினபுரி மாவட்டம் காகவத்த நகரில் உள்ள முஸ்லிம் கடை ஒன்றின் மீது கடந்த வாரம் (மே 22ல்) வெள்ளம் வருவதற்கு முன்பு நடைபெற்றுள்ளது, மற்றும் அறிக்கைகளின்படி அது முற்றாக எரித்து நாசமாக்கப்பட்டுள்ளது.
அது பயங்கரவாதமா?
ஏன் அது பயங்கரவாதம் மற்றும் புதிய வடிவத்திலான பயங்கரவாதம்? ஐக்கிய நாடுகள் சபையால் அதன் அங்கத்துவ நாடுகள் மத்தியில் உள்ள கருத்து வேறுபாடு காரணமாக, பயங்கரவாதத்துக்கான முழுமையான வரைவிலக்கணத்துக்கு இதுவரை வர இயலவில்லை என்பது உண்மைதான். எனினும் பாதுகாப்புச் சபையின் 2004ம் ஆண்டின் 1566 வது தீர்மானத்தின்படி பயங்கரவாதம் என்றால் என்ன என்பதற்கு நியாயமான ஒரு விளக்கம் கிடைத்துள்ளது, “எந்த ஒரு செயற்பாடும் … அதன் இயல்பில் அல்லது சூழந்நிலையில் மக்களை மிரட்டுவதாகவோ அல்லது ஒரு அரசாங்கத்தை அல்லது சர்வதேச அமைப்பை  ஒரு செயலை செய்யும்படியோ அல்லது செய்யாமலிருக்கும்படியோ கட்டாயப்படுத்துவது”.
பி.பி.எஸ் ஒரு செயலை செய்யும்படியோ அல்லது அதில் ஈடுபடவோ வேண்டாம் என்று அரசாங்கத்தை கட்டாயப்படுத்த விரும்புகிறது என்பதை ஒரு கணம் நாம் மறந்துவிடுவோம். ஆனால் அதன் இயல்பு மற்றும் சூழ்நிலை என்பன காரணமாக ஸ்ரீலங்காவில் பி.பி.எஸ் முஸ்லிம் மக்களை மிரட்டி வருகிறது. அது மிரட்டல் மட்டுமல்ல ஆனால் ஏற்கனவே அவர்களுக்கு தீங்கு இழைக்கப் பட்டிருப்பதுடன் மற்றும் அவர்களின் சொத்துக்களும் அழிக்கப் பட்டுள்ளன, அதற்கும் மேலாக அவர்களுடைய மதத்தை நடைமுறைப் படுத்துவதற்கு அவர்களுக்கு அச்சுறுத்தல் விடுக்கப் பட்டுள்ளது. பின்னையது அதாவது மத சுதந்திரம் ஸ்ரீலங்கா அரசியலமைப்பின் அடிப்படை உரிமைகளின் கீழ் உத்தரவாதம் அளிக்கப்பட்ட ஒன்றாகும்.
அரசியலமைப்பு உத்தரவாதம் வழங்கும் அடிப்படை உரிமைகளின் கீழுள்ள 10 வது விதி கூறுவது, ‘ஒவ்வொரு நபரும் சிந்தனை, மனச்சாட்சி மற்றும் தனது தெரிவுக்கு ஏற்ற ஒரு மதம் அல்லது நம்பிக்கையை கொண்டிருப்பதற்கு அல்லது பின்பற்றுவது உட்பட மதச் சுதந்திரத்துக்கான உரிமைக்கு உரித்தானவர்கள்” என்று. முஸ்லிம்களின் இந்த அடிப்படை உரிமைதான் அந்த மதத்தை இழிவுபடுத்தியதின் மூலம் ஞ}னசாரவினாலும் மற்றும் மசூதிகள் மற்றும் மத ஸ்தலங்கள் மீது தாக்குதல் நடத்தியதின் மூலம் அவரது பொது பல சேன ஆதரவாளர்களாலும் மீறப்பட்டுள்ளது.
தற்போதைய ஐநா விளக்கத்தை விட அமெரிக்காவின் சட்டமாகவுள்ள பெடரல் விதி 28, பயங்கரவாதம் பற்றிய மிகவும் துல்லியமான வரைவிலக்கணத்தை தருகிறது. அது வரையறை செய்வது” அரசியல் அல்ல சமூக மேம்பாட்டுக்காக சட்ட விரோதமாக படைகளைப் பயன்படுத்துவது மற்றும் வன்முறையை பயன்படுத்தி ஆட்கள் அல்லது சொத்துக்களுக்கான மிரட்டல், அல்லது ஒரு அரசாங்கம், பொதுமக்கள் அல்லது அதன் ஒரு பிரிவினரை அச்சுறுத்துவது” என்று. இந்த வரைவிலக்கணம்தான் அமெரிக்காவில் எல்.ரீ.ரீ.ஈ யினை பயங்கரவாதிகள் எனத் தடை செய்யப் பயன்படுத்தப் பட்டது, அது ஸ்ரீலங்கா அரசாங்கத்தால் மிகப் பெரிய அளவில் புகழப்பட்டது. ஸ்ரீலங்காவில் பொது பல சேனாவின் செயற்பாடுகளை பயங்கரவாதம் என வரையறை செய்வதற்கு இதே கருத்தை பிரயோகிக்க முடியும்.
எல்.ரீ.ரீ.ஈ யினது விடயத்தை போலவே பி.பி.எஸ்  வன்முறை மற்றும் சக்தியை பயன்படுத்துவதில் அரசாங்கத்தை இலக்காகக கொள்ளவில்லை. இதுவரை இது நடைபெறவில்லை. மிகவும் அதிகரித்த அளவில் அது பொதுமக்களையே இலக்கு வைத்து வருகிறது. அந்தக் காரணத்தால்தான் அதை ஒரு புதிய வடிவத்திலான பயங்கரவாதம் என அழைக்கிறோம், அது நவ பாசிச இயக்கத்திற்கான ஆரம்ப அறிகுறிகளைக் காண்பிக்கிறது. உதாரணத்திற்கு குழு குழக்ஸ் கிளான் போன்ற அநேக நவ பாசிச இயக்கங்கள் அரசாங்கங்களை தாக்கவில்லை ஆனால் வெறுக்கும் பொதுமக்களையே தாக்கின. தற்சமயம் முஸ்லிம்கள் இலகுவான இலக்காக உள்ளனர், ஏனெனில் சர்வதேச ரீதியிலான இஸ்லாம் தொடர்பான பயங்கரவாத நடவடிக்கைகள் இதற்கான காரணம். முரண்பாடாக பி.பி.எஸ் கூட இஸ்லாமிய அரசின்(ஐ.எஸ்) பயங்கரவாதிகள் அல்லது மத்திய கிழக்கின் தலிபான்கள் என்பனவற்றின் சித்தாந்த வடிவான கண்ணாடிப் பிம்பம். ஞ}னசார தலைமையிலான பி.பி.எஸ், மியன்மாரின் (பர்மா) அசின் விராத்து தலைமையிலான 969 இயக்கத்துடன் அதிக ஒற்றுமைகளைக் கொண்டுள்ளது.
அதுவும் கூட ஒரு புதிய வடிவத்திலான பயங்கரவாதம் ஏனென்றால் அது இராணுவ பாணியில் அல்லது இறுக்கமாக பின்னிய அமைப்பாக ஒழுங்கமைக்கப் படவில்லை, ஆனால் தீவிர வெறுப்பை பிரச்சாரம் செய்யும் ஒரு தலைவரின் கீழ் இயங்கும் பல குழுக்களை கொண்ட ஒரு தளர்வான சங்கமாக இயங்கி வருகிறது. அதனுடன் சேர்ந்துள்ள குழுக்கள் சிங்ஹல ராவய, ராவண பலய, சிங்ஹலே, மகாசோன் பலய மற்றும் சிங்கள ஜாதிக பலய என்பன, பி.பி.எஸ் ஒரு குடை அமைப்பாகச் செயற்படுகிறது. நான் இதற்கு முன் எழுதிய “மான்செஸ்டர் கொலைகள் மற்றும் பயங்கரவாதத்திற்கு எதிராகப் போராட வேண்டிய தேவை” என்கிற கட்டுரையில் வரையறை செய்துள்ளதுபோல, அவர்கள் அனைவரும் பயங்கரவாதம் என்பதனையே கருத்தியலாகக் கொண்டுள்ளார்கள், அது அழிவு மற்றும் தியாகத்துக்கான விருப்பம் என்பனவற்றின் எழுச்சியைக் கொண்டுள்ள ஒரு தீவிர வெறுப்புக்கு மேலதிகமாக உள்ளதாகும்.
அரசாங்கம் மற்றும் சட்ட அமலாக்கல் அமைப்புகள் குறிப்பாக இறுதியாகக் குறிப்பிட்ட சம்பவம் குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும் ஏனென்றால் சில செயற்பாட்டாளர்கள் விரைவிலெயே  சுய உயிர்த்தியாகம் செய்யக் கூடும். அவர்கள் வெறி பிடித்தவர்களாகவும் மற்றும் உண்மையான நம்பிக்கைவாதிகளாகவும் உள்ளார்கள். எப்படியாயினும் இந்த ஆரம்பக் கட்டத்தில் அதன் தலைவர்ஃதலைவர்களைக் கைது செய்து அவர்களது குற்றங்களுக்கு தண்டனை வழங்கினால் மட்டுமே அந்த இயக்கத்தின் நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்த முடியும். இல்லையென்றால் செயலற்ற தன்மை மிகப் பெரிய ஒரு அசுரனை உருவாக்க வழி செய்யும்.
சமீபத்தைய தாக்குதல்கள்
ஏப்பரல்மாத நடுப்பகுதி முதல் இதுவரை 12 தாக்குதல்கள், மசூதிகள், முஸ்லிம்களுக்குச் சொந்தமான கடைகள் மற்றும் கிராமத்தவர்களுக்கு கீழே தரப்பட்ட அட்டவணைப்படி நிகழ்த்தப் பட்டுள்ளன.
திகதி       இடம்           தாக்குதலின் தன்மை

14 மே     ஒனேகம,          பொலன்னறுவகுடியிருப்புகளை (குடிசை) தாக்கியது மற்றும் அழித்தது
15 மே     செல்வநகர்,       திருகோணமலைமுஸ்லிம் கிராமவாசிகள் மீது தாக்குதல்

15 மே      பாணந்துறை,   கொழும்புமசூதி மீது பெற்றோல் குண்டு தாக்குதல்
15 மே      கொகிலவத்த,     கொழும்புமசூதி மீது தாக்குதல்

16 மே      செல்வநகர்,         திருகோணமலைமுஸ்லிம் கிராமவாசிகள் மீது தாக்குதல்

16 மே       கொகிலவத்த,       கொழும்புமசூதி மீது மற்றொரு தாக்குதல்

17 மே       பாணந்துறை,       கொழும்புஇரண்டு கடைகள் மீது தாக்குதல்

18 மே       வென்னப்புவ,      குருநாகல்ஒரு கடை எரிக்கப்பட்டது

21 மே        மல்லவபிட்டிய,     குருநாகலமசூதி மீது தாக்குதல்

21 மே       எல்பிட்டிய, காலிஒரு கடை எரிக்கப்பட்டது

22 மே       மகரகம, கொழும்புஒரு கடை எரிக்கப்பட்டது

22 மே       ககவத்த, இரத்தினபுரிஒரு கடை எரிக்கப்பட்டது

நிச்சயமாக இந்த சம்பவங்களின் துல்லியமான நிலமை இன்னும் சரிபார்க்கப் படவில்லை. எனினும் அதைச் செய்ய வேண்டியது காவல்துறையின் கடமை. அவை ஓரளவுக்கு துல்லியமற்றதாக இருந்தாலும் கூட அந்த சம்பவங்களை மறுக்க முடியாது மற்றும் அது நடத்தப்பட்ட பாணி தெளிவாக உள்ளது. மேற்குறித்த நிரல் காண்பிப்பது போல ஒரே இடத்தின்மீது அடுத்தடுத்து தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளது, காவல்துறையினரது தரப்பில் செயற்பாடு இல்லாததை தெளிவாக எடுத்துக் காட்டுகிறது. ஆகவே அரசாங்கத்தின் தரப்பில் இருந்து வெறுப்புக் குற்றங்களுக்காக ஒரு விசேட காவல்துறை படையணியை உருவாக்குவது வரவேற்கத்தக்க ஒரு நகர்வு.  எனினும் விசேட காவல்துறை அல்லது புதிய கிளை உருவாக்கப் பட்டிருப்பதைக் காரணம்காட்டி பிரதேச காவல்துறையை செயலற்ற நிலைக்கு இட்டுச் செல்லக்கூடாது.
மேற்குறித்த தாக்குதல்கள் நடப்பதற்கு முன்பு பி.பி.எஸ் மற்றும் அதன் தலைவர் கலகொட அத்தே ஞ}னசாரவினால் ஒரு வகையான தூண்டுதல் இருந்துள்ளது. ஆரம்ப கவனம் அம்பாறை மாவட்டத்தில் உள்ள இறக்ககாமத்தில் ஏற்பட்டுள்ளது, அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் அவர்களுக்கு ஒரு வலுவான அதரவுத் தளம் உள்ளது. எனினும் இறக்காமம் முஸ்லிம் ஆதிக்கம் உள்ள ஒரு கிராமம்.அங்கு சில காணித் தகராறுகள் இடம்பெற்றிருந்தன அவை உத்தியோக பூர்வ பாதைகள் வழியாக அல்லது நீதிமன்றத்தின் சட்ட நடவடிக்கைகள் மூலம் தீர்க்கப்பட வேண்டியவை. அது ஏப்ரல் நடுப்பகுதியில் நடந்தது, ஞ}னசார அந்தப் பகுதிக்கு விஜயம் செய்து முஸ்லிம்களுக்கும் மற்றும் அவர்களுடைய மத விசுவாசத்துக்கும் ஆத்திரமூட்டும் வகையில் அறிக்கைகளை வெளியிட்டார்.
அவரது பாதுகாவலின் கீழ் வெசாக் கொண்டாட்டங்கள் மே 10ல் இந்த முஸ்லிம் பகுதியில் நடத்தப்பட்டது. அதே சமயத்தில் மியான்மாரில் இருந்து முஸ்லிம் அகதிகள் வருவதாகவும் மற்றும் உள்ளுர் முஸ்லிம்கள் அவர்களுக்கு மேலதிக குடியேற்றங்களை மேற்கொள்ள உதவுவதாகவும் பி.பி.எஸ் பிரச்சாரம் மேற்கொண்டது. பொலன்னறுவ ஒன்னேகம தாக்குதலின்போது ஞ}னசார அங்கு பிரசன்னமாகி இருந்ததாகச் சொல்லப்படுகிறது. மற்றொரு தொடர்ச்சியான ஆத்திரமூட்டல், அல்லாஹ் - சுபஹன்னாகு வா ற்றா லா(அதன் கருத்து அதிகம் மகிமையுள்ள மற்றும் அதி உயர்வான) பற்றி இழிவு படுத்தி அவதூறு செய்தது. மேற்கூறிய சம்பவங்கள் நடைபெற்றதுக்கு கணிசமானளவு சாட்சியங்கள்ஃ தகவல்கள் உள்ளன. ஐ.எஸ் பயங்கரவாதத்தை ஸ்ரீலங்காவுக்கு அழைப்பதைப் போல பி.பி.எஸ் செயற்படுகிறது.
ஒழுக்கத்துக்கு பொருந்தாதவை
பெரும்பான்மையான பௌத்த ஆதிக்கம் நிறைந்த நாடான ஸ்ரீலங்காவில், பி.பி.எஸ் இனது பிரச்சாரம் மற்றும் செயற்பாடுகள் ஒழுக்கத்துக்கு பொருந்தாதவையாக உள்ளன. குறுகிய இன அல்லது பிரிவினைக் காரணங்களுக்காக மற்றொரு மதத்தின் மீது வெறுப்புணர்வை பரப்புவதற்கும் மற்றும் வன்முறையான தாக்குதல்களை மேற்கொள்வதற்கும் எப்படி பௌத்தத்தை பயன்படுத்துகிறார்கள் என்று கற்பனை செய்வதே கடினமாக உள்ளது.
தர்ம அசோகா அரசன் தன்து அரசாணை 12ல் பிரகடனம் செய்திருப்பது, “அனைத்து மதங்களிலும் அத்தியாவசியமான வளர்ச்சி இருக்கவேண்டும். அத்தியாவசியமான வளர்ச்சி வித்தியாசமான வழிகளில் செய்யப்படலாம், ஆனால் அவை அனைத்தும் அவைகளின் வேர்களைப் பற்றிப் பேசுவதை கட்டுப்படுத்துகிறது, அதாவது தன்னுடைய சொந்த மதத்தைப் பற்றி புகழ்ந்து பேசாமலிருப்பது அல்லது தகுந்த காரணமின்றி மற்றவர்களின் மதத்தை கண்டனம் செய்வது. விமர்சனம் செய்வதற்கு காரணம் இருந்தால் அது ஒரு மென்மையான முறையில் செய்யப்பட வேண்டும்”.
ஸ்ரீலங்காவின் விடயத்தில் மிகவும் பொருத்தமானதும் பிரயோகிக்கத் தக்கதும் பின்வருவனவாகும்.
“இந்தக் காரணத்துக்காக மற்றைய மதங்களை மதிப்பது சிறந்தது. அப்படிச் செய்வதினால் ஒருவருடைய சொந்த மதம் இலாபமடைகிறது மற்றும் அதேபோலவே மற்றவர்களுடைய மதங்களும், அதேவேளை அப்படிச் செய்யாவிட்டால் ஒருவர் தன்னுடைய மதத்திற்கும் அதேபோல மற்றவர்களுடைய மதங்களுக்கும் தீங்கு விளைவிக்கிறார்.யாராவது அளவற்ற பக்தி காரணமாக தனது சொந்த மதத்தை புகழ்ந்தும், நான் எனது மதத்தை மகிமைப்படுத்த வேண்டும் என்கிற எண்ணத்தில் மற்றவர்களுடையதை கண்டனம் செய்வார்களாயின் அவர்கள் தங்கள் சொந்த மதத்துக்குத்தான் தீங்கு விளைவிக்கிறார்கள்”.
(அசோக மன்னனின் அரசாணைகள்: ’   https://www.cs.colostate.edu/~malaiya/ashoka.html)
ஞ}னசாரரின் விடயம் ஒரு மதம் சம்பந்தமான விடயம் என நம்புவது கஷ்டமாக உள்ளது. அவர் அவமானப்படுத்துவது மற்றும் துஸ்பிரயோகம் செய்வதைத் தவிர அர்த்தமுள்ள விமர்சனம் அல்லது சொற்பொழிவுகளிலோ ஈடுபடவில்லை. அவரது நடத்தை வன்முறையானதாக உள்ளது. அவர் அல்லது யாராவது கொள்கை ரீதியான வேறுபாடுகளை வெளிபடுத்த விரும்பினால் அது ஒழுக்கமான எழுத்துக்கள் மூலம் செய்யப்பட முடியும். நல்ல அரசரான அசோகா சொன்னதைப் போல, “விமர்சனத்துக்கான ஒரு காரணம் இருப்பின் அது மென்மையான முறையில் செய்யப்பட வேண்டும்” அது விமர்சனத்துக்கான சுதந்திரத்தை தடை செய்யாது. ஆனால் அது மற்றைய மதங்களை இழிவுபடுத்தக் கூடாது. துரதிருஷ்டவசமாக ஸ்ரீலங்காவில் உள்ள பலருக்கு இந்த வேறுபாடு தெளிவாகத் தெரியவில்லை. இது மனித உரிமைகளுக்குச் சமமானது. என்னதான் இருந்தாலும் விமர்சனத்துக்கான சுதந்திரம் என்பது முஸ்லிம் கடைகளை எரிப்பது மற்றும் மசூதிகளைத் தாக்குவது அல்ல.
மாறாக இன்னும் மோசமானது என்னவென்றால் பி.பி.எஸ் பிரதிநிதிகள் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னால் முறைப்பாடுகளை பதிவு செய்திருப்பதுதான். அது காவல்துறையினரின் பக்கமிருந்து வரும் அட்டூழியங்கள் ஏதாவதிலிருந்து அதாவது தன்னைக் கைது செய்வதிலிருந்து பாதுகாத்துக் கொள்வதற்காகத்தான் என்றால் அவர் நீதிபதி முன் தோன்றிச் சரணடைய வேண்டும். அவர் விட்டுக்கொடுத்து சட்டத்தின் ஆட்சியை எதிர்கொள்ள வேண்டும். உண்மை என்னவென்றால் காவல்துறை மற்றும் சட்ட அமலாக்க அதிகாரிகள் இதுவரை ஞ}னசார தேரர் மற்றும் பொது பல சேனா விடயத்தில் மிகவும் மென்மையான முறையிலேயே நடந்து கொண்டுள்ளார்கள். மே, 21ந்திகதி குருநாகல்லில் மசூதி தாக்கப்பட்ட வேளையில் அவர் அங்கு இருந்துள்ளார் ஆனால் அவர் கைது செய்யப்படவில்லை.
தேசிய பணி
காவல்துறை உயர்மட்டம் பொது பல சேனாவை நேரடியாகப் பாதுகாப்பதாக குற்றம் சாட்டப்படவோ அல்லது இல்லாமலோ இருக்கலாம். ஆனால் அவர்கள் குறைந்த பட்சம் இதே பிரச்சாரத்தையும் மற்றும் பாரபட்சத்தையும் சாதாரண முஸ்லிம் மக்கள் மற்றும் வியாபாரிகளிடம் செலுத்துவதில் குழப்பமடைந்தோ அல்லது தாக்கமடைந்தோ உள்ளார்கள். இவை இந்த நாட்டில் நீண்ட காலமாக நிலவி வருகிறது. 20ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் பியதாஸ சிறிசேனவின் நாவல்கள் பலவற்றிலும் இந்த தப்பெண்ணம் மற்றும் பாரபட்சம் என்பனவற்றை வெளிக்காட்டப் பயன்படுத்தப் பட்டிருந்தன. 1970 - 80 களில் பேராதெனியாவில் இருந்த எனது அயலவர்கள் முஸ்லிம்கள் அல்லது அவர்களது வியாபார நிறுவனங்கள் மீது காட்டிய பாரபட்சம் மற்றும் வெறுப்பை நான் அனுபவபூர்வமாக உணர்ந்திருக்கிறேன்.
ஆனால் அதற்கு முன் எனது சிறு பராயத்தில் சிங்கள பௌத்தர்கள் மற்றும் முஸ்லிம்கள் மொரட்டுவ - ஹொரேத்துடுவ பிரதேசத்தில் இணக்கமான முறையில் சகவாழ்வில் ஈடுபட்டிருந்ததையும் நான் அனுபவித்துள்ளேன். ஆகவே இது ஒரு கலவையான சூழ்நிலை அல்லது முந்தைய சூழ்நிலையின் ஒரு அழிவு எனக் கூறலாம். முஸ்லிம்களில் சிலர் வியாபாரம் நடத்தும்முறை சில சிங்கள் வியாபாரிகளுக்கு பிடிக்காமல் இருப்பதற்கான சாத்தியம் உள்ளது. ஆனால் அவர்களது கடைகள் மற்றும் வியாபாரங்களை தாக்குவதற்கு அது ஒரு காரணமாக இருக்க முடியாது. காரணங்கள் போட்டி அல்லது பொறாமையாக இருக்க முடியும். இங்குதான் சட்டத்தின் ஆட்சி நிலவவேண்டிய கட்டாயம் உள்ளது. இந்த தப்பெண்ணங்கள் அல்லது பாரபட்சங்கள் கூட அதிகம் பேசப்படும் தேசிய நல்லெண்ண முயற்சிகள்ஃ திட்டங்கள் தீர்வு காண்பதற்குரிய முக்கிய காரணங்களாக உள்ளன. இந்த முயற்சியில் முஸ்லிம்களின் பங்களிப்புக்குரிய ஒரு பாத்திரமும் உள்ளது.
ஸ்ரீலங்கா இப்படியே போக முடியாது. 2014ல் அழுத்கமவில் நடைபெற்ற முக்கிய தாக்குதல்களின் பின்னர், பொது பல சேனா 1915ம் ஆண்டின் சிங்கள - முஸ்லிம் கலவரத்தின் நூறாவது ஆண்டினை 2015ல் கொண்டாடுவதற்கு திட்டமிட்டுள்ளதற்கான எல்லா அடையாளங்களும் வெளிப்பட்டன. ஆனால் இந்த பேரழிவு அரசாங்கம் மற்றும் அரசியல் சூழ்நிலைகள் மாற்றம் பெற்றதினால் தடுக்கப்பட்டது. ஆகவே தற்போதைய அரசாங்கத்துக்கு இந்த நிலைப்பாட்டை தக்க வைத்து உறுதிப்படுத்துவதற்கான பெரும் பொறுப்பு உள்ளது. கடந்த அரசாங்கத்தின் ஒரு பகுதி தற்போதைய அரசாங்கத்தின் ஒரு பகுதியாகவும் உள்ளது.
கடந்த ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நடந்தேறிய நிகழ்வுகள் தேசிய ஒற்றுமை மற்றும் நல்லெண்ணததுக்கு பெரும் தொந்தரவையும் மற்றும் தீங்கும் விளைவிப்பனவாக உள்ளன. சிலர் வாதிடுவதைப்போல இதை இரும்புக் கரம் கொண்டு அடக்குவது அல்ல சரியான வழி ஆனால் சட்டத்தின் ஆட்சியின் கீழ்தான் அடக்க வேண்டும். கட்சிகளின் அரசியலுக்கு அப்பால் தேசிய ஒருமைப்பாடு என்கிற ஒன்று உள்ளது மற்றும் அனைத்து கட்சிகள்ஃபிரிவுகளை இயன்றளவு ஒன்று சேர்க்க வேண்டும். எந்த ஒரு ஜனநாயக கட்சி அல்லது அமைப்பு பி.பி.எஸ் நடந்துகொள்ளும் விதத்தை மனச்சாட்சிப்படி ஏற்றுக்கொள்ளுமா என்று கற்பனை செய்வதே கடினமாக உள்ளது. ஆகக் குறைந்தது அனைத்து ஜனநாயகக் கட்சிகளின் வெளிப்படையான நிலைப்பாடு இதுவாகத்தான் இருக்கும். ஆகவே அந்த சாத்தியத்தை முழு அளவினல் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். கூட்டு எதிர்க்கட்சியில் உள்ள கட்சிகள் கூட, உதாரணத்துக்கு (இடது சாரி) பி.பி.எஸ் இனது இனவெறியான செயற்பாடுகளுக்கு எதிராக அணி திரள வேண்டும்.
இந்த நாட்களில் தேசிய பாதுகாப்பு பற்றிய பிரச்சினைகள் தொடர்பாக அதிகம் கலந்தரையாடல்கள் இடம்பெற்று வருகின்றன. உள்ளிலும் மற்றும் வெளியிலும் தேசிய பாதுகாப்புக்கு எதிரான மிகவும் மோசமான அச்சுறுத்தலாக தற்சமயம் உள்ளது நாட்டில் நிலவும் மதச் சச்சரவு மற்றும் மோதல் என்பனவே. இந்தப் பிரச்சினை, நிலமையை தடுப்பதற்கான பொதுவான ஒரு ஒருமித்த கருத்தை எட்டுவதற்கான தொனிப்பொருளில் ஒரு விசேட பாராளுமன்ற விவாதத்தை நடத்துவதற்கு அழைப்பு விடுக்கும் நிலமையை ஏற்படுத்தியுள்ளது. வெள்ள நிவாரண செயற்பாடுகள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி வழங்குதல் என்பனவற்றுக்கு சமமான முக்கியத்துவத்தை இது கொண்டுள்ளது.
தேனீ மொழிபெயர்ப்பு: எஸ். குமார்

நன்றி- தேனீ 

No comments:

Post a Comment