05 June 2017

ஏன் இவ்வளவு வெள்ளப்பெருக்கு மற்றும் இயற்கை அனர்த்தங்கள்? யார் இதற்கு பொறுப்பு?

ஏன் இவ்வளவு வெள்ளப் பெருக்கு மற்றும் இயற்கை அனர்த்தங்கள்? ஏற்கனவே பி.பி.எஸ் இன் கலகொட அத்தே ஞானசாரவினால் ஒரு பதில் வழங்கப்பட்டுள்ளது. அவர் சொல்லியிருப்பது, “ஒரு நாட்டில் அனர்த்தங்கள் ஏற்படுவது ஆட்சியாளர்கள்; அநீதியாளர்களாகவும் மற்றும் துன்மார்க்கர்களாகவும் உள்ள போதுதான்” என்று, இது தெளிவாக யகபாலன அரசாங்கத்தையே இலக்கு வைக்கப்பட்டுள்ளது (சிலோன் ருடே, 29 மே). ஜூன் 2014ல் இரத்தினபுரி மற்றும் மாத்தறை பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டபோது கரு ஜயசூரியா கூட இதே போன்ற கருத்தைத் தெரிவித்திருந்தார்(அத தெரண, 6 ஜூன், 2014). முஸ்லிம் விரோத ஆத்திரமூட்டல்களுக்காக அவரைக் கைது செய்யும்படி காவல்துறையினருக்கு உத்தரவு வழங்கியதால் சந்தேகமின்றி ஞானசார எரிச்சல் அடைந்துள்ளார், அந்த உத்தரவு உரிய முறையில் நடைமுறைப் படுத்தப்பட்டதா அல்லது இல்லையா என்பது வேறு விடயம். அவர் சட்டத்தின் விதிமுறையை தந்திரமாக வெல்வதற்கு நேர்மையற்ற சொல்லாட்சி மூலம் பௌத்த தத்துவத்தை துஷ்பிரயோகம் செய்ய முயலுகிறார், இங்கு துஷ்பிரயோகம் என்பது தவறாகப் பயன்படுத்தல் என்கிற ஆர்த்தத்தில் உள்ளது.
அரசாங்கத்தின்மீது கூடுதல் பொறுப்பு மற்றும் அதிக வேலைகள் சுமத்தப்பட்டுள்ள போதிலும் உண்மையில் பாதிக்கப் பட்டிருப்பது அரசாங்கம் அல்ல, ஆனால் துரதிருஷ்டம் பிடித்த வறிய மக்கள். வெள்ள நிவாரணத்துக்காகப் பயன்படுத்தப்படும் நிதி, வரி செலுத்துபவர்களின் பணம், உள்ளுர் நன்கொடைகள் மற்றும் வெளிநாட்டு உதவிகள் என்பன மூலம் கிடைத்தவை. ஜேவிபி பாராளுமன்ற உறுப்பினர்கள் மாத்திரம் தங்கள் ஒரு மாத வேதனத்தை இதற்காக தியாகம் செய்துள்ளார்கள், அதேவேளை சங்கடத்தை தடுக்க இந்த முன்மாதிரி ஏனையவர்களாலும் விரைவில் பின்பற்றப்படக் கூடும். சாதாரணமாக ஒரு அமைச்சரின் வீடும் வெள்ளத்தில் அகப்பட்டுள்ளது. மறுபக்கத்தில் கிட்டத்தட்ட 200 பேர்வரை  மரணமடைந்துள்ளார்கள், மேலும் பலர் இன்னமும் காணாமற் போனவர்களாகவே கருதப்படுகிறார்கள். சாதாரண குடிமக்களின் வீடுகள், வியாபாரங்கள், சொத்துக்கள் அழிவடைந்து போயுள்ளன.
வெவ்வேறு காரணங்கள்
(ஒரு விவாதத்துக்காக எடுத்துக் கொண்டால இந்த சாபம் கடவுள் அல்லது இயற்கையினால் வழங்கப்பட்டது, ஏனென்றால் நாட்டில் பொது பல சேனாவினால் முஸ்லிம் விரோத செயற்பாடுகள் நடத்தப்பட்டிருந்தன என்று ஒருவர் வாதிடலாம். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சில பகுதிகளில் முஸ்லிம்கள் தாக்கப்பட்டிருந்தார்கள். சமகால ஸ்ரீலங்காவில் இதுபோன்ற வாதங்கள் அல்லது எதிர்வாதங்கள் எந்தவிதமான அடிச்சுவட்டையும் பதிக்கவில்லை.அவை பழைய காலங்களில் இருந்தன. ஞனசாரவுக்கு எதிராக அவர்களால் அப்படி வாதம் செய்யக் கூடியதாக இருந்த போதிலும் எந்த ஒரு முஸ்லிமும் அப்படிச் செய்யவில்லை.
இது எனக்கு பழைய சம்பவம் ஒன்றை நினைவு படுத்துகிறது, 1930 களில் மக்கள் மலேரியா நோய்த் தொற்று பீடித்து அவதிப்பட்ட போது, சில பழமைவாத தேசியத் தலைவர்கள் “ மக்கள் அவர்களது கர்ம வினையினால் கஷ்டப்படுகிறார்கள்” என்று சொன்னார்கள் (கோவிலில் கிளர்ச்சி என்பதைப் பார்க்க).அந்த நாளில் இருந்த இடதுசாரி இயக்கங்கள் மற்றும் பிற பகுத்தறிவாளர்கள் இந்த வாதங்களை எதிர்த்து போராடுவதுடன் மலேரியாவால் பாதிக்கப் பட்டவர்களுக்கு உதவுவதுடன் நாட்டில் சுகாதார மற்றும் ஏனைய சமூக வசதிகளை விரிவுபடுத்துமாறு அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுப்பது ஆகிய இரண்டையும் செய்ய வேண்டியிருந்தது. அப்படித்தான் நலன்புரி நிலை ஸ்ரீலங்காவில் பெரிய அளவில் வளர்ந்தது. இன்று இந்த நலன்புரி நிலை கிட்டத்தட்ட அழிந்த நிலையிலேயே உள்ளது ஏனென்றால் பணத்துக்கான பைத்தியக்கார ஓட்டம், இலாபமீட்டுவதில் போட்டி மற்றும் சிரத்தையில்லாத அல்லது தாராளமயமாக்கப்பட்ட பொருளாதாரம் என்பனவே இதற்கான காரணங்கள். எல்லாவற்றையும் விட, வரையறைக்கு உட்பட்ட நடுத்தர வருமான நிலை உள்ள போதிலும் சமநிலையற்ற வளர்ச்சிகளின் காரணமாக ஸ்ரீலங்கா இன்னமும் ஒரு வறிய நாடாகவே உள்ளது. இதனால் அல்லது  சிரத்தையற்ற தாராளமயமாக்கலின் பைத்தியக்கார ஓட்டத்தால் வறிய மக்களே பாதிக்கப் பட்டுள்ளார்கள்.
தாராளமயம் என்பது ஒரு நல்ல வார்த்தை ஆனால் உண்மையான நடைமுறையில் அது தொழிலாளரை மட்டும் புறக்கணிக்கவில்லை, இங்கு வறிய மக்கள் என்பது இதன் முதன்மையான அர்த்தம், ஆனால் இயற்கை மற்றும் காலநிலை மாற்றத்தையும் புறக்கணித்துள்ளது. இயற்கையின் புறக்கணிப்பு வித்தியாசமான விகிதாச்சாரத்தில் மனித நாகரிகத்தின் ஆரம்பத்திலிருந்தே இருந்து வருகிறது, ஆனால் காலநிலை மாற்றம் அல்லது அதன் தீவிரம் என்பது சமீபத்தைய ஒரு நிகழ்வு. குறிப்பாக நவ தாராளவாதத்திற்கும் மற்றும் விரைவாக நடை பெற்றுவரும் காலநிலை மாற்றத்துக்கும் இடையில் தெளிவான ஒரு தொடர்பு உள்ளது. அன்ட்ரியன் பார் இதை மூலதனத்தின் கடுங்கோபம் என அழைக்கிறார் (“மூலதனத்தின் கடுங்கோபம்: நவ தாராண்மைவாதம் மற்றும் காலநிலை மாற்ற அரசியல்” கொலம்பியா பதிப்பகம், 2014). இந்த கடுங்கோபத்தை தான் நாங்கள் இன்று ஸ்ரீலங்காவில் காண்கிறோம். நவ தாராண்மைவாதத்தின் பழைய மற்றும் புதிய வாதங்கள் மற்றும் கட்டுப்படாத சுதந்திர சந்தை என்பனவே வழக்கமாக காலநிலை ஐயங்களாக உள்ளன.
அரசாங்க கொள்கையில் பற்றாக்குறை
இந்த மேற்பரப்பில் காலநிலை மாற்றம் அல்லது அதன் குறைபாடுகள் பற்றிய அரசாங்கத்தின் கொள்கைகள் சர்வதேச மாநாடுகளின் தீர்ப்பின்படி தவறாகத் தோன்றவில்லை. இந்த உணர்வில் எங்கள் தலைவர்கள் டொனாலட் ட்ரம்பைவிட சிறந்தவர்கள். எனினும் இதில் குறிப்பிட வேண்டியது இந்த சர்வதேச மாநாடுகள் காலநிலை மாற்றத்தின் ஒட்டுமொத்த மட்டுப்படுத்தலுக்கும் உரியது. உதாரணத்துக்கு தேசிய காலநிலை மாற்றத்தின் பின்பற்றும் மூலோபாயம் 2011 - 2016 (என்.சி.சி.ஏ.எஸ்) பற்றிய திருத்திய பதிப்பு, 2015ல் நடந்த பரிஸ் மாநாட்டில் ஸ்ரீலங்காவால் சமாப்பிக்கப்பட்டதில் அந்த நோக்கத்துக்கு போதுமானதாகக் கருதப்படலாம். நான் இந்த விடயங்களில் நிபுணன் இல்லை, ஆனால் எனக்கு கிடைத்த நம்பிக்கையான தகவல்களின் அடிப்படையில் மற்றும் ஏனைய மக்கள் மற்றும் என்னை ஒரு குடிமகனாக (இன்னும்) கருதுவதால் பொது கொள்கைகள் பற்றிய எனது கவலைகள் அல்லது நிபுணத்துவமாக உள்ளன. மூலோபாயத்தில் 5 விதமான தந்திரங்கள் உள்ளன, ஆனால் அவற்றில் எந்த ஒன்றும் காலநிலை மாற்றத்தால் ஏற்படும் இயற்கை அனர்த்தத்தின் கீழ் உண்டான அதிகரித்த வெள்ளப் பெருக்கு மற்றும் மண் சரிவு என்பனவனற்றில் தெளிவாகப் பிரயோகிக்கப் படவில்லை.
அதிகரித்த வெள்ளப் பெருக்கு மற்றும் மண்சரிவு என்பன அனர்த்த முகாமைத்துவம் சம்பந்தப்பட்ட விடயம் என வாதிட முடியும். இருந்தும் அவை இரண்டுக்கும் மற்றும் காலநிலை மாற்ற மூலோபாயத்துக்கும் இடையே ஒருங்கிணைப்பு இருப்பதற்கான முயற்சிகளை ஆரம்பிக்க வேண்டும். ஒருங்கிணைக்கப்படாத முயற்சிகளே ஸ்ரீலங்காவின் தோல்விக்கான ஒரு காரணம்.
காலநிலைச் சவால், ஜனாதிபதியினால் மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சின் கீழ் கொண்டுவரப்பட்டதின் பின்னர், ஒட்டுமொத்த காலநிலை மாற்றத்திலும் அதிகம் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதை தேர்ச்சி அறிக்கை 2015 மற்றும் செயற்பாட்டு திட்டம் 2016 வெளிப்படுத்துகிறது. எனினும், பராமரிப்பு (காடு மற்றும் கரையோரம்) மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு (கடல் மற்றும் பாரிய நீர்ப்பாசன திட்டங்கள்) போன்ற பகுதிகளிலும் பெரிய முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ள அதேவேளை காலநிலை மாற்ற முயற்சிகளின் களத்தில் தெளிவான திட்டமிடல் அல்லது நடைமுறைப் படுத்தல் இடம்பெறவில்லை.
அமைச்சில் உள்ள 11 பிரிவுகளிலும் காலநிலை மாற்ற பிரிவே மிகவும் பலவீனமானதாக காணப்படுகிறது. எதிர்காலத் திட்டமிடல் மற்றும் செயற்பாடுகள் பற்றிய விடயத்தில், 30 பகுதிகள் அல்லது செயற்பாடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன ஆனால் காலநிலை மாற்ற விளைவுகளின் குறைபாடுகள் அல்லது அதிகரித்துள்ள வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவுகள் பற்றி தெளிவான குறிப்புகள் எதுவுமில்லை. காலநிலை மாற்றம் பற்றி வாதிப்பவர்களில் கூட முக்கிய கவனம் வழக்கமாக வாயு வெளியேற்றம் (காபனீரோட்சைட்டு), வெப்பநிலை உயர்வு மற்றும் கடல்களின் எழுச்சி என்பனவற்றிலேயே உள்ளது. இவைகள் முக்கியமானவைகளாக உள்ள அதேவேளை ஸ்ரீலங்கா அவைகளை மட்டுப்படுத்த வேண்டும், தீர்வு காண்பதற்கான அதி முக்கியமான வேறு அதிகம் பிரச்சினைகள் உள்ளன.
கடல் மட்டம் உயருவதற்கு முன்பாக  அதிகரித்த பருவ மழையின்போது மண் படிவுகள் சேருவதன் காரணமாக ஆற்று நீர் மட்டமும் உயருகிறது. அதற்கு மேலதிகமாக  அதிகாரமற்ற கட்டுமானங்கள், மண் நிரப்புதல் மற்றும் உயர்ந்த நிலப் பகுதியில் இருந்து வரும் இயற்கை நீர் பாய்ச்சல் தடுக்கப்படுதல் என்பன காரணமாக ஆற்றின் கரையோரங்கள் தடுக்கப் படுகின்றன. இது பொதுவான உணர்வு.
ஒரு தனிப்பட்ட குறிப்பாக, எனது இளமைப் பருவத்தில் பள்ளிக்கூட மதிய போசன இடைவேளையின்போது, நண்பர்களுடன் சேர்ந்து வகுப்பறைக்கு பின்னால் (பிறின்; ஒப் வேல்ஸ் கல்லூரி) அமர்ந்தபடி லுணாவ ஏரியை (மொறட்டுவ) பார்த்துக் கொண்டிருந்தது இன்னும் நினைவில் உள்ளது, அதை எப்படி ஒரு பெரிய மீன்பிடி தளமாக மாற்றுவது என்று கூட கற்பனை செய்ததுண்டு. ஏனென்றால் ஒன்றிரண்டு மீனவர்கள் தற்காலிக ஓடங்களில் சென்று லு_லூ அல்லது பெத்தியா மீன்களை தங்கள் வாழ்வாதாரத்துக்காகப் பிடிப்பதை எங்களால் காண முடிந்தது. லுணாவ ஏரி இன்று அதன் பெரும்பாலான பகுதிகளில் குப்பைகள் குவிக்கப்பட்டு ஒரு பெரிய அசுத்தமான குளம் போல காட்சியளிக்கிறது. இதற்கு யார் பொறுப்பு? அது மாநகரசபையின் பொறுப்பு. உள்ளுராட்சி அமைப்புகள் சுற்றுச்சூழல் பாதுகாப்புக்காகச் செய்ய வேண்டியவை ஏராளம் உள்ளன.
நெருக்கமான காரணங்கள்
ராஸ்மன் டீ சில்வா மேற்கோள் காட்டியிருப்பதைப் போல (டெய்லி மிரர், 30 நவம்பர் 2015), மார்கிரட் கார்டினர் என்கிற ஒரு சர்வதேச சுற்றுச்சூழல ஆர்வலர், சுனாமி அனுபவத்தின் பின்னர் ஒரு முன்னறிவிப்பான எச்சரிக்கையை வெளியிட்டுள்ளார், அவர் சொல்லியிருப்பது,
“அடுத்த 55 வருடங்களுக்கு ஸ்ரீலங்காவுக்கு வரவுள்ள மிகப் பெரிய அச்சுறுத்தல் யுத்தத்தினால் அல்ல ஆனால் காலநிலை மாற்றத்தால். உயரும் கடல் மட்டங்கள் மற்றும் காலநிலை தொடர்பான அழிவுகள் என்பனவற்றுக்கு எதிராக ஸ்ரீலங்கா மிகவும் பலவீனமாக உள்ளதினால், விவசாயம், மீன்பிடி மற்றும் சுற்றுலா போன்ற சேவைகளினாலும் அடையும் ஆதாயங்களிலும் பின்னடைவைச் சந்திப்பதற்கான சாத்தியம் உள்ளது”.
இது சாதாரணமாக உண்மை. நாடு இன்று அனுபவப்பட்டிருப்பது என்னவென்றால் காலநிலை தொடர்பான பேரழிவு.அனைத்து சமூகங்கள் மற்றும் அரசியல் கட்சிகள் என்பன ஒருவருக்கொருவர் தம்முள் சண்டையிடுவதை விடுத்து ஒரு பொதுக் காரியத்துக்காக ஏன் ஒன்றிணையக்கூடாது என்பதற்கு இது ஒரு நல்ல காரணமாகும். இது வெளியில் இருந்து வரும் ஒரு அறிவு மட்டும் அல்ல. டி சில்வா அவர்கள் புத்திக ஹேமசாந்தாவை நேர்காணல் செய்தபோது மற்றைய கேள்விகளுக்கிடையில் “காலநிலை மாற்றத்தால் ஸ்ரீலங்காவில் ஏற்பட்டுள்ள தற்போதைய விளைவுகள் என்ன? என்று கேட்டார். நான் உள்ளுர் அறிவு மற்றும் உணர்வை பாராட்டுவதற்காக இதை மேற்கோள் காட்டுகிறேன். ஹேமசாந்த தனியார் - அரசாங்க பங்காளி நிறுவனமான ஸ்ரீலங்கா காபன் நிதியம் என்பதில் தலைமை நிர்வாக அதிகாரியாக இருந்தார். அது 2015ல் நடந்தது மற்றும் அவர் இப்போது என்ன செய்கிறார் என்பது எனக்குத் தெரியாது. அந்தக் கேள்விக்கான அவரது பதில் பின்வருமாறு இருந்தது.
“சுற்றுலா மற்றும் விவசாயம் ஆகிய இரு துறைகள்தான் இப்போது மிகவும் பாதிக்கப் பட்டுள்ளவை. வெள்ளம் மற்றும் பலத்த மழை என்பன போன்ற காலநிலை மாற்றத்தின் பல விளைவுகளை ஸ்ரீலங்காவாசிகள் இப்போது அனுபவித்து வருகிறார்கள். பேராதனைப் பல்கலைக்கழகத்தின் விவசாயப் பிரிவு கூட தனது ஆராய்ச்சியிலிருந்து நாட்டின் வெப்பநிலை உயர்வடைந்து வருவதாகக் கண்டுபிடித்துள்ளது. வெப்பநிலை உயர்வு நுவரெலியா போன்ற குளிரான பகுதிகளில் நுளம்புகளின் பெருக்கத்துக்கு ஒரு காரணமாக அமையும் அது நுளம்புகள் வழியாக பரவும் நோய்களை பரப்ப வழிவகுக்கும். சுற்றுலா தொடர்பான விடயங்களில் எதிர்மறையான விளைவுகள் ஏற்படும், அதை அந்த துறை அனுபவிக்க நேரிடும், அதிக மழை மற்றும் வெப்பநிலை உயர்வு என்பனவற்றால் தீவுக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை குறைவடையும். மண் சரிவுகளினால் ஏற்படும் விளைவுகளையும் கணக்கில் எடுக்க வேண்டும்”.
ஆம், வெள்ளம் மற்றும் பலத்த மழை மட்டுமன்றி நுளம்புகளால் பரவும் நோயையும் நாடு இப்போது அனுபவித்து வருகிறது. அத்துடன் மண்சரிவுகளையும். வெள்ளம் அதிகரிக்கும்போது மண் சரிவு அல்லது நோய்கள் பரவும் விடயத்திலும் உள்ளுராட்சி நிறுவனங்களுக்கு அதிக பொறுப்புகள் ஏற்படுகின்றன. அதற்கான காரணம் கட்டிடங்களின் கட்டுப்பாடு (அனுமதி உட்பட), நீர் மற்றும் வடிகாலமைப்பு வழிகள் என்பன நகர அபிவிருத்தி அதிகாரசபையின் கீழ் வரவில்லை என்றால், அவை உள்ளுராட்சி நிறுவனங்களின் கட்டுப்பாட்டின் கீழேயே உள்ளன. நீங்கள் பிரதேச சபைச் சட்டத்தை (1987ன் இல.15) உதாரணத்துக்கு எடுத்துக் கொண்டால் அதில் தெளிவாகச் சொல்லப்பட்டுள்ளது, பொது சுகாதார, பொது பயன்பாட்டு சேவைகள் மற்றும் பொது வழிகாட்டுதலுடன் தொடர்புடைய அனைத்து விடயங்களின் கட்டுப்பாடு மற்றும் நிருவாகம் மற்றும் பொதுவான பாதுகாப்பு மற்றும் பொதுமக்களின் நலன்கள், வசதி, சௌகரியம் என்பனவற்றின் பாதுகாப்பு மற்றும் மேம்படுத்தல்கள் மற்றும் அந்தப் பகுதி தொடர்பான அனைத்து வசதிகளினதும் ஒட்டு மொத்த பொறுப்பும் அதற்கே உரியது என்று.
மேலே உள்ளது சந்தேகத்துக்கு இடமின்றி ஒரு பரந்த நிறமாலை. ஆனால் மிகவும் உறுதியான வகையில் அந்த சட்டம், மழை, வெள்ளம், புயல், தீ, நில நடுக்கம், பஞ்சம் அல்லது தொற்று நோய் போன்ற இடர்களுக்கான நிவாரணம் வழங்கும் நடவடிக்கைகள் தொடர்பான அதிகாரம் மற்றும் செயற்பாடுகளளையும் குறிப்பிடுகிறது. இது பிரிவு 19ன் கீழ் உள்ளது. இது சிகிச்சையளிப்பதையே குறிப்பிடுகிறது தடுப்பதை அல்ல. உள்ளுராட்சி சபைகள் கலைக்கப் பட்டுள்ளன அவற்றுக்கான தோதல்கள் இன்னும் நடத்தப்படாத நிலையில் இன்று அவற்றை எவ்வாறு நடைமுறைப் படுத்துவது? என்று கேள்வி எழலாம். அனால் தடுப்பு அடிப்படையில், முக்கியமாக பிரதேச சபை அதிகாரிகளே இதற்குப் பொறுப்பு வடிகால்கள், நீர் வழிகள், சுரங்கப்பாதைகள், மதகுகள் அல்லது பாலங்கள் என்பனவற்றை இடுதல் மற்றும் பராமரித்தல் போன்ற பணிகள் இவர்களுக்கே ஒதுக்கப்பட்டுள்ளன. நிச்சயமாக அவர்கள் பிரதேச செயலகங்களுடன் ஒருங்கிணைந்துதான்; இந்தப் பணிகளைச் செய்ய வேண்டும். அந்தச் சட்டத்துடன் தொடர்புடைய மற்றைய பிரிவுகளும் உள்ளன, அவை இங்கு குறிப்பிடப்படவில்லை.
புறக்கணிக்கப்பட்ட பொறுப்புகள்
ஏன் இந்தப் பொறுப்புகள் அலட்சியப்படுத்தப் படுகின்றன? இதற்கு பல பதில்கள் உள்ளன அவை உள்ளுர் மற்றும் தேசிய அளவில் உள்ளன. எனது பதில்களும் பகுதி அல்லது மட்டுப் படுத்தப்பட்டவை. இதன் கருத்து அதிகரித்த வெள்ளம் அல்லது மண்சரிவு என்பனவற்றை முற்றாக தடை செய்ய முடியும் என்பதல்ல. ஏனென்றால் காலநிலை மாற்றம் ஒரு உலகளாவிய அழிவு என்பதால் ஸ்ரீலங்காவுக்கு மட்டும் வரையறுக்கப்பட்டதல்ல. சமீபகாலங்களில் அவுஸ்திரேலியாவில்கூட பெரிய வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. எனினும் மரணமானவர்களின் எண்ணிக்கை ஒன்று அல்லது இரண்டு என்று குறைவாகவே இருந்தது.  கட்டிட நிருமாணங்கள் மற்றும் மலைசார்ந்த நிலப்பகுதிகள் நன்கு பராமரிக்கப்பட்டு வருவதால் அங்கு மண் சரிவுகள் ஏற்படவில்லை.
உதாரணமாக சமீபத்தில் குயின்ஸ்லாந்தில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கின்போது காலநிலை அவதான நிலைய அதிகாரிகளால் முன்கூட்டியே எச்சரிக்கை விடுக்கப்பட்டது. காவல்துறை மற்றும் செஞ்சிலுவைச் சங்கம் ஏன் இராணுவம்கூட ஈடுபட்டு சரியான நேரத்தில் மக்களை வெளியேற்றியது. அது மக்கள் தாங்களாகவே வெளியேறுவதற்கு விட்டுவிடாமல் அல்லது எங்கள் அமைச்சர்கள் செய்வதைப்போல நடந்ததின் பின் குற்றம் சொல்லுவதைப் போல இருக்கவில்லை.(“காலநிலை அவதான திணைக்களம் மூடப்பட வேண்டும்” என்கிற மே-1, திகதிய த ஐலன்ட் செய்தியை பார்க்க). உண்மையில் ஸ்ரீலங்காவில் பாதிக்கப்பட்ட மக்களைப் போல வேறு இடத்தில் உள்ளவர்கள் அரிதாகவே பாதிக்கப்பட்டு இருப்பார்கள். எங்கள் நாட்டில் அடர்த்தியான சனத்தொகை மற்றும் சமூக பொருளாதார நிலமைகள் உள்ளதால் வெளியேற்ற நடவடிக்கைகளில் ஒழுங்கின்மை மற்றம் அலட்சியங்கள் இடம்பெறலாம். அதனால்தான் உதவி செய்வதற்கு அரசாங்கங்கள்; உள்ளன.
தேசிய மட்டத்தில் பரவலாக பேசுகையில், காலநிலை மாற்ற விளைவுகளைத் தடுக்கும் வகையில் மிகவும் நாகரீகமான அல்லது நவநாகரிகமான உலக வெப்பமயமாதல் சிக்கல்கள் புறக்கணிக்கப்படுவதாகத் தோன்றுகிறது. மாகாணசபைகள் மற்றும் உள்ளுராட்சி நிறுவனங்கள் ஆகிய இரண்டுக்கும் இடையே பாரிய மூலோபாயங்கள் மற்றும் நுண்ணிய நடைமுறைகள் என்பனவற்றறை ஒத்துழைப்புடன் ஒருங்கிணைக்கும் முயற்சிகள் எதுவும் இல்லை. உதாரணமாக ஏன் உள்ளுராட்சி நிறுவனங்கள் தங்கள் பொறுப்புகளை புறக்கணித்து விட்டன? உள்ளுர் அரசியல்வாதிகள் தங்கள் குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் பயனாளிகளை அவர்கள் விரும்புவதை எல்லாம் செய்ய அனுமதிப்பதற்கு - ஏடாகூடமான கட்டிடங்கள், குப்பைகளை குவித்தல், நில ஆக்கிரமிப்பு, மணல் அகழ்தல், நிலம் நிரப்புதல் போன்றவை - மாறாக பொருளாதார சிந்தனையுடன் செயற்பட வேண்டியது அவசியம்.
சிரத்தையற்ற நவ தாராண்மைவாதத்தின் உபகாரத்தினால் ஏழைகளுக்கென்று பாரிய வீடமைப்புத் திட்டங்கள் எதுவும் ஏற்படுத்தப்படவில்லை. அதனால் அவர்கள் தங்கள் குடிசைகள் மற்றும் குடியிருப்புகளை ஆபத்தான இடங்களில் கட்டவேண்டி உள்ளது. சிறிய இயற்கை அனர்த்தத்துக்கே அவை இடிந்து விழுந்து அடிக்கடி மக்கள் அதில் மூழ்கிவிடுகிறார்கள். இதில் அதிகம் பாதிக்கப் படுபவர்கள் சிறு பிள்ளைகளே. இந்த வெள்ள அனர்த்தத்தில் 44 பள்ளிப் பிள்ளைகள் வீணாக இறந்து போனார்கள்.
நிச்சயமாக தேவையற்ற அதிகாரத்துவம் அல்லது ஒழுங்கமைப்பு வியாபாரம் மற்றும் பொருளாதார அபிவிருத்தி என்பனவற்றை தடுக்கக்கூடும், ஆனால் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அல்லது மக்களின் நலன்புரி சேவைகள் என்பனவற்றின் நடவடிக்கைகளில் கட்டுப்பாட்டை தளர்த்தி அலட்சியம் செய்வது சுற்றுச்சூழல் பேரழிவு மற்றும் சமூக தொந்தரவுகளை எற்படுத்தலாம். அரசாங்க துறைகளின் பொறுப்புகள் புறக்கணிக்கப் பட்டுள்ளன ஏனென்றால் வளர்ச்சி இயந்திரம் ஏகபோகமாக தனியார்துறை என்றே பிரகடனப்படுத்தப் படுகிறது. இது அரசியல்வாதிகளுக்கு சோம்பலாகக் காலங்கழிப்பதற்கு, தங்கள் சொந்த வியாபாரங்களை செய்வதற்கு, குடும்பம், நண்பர்கள் மற்றும் பயனாளிகளை மகிழ்விப்பதற்கு மற்றும் ஊழல் பற்றிப் பேசாமல் மக்களுக்கு உபதேசம் செய்வதற்கு இலகுவான சாட்டாக உள்ளது. முன்பும் இதுதான் நடந்தது மற்றும் இப்போதும் இதுதான் நடக்கிறது.
பின் குறிப்பு
வடக்கிலுள்ள ஒரு தமிழ் இளைஞனிடமிருந்து வெள்ள பேரழிவு பற்றி தெற்கிலுள்ள ஒரு சிங்கள இளைஞனுக்கு அனுப்பப்பட்ட ஒரு கவிதை எனக்கு இப்போதுதான் கிடைத்தது, அதற்காக யகபாலனயவுக்கு (வலையமைப்பு) நன்றி. அது மிகவும் நீளமானது. அதன் முதல் மூன்று வரிகளை மட்டும் இங்கு குறிப்பிடுகிறேன்:
உனக்காக நான் அழ விரும்புகிறேன்
ஆனால் சிந்துவதற்கு என்னிடம் கண்ணீர் இல்லை
நான் உன்னைக் காப்பாற்ற விரைந்திருக்க முடியும்
இந்த மாதத்தில்தான் நீங்கள் எனது கால்களை துண்டித்ததால் என்னால் உன்னைக் காப்பாற்ற வர முடியவில்லை
நீ அதை மறந்திருக்கக் கூடும்.

தேனீ  - 

தேனீ மொழிபெயர்ப்பு எஸ்.குமார்

No comments:

Post a Comment