யுத்தத்திற்கு முந்திய காலத்திலும் யுத்த காலத்திலும் அரசை எதிர்த்துத் தனியாகச் செல்லக்கூடிய ஒரு செயற்திட்டம் இருந்தது. அதனால், அதையொட்டிய கோரிக்கையும் இருந்தது. தனிநாடு என்றஉஎ எண்ணக்கரு இதனால்தான் வலுப்பெற்றிருந்தது.
இதை நடைமுறைப்படுத்துவதற்கான செயற்பாட்டணிகளும் (இயக்கங்களும் போராட்டமும்) இருந்தன. மக்களிடமும் தாம் பிரிந்து ஒரு ஆட்சியை நோக்கி நகர முடியும் என்ற எண்ணமும் நம்பிக்கையும் இருந்தது. நாட்டின் ஏனைய மக்களிடத்திலும் (சிங்கள – முஸ்லிம் மக்களிடமும்) இதைக் குறித்த புரிதல் ஓரளவுக்கிருந்தது. ஈழப்போராட்டம் வெற்றியடையக்கூடும் என்ற எண்ணம் பிற சமூகத்தினரிடத்திலும் ஓரளவுக்கிருந்தது. சர்வதேச, பிராந்தியச் சூழமைவுகளும் தளம்பல் நிலையில் சாதக பாதகங்களோடிருந்தன.
ஆனால், இன்றைய நிலை அவ்வாறானதல்ல. (இதுவே யுத்தத்திற்குப் பிந்திய நிலை).
இப்போது இலங்கைத்தீவினுள்ளே அதிகாரங்களை எப்படிப் பகிர்வது? இனங்களுக்கிடையில் எவ்வாறு இணைந்தும் புரிந்தும் வாழ்வது? பன்மைத்துவத்தை எவ்வாறு பிரயோகிப்பது? அல்லது அதற்கு வலுச்சேர்க்கும் வழிமுறைகள்? அனைத்துச் சமூகங்களுக்குமான சமத்துவம்? உறுதிப்பாடு?? அதை உறுதிப்படுத்தும் உத்தரவாதம்? அதற்கான அரசியல் சட்டவாக்கம்? (அரசியல்சாசனம்) போன்ற விடயங்களே முன்னிலைப்படுத்தப்பட வேண்டியனவாக உள்ளன.
நாம் விரும்பினால் என்ன விரும்பாது விட்டால் என்ன இதுதான் யுத்தத்திற்குப் பிந்திய கால அரசியலின் அடிப்படைகள். அதாவது இலங்கைத் தீவிற்குள் அனைத்துச் சமூகங்களோடும் இணைந்து வாழ வேண்டும் என்ற நிலை. இதை எப்படிச் சமனிலைப்படுத்துவது? உத்தரவாதப்படுத்துவது? என்பதே இப்போதுள்ள பிரச்சினையும் சவாலுமாகும்.
இதை உணர்ந்துகொண்டு செயற்படும் ஆளுமையே இன்றைய தேவை.
ஆனால், விக்கினேஸ்வரனும் அவரை ஆதரிப்போரும் இதைப் புரிந்து கொள்ளவும் இல்லை. இந்தப் புதிய சூழமைவைப் பொருட்படுத்தியதாகவும் இல்லை.
இவர்கள் அனைவரும் யுத்தத்திற்கு முந்திய, யுத்த காலப் பிரகடனங்களிலும் அக்கால அணுகுமுறைக்கு நிகரானதுமான நிலைப்பாட்டையும் அதே அணுகுமுறைகளையுமே விரும்புகின்றனர்.
ஆனால் அதைச் செயற்படுத்தக் கூடிய அர்ப்பணிப்பும், உழைப்பும், திட்டமிடலும், வழிமுறைகளும் இவர்களிடமில்லை. களச் செயற்பாடு கிடையவே கிடையாது.
கதிரையில் ஆடை கசங்காமல், மடிப்புக் குலையாத சால்வையோடும் திலமிட்ட குங்குமப்பொட்டோடும் மேடைப்பேச்சுகளோடும் பெரும் புரட்சியொன்றை நிகழ்த்தி விடலாம். ஒரு தேநீர் விருந்துடன் காரியங்களைக் கன கச்சிதமாக நிறைவேற்ற முடியும். பத்திரிகை அறிக்கைகளும் காகிதச் செயற்பாடும் (Pயிநச றுழசம) எல்லாவற்றையும் நிர்ணயிக்கும் என நம்புகின்றனர்.
இதனால்தான் வடமாகாணசபை யுத்தத்திற்குப் பிந்திய காலச் சமூகத் தேவைகளை நிறைவேற்றி, அரசியல் வெற்றிகளைப் பெற முடியாமல், போனது. பதிலாகச் செயலுருப்பெறாத தீர்மானங்களையே அளவுக்கதிகமாக நிறைவேற்ற வேண்டிய நிலைக்குத்தள்ளப்பட்டது. மட்டுமல்ல, தமிழர்களின் ஒட்டு மொத்த அரசியலும் அடுத்த கட்டத்துக்கு நகராமல் அப்படியே தேங்கிப்போவதற்கும் காரணமாகியது.
விக்கினேஸ்வரனை “வந்து சந்தித்த” இந்தியப் பிரதமர், பிரித்தானியப் பிரதமர், ஐ.நா வின் பிரதிநிதிகள், பிற நாடுகளின் பிரதானிகள் போன்றோரைக் கூடச் சரியான முறையில் தமிழர்களின் அரசியல் பிரச்சினைகளுக்கும் அவற்றைப் பேசக்கூடிய உறவுக்கும் வாழ்க்கைத் தேவைகளுக்கும் ஏற்பக் கையாள முடியாமல் போனதும் இந்தத் தவறான அரசியல் எண்ணப்பாட்டின் விளைவினாலேயே. ஒரு தடவை விக்கினேஸ்வரனுடன் உரையாடியதை அடுத்து, அடுத்த கட்டச் செயற்பாட்டு உறவுக்கு இந்தத் தலைவர்களும் பிரதானிகளும் தொடர்பு கொள்ளவேயில்லை. விக்கினேஸ்வரனுடைய நிலைப்பாடும் அணுமுறைகளும் பேச்சும் அதற்கான இடத்தை ஏற்படுத்தவில்லை என்பதுதான் இதற்கான காரணமாகும். இதைக்குறித்து இதுவரையிலும் யாரும் கவனித்ததாகவும் இல்லை.
தற்குக் காரணம், அரசியல் செயற்பாட்டுப் பாரம்பரியத்தின் வழியாகவோ அரசியல் சிந்தனைப் பாரம்பரியத்தின் மூலமாகவோ விக்கினேஸ்வரன் மக்கள் அரசியலுக்கு வரவில்லை என்பதேயாகும். திடீரெனத் தமிழரசுக் கட்சி தனது வழமையான முறைமையின்படி அவரைப் “பிம்ப உருவாக்கம்” செய்து அரசியலுக்கு இறக்குமதி - அறிமுகம் - செய்ததன் விளைவே இது.
இதனையே இன்று தமிழரசுக் கட்சியும் அனுபவிக்கிறது. தமிழ் மக்களும் அனுபவிக்கின்றனர்.
இதில் கொடுமையானது என்னவென்றால், இந்தத் தெரிவுத் தவறை இன்னும் புரிந்து கொள்ளாமல் மீளவும் அதே தவற்றினைச் செய்யத் தூண்டும் சிந்தனையாளர்களின் செயற்பாடுகள் தொடர்வதாகும்.
இவர்கள் இப்பொழுது செய்கிற வேலை, வடமாகாணத்தில் விக்கினேஸ்வரனை விட்டால் முதலமைச்சர் பதவிக்கு, தகுதியான வேறு ஒரு ஆளைத் தேடிப்பிடிக்கவே முடியாது என்ற மாதிரியான ஒரு பிம்பத்தை - தடுமாற்றத்தைக் கட்டமைப்பதாகும்.
இதனால், “என்ன குறையோ தவறோ இருந்தாலும் பரவாயில்லை. விக்கினேஸ்வரன்தான் தொடர்ந்தும் முதலமைச்சராக இருக்க வேணும்” எனச் சிலர் வாதிடுகிறார்கள். இதற்கு அவர்கள் சொல்கிற காரணங்கள் ஒன்றும் அரசியல் நிமித்தமானவை அல்ல. ஒன்று, விக்கினேஸ்வரன் நேர்மையானவர் என்பது. இரண்டாவது அவர் அரசாங்கத்துக்கு வளைந்து கொடுக்காமல் சொல்ல வேண்டியதைச் சொல்கிறார். மூன்றாவது, சர்வதேசத்துடன் தெளிவாகத் துணிச்சலோடு உரையாடுகிறார். தமிழர்களுடைய அடிப்படைய உரிமைகளை விட்டுக் கொடுக்க முடியாது என்று அவர்களிடம் கூறுகிறார். நான்காவது, அவரை விட்டால், அந்த இடத்தில் இதைப்போலப் பேசக்கூடிய அடையாளமாக வேறு யார் இருக்கிறார்கள் என்ற கேள்வி.
தெல்லாம் முன்னரே இந்தப் பத்தியில் சுட்டிக் காட்டியிருப்பதைப்போல, யுத்தத்திற்கு முன்கால, யுத்தகாலச் சிந்தனையின் பாற்பட்ட சிந்தனைகளின் - தேடல்களின் வெளிப்படாகும். அத்துடன் சமூகத்தைப் பற்றிய தவறான புரிந்து கொள்ளலுமாகும்.
ஒரு சமூகத்தில் எப்போதும் பல ஆளுமைகள் இருப்பர். அவ்வாறு பிற ஆளுமைகளைக் கொண்டிருக்காமல் எந்தச் சமூகமும் இருக்காது. இதனால்தான் பன்முகத்தன்மையையும் பல தரப்பிற்கான இடத்தையும் மாற்று அடையாளத்தையும் நாம் கவனிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்படுகிறது.
ஆகவே இதன்படி புதிய மாற்றான பொருத்தப்பாடுடைய ஆளுமைகளைக் கண்டறியாமல், அவற்றை அங்கீகரிக்க முற்படாமல், அவற்றுக்கு இடமளிக்காமல் தாம் விரும்பும் ஒருவரையே தொடர்ந்தும் நிலைநிறுத்தும் வகையில் பிம்பக் கட்டமைப்புச் செய்வது தவறானதாகும்.
அது அந்தச் சமூகத்துக்கு இழைக்கப்படுகின்ற அநீதியுமாகும். கூடவே இது வரலாற்றுத் தவறாகவும் அமையும்.
இவர்களுடைய இந்தத் தவறான புரிதல்தான் கூட்டமைப்புக்கு அவரை விட்டால் வேறு கதியில்லை. தமிழரசுக் கட்சி தனித்து நின்றாலும் அதற்கும் வேறு வழியில்லை. சுரேசுக்கும் விக்கிதான் தெரிவு. கஜேந்திரகுமாருக்கும் விக்கியே துணை என்ற கணக்கில் எல்லாப் பக்கத்தாலும் விக்கினேஸ்வரனை விட்டால் வேறு யாருமில்லை என்ற முடிவே திரும்பத்திரும்ப நிரூபிக்கப்படுகிறது. (இதைக் கேட்டு யாரும் சிரித்து விடாதீர்கள்).
நிச்சயமாக இது ஒரு சமூகத்தின் ஆற்றலை குறைத்து மதிப்பிடும் தவறான செயலாகும். சமூகத்தில் வேறு தெரிவுகளுக்கு இடமே இல்லை. ஆளே இல்லை என்று கூறுவதன் மூலம் தமிழ்ச்சமூகத்தைக் கீழிறக்கி விடும் செயல் இது. வேண்டுமானால் இவ்வாறு சிந்திப்போருக்கு புதியனவற்றை இனங்காண்பதில் உள்ள துணிவின்மையும் தடுமாற்றங்களும் இவ்வாறு விக்கினேஸ்வரனைப் பற்றிப் பிடிக்கத் தூண்டக்கூடும். இந்த விக்கினேஸ்வரனைக் கூட இவர்கள் யாரும் கண்டறிந்து அரசியலுக்கு இழுத்து வரவோ அழைத்து வரவோ இல்லை. இவரைக் கொண்டு வந்தது விக்கினேஸ்வரனின் அணியினருக்கு எதிராக இருக்கும் சம்மந்தனும் சுமந்திரனுமே.
ஆகவே விக்கினேஸ்வரனே கதியென்றுரைப்போர், உண்மையில் அடுத்த முதல்வராகக் கூடிய தகுதியை விக்கினேஸ்வரன் தன்னுடைய அரசியல் வாழ்வில் நிரூபித்திருக்கிறாரா? என்பதை ஆராய்ந்தறிய வேணும்.
குறிப்பாக அவருடைய அரசியல் பாரம்பரியம், அதனுடைய வழிமுறை என்ன என்று பார்க்க வேணும். இப்பொழுது எழுபத்தைந்து வயதை எட்டியிருக்கும் விக்கினேஸ்வரன் இந்த நாட்டிலே நடந்த இனவாத வன்முறைகளின் போது எத்தகைய நிலைப்பாட்டை எடுத்திருந்தார்? அதற்கு என்ன வகையில் எதிர்வினையாற்றினார், அதற்கான அவருடைய போராட்டங்கள் என்ன? அதனால் அவருக்கு ஏற்பட்ட நெருக்கடிகள் எத்தகையன? அவருடைய கடந்த கால அரசியல் பங்களிப்புகள் என்ன? இன ரீதியான யுத்தத்தின்போது விக்கினேஸ்வரன் அந்த யுத்தத்தை எதிர்கொண்ட விதம் எவ்வாறானது? என்றெல்லாம் பார்க்க வேண்டும்.
குறைந்த பட்சம் தான் வகித்த இலங்கை நீதி நிர்வாகத்தின் உயர் பதவியிலிருந்து ஓய்வு பெற்ற பிறகு, திடீரென அரசியலுக்கு வந்தபிற்பாடாவது அவருடைய நிர்வாகம் மக்களுக்கான பணியினை ஆற்றித் தன்னுடைய சிறப்பை வெளிப்படுத்தியதா?
அவருடைய அரசியலும் நிர்வாகப் பணிகளும் பாதிக்கப்பட்ட மக்களின் கண்ணீரைத் துடைத்ததா? ஆறுதலை அளித்திருக்கிறதா? அல்லது பிந்தி அரசியலுக்கு வந்திருந்தாலும் அப்படி வந்த பிறகு அவருடைய வாழ்க்கையானது அரசியல் பயிற்சியும் அரசியல் தொடர்ச்சியும் உடையதாக மாறியுள்ளதா? அல்லது இப்போதாவரு, பாதிக்கப்பட்ட – போராடும் இனமொன்றின் அரசியலை மேற்கொள்ளக் கூடிய தலைமைத்துவ ஒழுக்கத்தை விக்கினேஸ்வரன் கொண்டிருக்கிறரா?
அந்தத் தலைமைத்துவ ஒழுக்கத்தின்படி அவரை அடையாளம் காணக்கூடிய இடங்கள் என்ன?
அவர் சந்தித்த வெளிநாட்டுத்தலைவர்கள், உள்நாட்டுத்லைவர்கள், மதபீடத்தினர், பிற சமூகங்களைச் சேர்ந்தோரை எல்லாம் எந்தளவுக்கு அவர் வென்றெடுத்திருக்கிறார்?
அல்லது இவர்களிடத்தில் எத்தகைய செல்வாக்கைச் செலுத்தியிருக்கிறார்? குறைந்தபட்சம் இவர்கள் விக்கினேஸ்வரனை எந்த அடிப்படையில் புரிந்து கொள்கின்றனர்? - நேச சக்தியாகவா எதிர்நிலைச் சக்தியாகவா?
(தொடரும்)
கருணாகரன்
நன்றி- தேனீ
No comments:
Post a Comment