09 March 2018

விக்கினேஸ்வரனின் குழப்பங்களும் விக்கினேஸ்வரனைச் சுற்றியோரின் குழப்பங்களும்

தமிழ் நாட்டில் அடுத்த முதலமைச்சர் கமலஹாசனா, ரஜனிகாந்தா, ஸ்டாலினா, தினகரனா, எடப்பாடி பழனிச்சாமியா, ஓ.பி.எஸ்ஸா, அன்புமணியா, விஜயகாந்தா...? (திருமாவளவனின் பெயரை மறந்தும் யாரும் உச்சரிப்பதில்லை)


உண்மையில் தமிழ் நாட்டின் அடுத்த முதலமைச்சர் யார் என்று இந்தப் பேர்வழிகளுக்கும் தெரியாது. அங்குள்ள மக்களுக்கும் தெரியாது. தேர்தல் வரும்போதுள்ள சூழ்நிலைகளே அதைத் தீர்மானிக்கும்.
அதிலே சரியும் இருக்கலாம். தவறுகளும் இருக்கலாம்.
ஆனால், அதற்கிடையில் (இப்பொழுது) எல்லோரும் இப்படியொரு பெயர்ப்பட்டியலை வைத்துக் கொண்டு, தங்கள் விருப்பத்துக்குரியவரை முதல்வராகக் கற்பனை செய்துகொண்டிருக்கிறார்கள். இதைப்பற்றி எதிரும் புதிருமான விவாதங்கள் தொடர்ந்து கொண்டேயிருக்கின்றன. ஊடகங்களில் தினமும் ஆய்வுகள் நடக்கின்றன. ஆருடங்கள் பலவும் வெளியிடப்படுகின்றன.
இதனுடைய அர்த்தம், “முதலமைச்சர் பதவி ஒன்றின் மூலம் மக்களின் அத்தனை பிரச்சினைகளையும் சிம்பிளாகத் தீர்த்து விடலாம்” என்ற “மாயாவி” க் கனவேயாகும். இந்தக் கனவு படித்தவர்கள் தொடக்கம் பாமர மக்கள் வரை பலரையும் பற்றிப் பிடித்துள்ளது.
ஆகவே முதலமைச்சர் பதவிக்குக் கவர்ச்சிகரமான ஒருவர் (தகுதி, தராதரம் எல்லாம் தேவையில்லை) பொருந்தி விட்டால் போதும். மற்றதெல்லாம் தானாகவே - இயந்திரகதியில் - சீராக நடக்கும் என்பதே இவர்களுடைய எண்ணம், நம்பிக்கை.
இது முறையான அரசியல் செயல்முறைக்கு எதிரானது சிந்தனை அல்லது தேர்வு என்பது அரசியலை அறிந்தோருக்குப் புரியும். வெறுமனே பொழுது போக்கிற்குப் பார்த்துக் களிக்கின்ற “மந்திரக்கோல் விளையாட்டு” அல்ல இது. சங்கரின் “முதல்வன்” படத்தில் வருவதைப்போல “ஒருநாள் முதலமைச்சர்” யுகாந்திரப் பிரச்சினைகளையெல்லாம் தீர்த்து வைக்கும் சாகஸத்தைச் செய்வார் என்று நம்பினால் நாம் என்னதான் செய்ய முடியும்?

மக்களுடைய அரசியல் பிரச்சினைகள், வாழ்க்கைச் சிக்கல்கள், பொருளாதார நெருக்கடிகள், சமூக முரண்கள், ஏற்றத்தாழ்வுகள், புவிசார் விடயங்கள் எல்லாம் ஒருபோதும் தனியொரு மனிதரால் தீர்த்து வைக்கக்கூடியவை அல்ல. அதைக் கூட்டுச் செயற்பாட்டின் மூலமாகவே எட்ட முடியும். சரியான கொள்கையும் தூரநோக்கும், அதைச் செயலாக்கக்கூடிய அர்ப்பணிப்பு மிக்க உழைப்பும், சேர்ந்தியங்கும் பண்பும், முறையான திட்டமிடலும் வினையாற்றலும் சரியாக இருக்கும்போதே மேற்சொன்னவற்றைச் சீராக நிறைவேற்றக் கூடியதாக இருக்கும்.
இதற்குத் தலைமை தாங்குகின்றவர் சிறந்த ஆளுமையாக இருந்தால், இந்த விடயங்கள் வேகமாகவும் சிறப்பாகவும் நடக்கும். அதற்காக தனியொருவர் சிறந்த ஆளுமையாக இருந்தால் மட்டும் போதாது, எல்லாவற்றையும் அவரே தனித்து நின்று “வீரசாகஸமாக – கதாநாயகனாக – களமாடி வெற்றிகாண்பதற்கு. அப்படித் தனியாளுமைகள் வரலாற்றில் இருந்திருக்கிறார்கள், இன்னும் இருக்கிறார்கள். ஆனால், அவர்கள் ஒரு அரசியல் செயற்பாட்டு வழிமுறைகளுக்கு ஊடாகம் அத்தகைய அனுபனுபவங்களின் வழியாகவும் வந்தவர்களாக இருப்பார்கள். ஃபிடல் காஸ்ரோ, மண்டேலா, நேரு, அண்ணாத்துரை, காமராஜர், கக்கன், கருணாநிதி போன்ற பலர் இதற்கு உதாரணம்.
இன்றைய தமிழ்ச் சமூகத்தின் புரிதல் இவற்றைப் பொருட்படுத்துவதாகத் தெரியவில்லை. தங்கள் மன விருப்பங்களைப் பிம்பமாகக் கண்டு, அதையே எளிமையாக - நிஜமென நம்புகிறது. இவற்றைச் செயற்படுத்துவதற்கான சிந்தனைப் பலத்தையோ கடினமான இடையறாத உழைப்பையோ அர்ப்பணிப்பான பங்களிப்பையோ இது கணக்கிடவில்லை. அரசியல் நெருக்கடிகளையும் உலகளாவிய இணைப்பில்தான் ஒவ்வொரு செயற்பாட்டுக் கண்ணிகளும் தொடர்புறுத்தப்பட்டுள்ளன. ஆகவே ஒவ்வொரு நெருக்கடியையும் அதற்கான பொறுதியோடும் பொறிமுறைகளோடும் கையாண்டே வெற்றியடைய வேண்டும் என்பதையும் புரிந்து கொண்டதாகத் தெரியவில்லை.
இதனால்தான் ஒரு முதலமைச்சர் வந்து அமர்ந்து விட்டால் போதும். எல்லாமே சீராகச் சிறப்பாக நடக்கும் என்று தமிழ்ச் சமூகம் எண்ணுகிறது. இது தமிழ்நாட்டிலும் சரி, ஈழத்திலும் சரி ஒன்றுதான். ஒரே மாதிரியான சிந்தனை.
இதனால்தான் விக்கினேஸ்வரனை வடக்கின் முதலமைச்சராகத் தொடர்ந்தும் அமர்த்துவதற்குக் கனவு காண்கிறது தமிழ் சமூகம். கிழக்கைப்பற்றி இவர்கள் சிந்திப்பதில்லை என்பது இங்கே கவனிக்க வேண்டிய இன்னொரு விசயம்.  விக்கினேஸ்வரனை விட்டால் முதலமைச்சர் பதவிக்கு வேறு ஒரு தகுதியான ஆளைத் தேடிப்பிடிக்கவே முடியாது என்ற மாதிரி ஒரு பிம்பம் உருவாக்கப்பட்டுள்ளது. இதனைச் சில அரசியற் பத்தி எழுத்தாளர்களும் சில ஊடகங்களும் ஒரு குறிப்பிட்டளவு தொகுதியினரும் அந்தரப்பட்டுச் செய்து கொண்டிருப்பதைக் காண்கிறோம்.
எதற்காக இந்த அந்தரம்?
விக்கினேஸ்வரனை விட்டால், இன்று “தமிழர்களின் அரசியல் கோரிக்கைகளை” வெளிப்படையாகவும் துணிச்சலாகவும் பேசக் கூடிய வேறு ஒரு தலைவர் இல்லை என்ற எண்ணத்தின் வெளிப்பாடே இந்த அந்தரமாகும்.
இன்னும் சற்றுக் கூர்மைப்படுத்திச் சொன்னால், தமிழர்களுடைய அரசியலை வெளிப்படுத்தக் கூடிய – அதை வெற்றிகரமாகச் செயலுருவாக்கக் கூடிய, வெளியுலகக் கவர்ச்சி மிக்க ஆளுமையாக வேறு எவரும் இல்லை என்று கருதுவதனால் ஏற்பட்ட நிலை இதுவெனலாம்.
உண்மையில் இதுவொரு தவறான புரிதலாகும். அல்லது பொருத்தமற்ற சிந்தனையாகும்.
இதற்குச் சில காரணங்களை முன்வைக்கலாம். ஒன்று, விக்கினேஸ்வரன் முன்வைக்கின்ற அரசியல் நிலைப்பாடு ஒன்றும் புதியதல்ல. தமிழர் தரப்பினால் நீண்டகாலமாகவே வெளிப்படுத்தப்பட்டு வந்த ஒன்றையே விக்கினேஸ்வரனும் சொல்கிறார். அதையே விக்கினேஸ்வரன் பிரதிபலிக்கிறார். இதைப் பிரதிபலிப்பதற்குச் சமகாலத்தில் தமிழ் மக்களின் நம்பிக்கைக்குரிய சக்தி எதுவும் இல்லை என்று கருதுவோர் விக்கினேஸ்வரனை முதன்மையாகக் காண்கின்றனர்.
ஆனால், இந்த அரசியல் நிலைப்பாட்டை நடைமுறைப்படுத்துவதற்கான அணுகுமுறைகள் யுத்தத்திற்கு முந்திய காலம், யுத்த காலம் போன்றவற்றில் இருந்ததாக இருக்க முடியாது.
இது யுத்த்திற்குப் பிந்திய காலம்.
எனவே, யுத்தத்திற்குப்பிந்திய அரசியல் சூழமைவின் அடிப்படையில் தமிழர்களுடைய அரசியல் அபிலாஷைகளை அல்லது கோரிக்கைகைள அடைவதற்கான முறைமைகள் அமைய வேண்டும். அப்படி அமையும்போது இன்றைய அரசியல் தேக்கத்தையும் நீண்ட கால அரசியல் போராட்டத்தையும் வெற்றிகரமாக முன்னெடுக்க முடியும்.
இதற்கான மனநிலை, இதற்கான தளத் தயாரிப்புகள், இதற்கான வழிமுறைகள், இதற்கான கருத்திட்டங்கள் அனைத்தும் வேறானவை.
அதற்காக “யுத்தத்திற்குப் பிந்திய சூழமைவு” என்பதை யுத்தத்தில் தோல்வியுற்ற நிலையிலிருந்துதான் நாம் அரசியலை முன்னெடுக்க வேண்டும், பேச வேண்டும் எனத் தமிழர்கள் தவறாகப் புரிந்து கொள்ள வேண்டியதில்லை. அல்லது வெற்றிபெற்றவர்களுடன் எப்படிச் சமாதானத்தை எட்ட முடியும்? எப்படி அவர்களிடம் அதை எதிர்பார்க்க முடியும்? வலுச்சமனற்ற நிலையில் சமாதானத்துக்கான சமனிலையை எவ்வாறு எதிர்பார்க்க முடியும்? என்றும் கேட்க வேண்டியதில்லை.
இதை வேறு நிலையிலிருந்து புரிந்து கொள்ள வேண்டும். அதாவது எந்தத் தாழ்வுச் சிக்கலுக்கும் உயர்வுச் சிக்கலுக்கும் உள்படாமல், அறிவு நிலைப்பட்டுச் சிந்திக்க வேண்டும். இதில் தோல்வி மனப்பான்மையோ அவர்கள் – எதிர்த்தரப்பினர் – வென்று விட்டனர் என்ற எண்ணமோ அவசியமற்றது. அத்தகைய சிந்தனையின் அடிப்படையில்தான் அவர்கள் – எதிர்த்தரப்பினர் – அணுகினாலும் அதைக் கடந்து செல்வதற்கான அறிவுப் பொறிமுறை நம்மிடம் இருக்க வேண்டும். அந்த அறிவுப் பொறிமுறையினூடாக நாம் அவர்களை – எதிர்த்தரப்பினரைத் தோற்கடிக்க முடியும். அதாவது அவர்களுடைய தவறான  - வெற்றி மேலாதிக்க - எண்ணத்தை முறியடிக்கலாம்.

கருணாகரன்
(தொடரும்)




No comments:

Post a Comment