“தொடர்ந்தும் அரசியலில் ஈடுபடுவதற்கான முகாந்திரங்களை விக்கினேஸ்வரன் கொண்டிருக்கிறாரா?” என்ற கேள்வி இன்று எழுப்பப்பட்டே ஆக வேண்டும். கூடவே இன்னொரு கேள்வியும் உண்டு. அரசியல் களத்தில் தொடர்ந்து செயற்படுவதற்கான தகுதியையும் திட்டங்களையும் தான் கொண்டிருக்கிறேன் என்று விக்கினேஸ்வரன் கருதுகிறாரா?” என்பது.
முதலாவது கேள்வி, விக்கினேஸ்வரனை ஆதரிப்போருக்கானது. இரண்டாவது கேள்வி விக்கினேஸ்வரனுக்கானது. இவை இரண்டும் தவிர்க்கவே முடியாதவை.
விக்கினேஸ்வரனின் அபிமானிகளும் அவரை ஆதரிப்போரும் எத்தகைய கேள்விகளுக்கும் அப்பால் வைத்தே விக்கினேஸ்வரனை நோக்குகின்றனர். இது விக்கிரக வழிபாட்டுக்குச் சமனானது. இதனால்தான் “சரியோ பிழையோ அவர்தான் எங்களுக்கு வேண்டும். அவரால்தான் தற்போதைய சூழலில் தமிழ் மக்களின் உரிமைக்கான அரசியலை முன்னெடுத்துச் செல்ல முடியும். அவரைத் தவிர வேறு தெரிவில்லை. வேறு ஆளில்லை” என்பது இவர்களுடைய வாதமாகிறது. அதாவது விக்கினேஸ்வரனைத் தவிர, மாற்றுத் தெரிவில்லை என்பது இவர்களுடைய நம்பிக்கை.
இதற்கான அடிப்படைகளைப் பற்றி – அதாவது விடுதலைக்காக உயிரை அர்ப்பணித்துப் போராடிய இனமொன்றின் – முதல் நிலைப்பாத்திரமேற்று இயங்கக் கூடிய தகுதியை விக்கினேஸ்வரன் கொண்டிருக்கிறாரா என இவர்கள் சிந்திக்கவே இல்லை. இந்தப் போராட்டத்தின் நிழலிலேனும் அவர் ஒதுங்கியதுண்டா? இதன் வலியை ஏற்றிருக்கிறாரா? இதன் இழப்புகளைப் பற்றிய புரிதல் அவருக்குண்டா? குறைந்த பட்சம் போராட்டத்தில் ஈடுபட்டவர்களோடும் பாதிக்கப்பட்டவர்களோடும் அவருக்கு ஏதேனும் உறவும் நெருக்கமும் இருக்கிறதா? கடந்த 70 ஆண்டுகால அரசியல் விடுதலைப் போராட்டத்தில் ஒரு பத்தாண்டு காலமாவது ஏதேனும் வகையில் தொடர்பாவது கொண்டிருந்திருக்கிறாரா? என்பதையெல்லாம் இந்த விக்கினேஸ்வராபிமானிகள் எண்ணிப் பார்க்கவில்லை.
அப்படிச் சிந்தித்திருந்தால், விக்கினேஸ்வரனைப்பற்றிய – அவருடைய செயற்பாட்டுப் பெறுமானங்களைப் பற்றிய கேள்விகள் இவர்களிடம் எழுந்திருக்கும். அந்தக் கேள்விகள் விக்கினேஸ்வரனைப் பற்றிய – அவருடைய செயற்பாடுகளைப் பற்றிய மதிப்பீட்டை நோக்கி நகர்த்தியிருக்கும். அந்த மதிப்பீடு விக்கினேஸ்வரனை கொண்டாட முடியாத, அரசியல் செயற்பாட்டுப் பெறுமான ரீதியில் நம்பிக்கை கொள்ள முடியாத உண்மையை உணர்த்தியிருக்கும்.
ஆனால், இதெல்லாம் இவர்களிடத்திலே ஏற்படவில்லை. இதற்குக் காரணம், முன்னரே குறிப்பிட்டுள்ளதைப்போல, இவர்கள் அனைவரும் கேள்விக்கிடமில்லாத விசுவாச – விக்கிரக - வழிபாட்டில் சிக்கியுள்ளனர் என்பதாகும்.
இது விக்கினேஸ்வரன் விசயத்தில் மட்டும் நடக்கின்ற ஒன்றல்ல. தமிழ்ப்பொது மரபிலும் மனதிலும் உள்ள பாரம்பரியக் குணாம்சத்தின் வெளிப்பாடு. தமிழரசுக் கட்சியின் ஸ்தாபகர் எஸ்.ஜே.வி. செல்வநாயகம், விடுலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் போன்றோரின் மீதும் தமிழ்ப் பொது மனதுக்கு இத்தகைய கேள்விக்கிடமற்ற விசுவாசமே இருந்தது. இன்னும் இருக்கிறது. இத்தகைய விசுவாசம் இப்பொழுது அடுத்த மட்டத்தில் குறுமன்னர்களாகத் தங்களைக் கட்டமைக்க முயலும் சில பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாணசபை உறுப்பினரிகளினாலும் உருவாக்கப்பட்டு வருகிறது.
ஆனால், எத்தகைய விமர்சனங்களுக்கும் அப்பால், செல்வநாயகத்துக்கும் பிரபாகரனுக்கும் அரசியலில் சில அடிப்படைத்தகுதிகள் இருந்தன. அவர்கள் அதற்கான செயற்பாட்டு முறைமையையும் கொண்டிருந்தனர். பிரபாகரன் இதில் இன்னும் மேற்படியில் நின்றார். விக்கினேஸ்வரனிடம் அத்தகைய எந்தச் சிறப்புகளும் இல்லை. ஆனாலும் சிலர் பிரபாகனின் இடத்தில் வைத்து விக்கினேஸ்வரனைப் பார்க்கின்றனர். இது நகைப்பிற்குரியது. மட்டுமல்ல, பிரபாகரனையும் அவமதித்து விக்கினேஸ்வரனையும் கேலிக்குள்ளாக்குவதாகும்.
விக்கினேஸ்வரன் அரசியலுக்கு நேரடியாக வந்த பின்னர் (2010க்குப் பிறகு) செய்ததெல்லாம் தன்னைச் சுற்றிப் பிம்பத்தைக் கட்டமைத்தது மட்டுமே. மாகாணசபையில் நிறைவேற்றப்பட்ட இனப்படுகொலைக்கெதிரான தீர்மானம் தொடக்கம் இதுவரையான அவருடைய உரைகள், அறிக்கைகள், தீர்மானங்கள், அரசியல் பிரகடனங்கள், சந்திப்புகள் அனைத்துமே இந்தப் பிம்பத்தை உருவாக்குவதற்கான காரியங்களாகச் சுருங்கி விட்டன. இதை அவர் திட்டமிட்டுச் செய்தார் என்று சொல்ல வரவில்லை. ஆனால், அப்படி ஆகி விட்டன. தொடர்ந்து அப்படித்தான் விக்கினேஸ்வரன் இதைக் கையாள்கிறார்.
தொடக்கத்தில் சில அடிப்படை நியாயத்தன்மைகளை உணர்ந்து விக்கினேஸ்வரன் மேற்படி தீர்மானங்களை நிறைவேற்றியதும் சந்திப்புகளை மேற்கொண்டதும் அரசியல் பிரகடனங்களைச் செய்ததும் உண்டு. ஆனால், அவற்றுக்கான செயற்பாட்டுப் பொறிமுறையைப் பற்றி அவர் சிந்திக்காமல் விட்டதன் மூலமாக இவை நடைமுறைப் பயனைத் தராத வெற்று ஆரவாரங்களாகச் சுருங்கி விட்டன.
பிரகடனங்களைப் பெரும் புரட்சியென நம்புவோரைத் தவிர, நடைமுறைப் பெறுமானங்களை எதிர்ப்பார்ப்போரிடத்தில் விக்கினேஸ்வரன் சிறியதொரு பொம்மையாகி விட்டார். இந்த இடத்தில்தான் சுவாரஷ்யமான ஒரு விடயத்தை நாம் அவதானிக்கக்கூடியதாக உள்ளது. ஒரு தரப்பினருக்கு விக்கினேஸ்வரன் புனித விக்கிரகம். இன்னொரு தரப்பினருக்கு அவர் ஒரு சிறிய அலங்காரப்பொம்மை. இதில் கவனிக்க வேண்டிய இன்னொரு முக்கியமான விசயம், இந்த இரண்டு தரப்பினருமே தமிழ் மக்களின் அரசியல் உரிமை மற்றும் வாழ்க்கை மேம்பாடு – பொருளாதார உயர்ச்சியில் அக்கறை கொண்டோர் என்பது. ஆனால் ஒரு தரப்பு நடைமுறைக்கு அப்பால் சிந்திக்கிறது. மறு தரப்பு நடைமுறை சார்ந்து சிந்திக்கிறது. இதுவே இரண்டுக்குமான வேறுபாடு.
தன்னுடைய பிரகடனங்களைச் செயலுருப்பெற வைப்பதன் மூலமே அவற்றை அரசியல் வெற்றியாக்க முடியும் என்பது பெரும்பாலான தலைவர்களின் சிந்தனையாக இருக்கும். இதுதான் தலைமைத்துவச் சிறப்பும் ஆளுமை வெளிப்பாடுமாகும். அவர்கள் அதிலேயே குறியாக இருப்பார்கள். இல்லாதவர்கள் வெறும் கூச்சல்வாதிகளாக – அரசியல் கோமாளிகளாக வரலாற்றால் கழிக்கப்பட்டு விடுவர். விக்கினேஸ்வரனின் பிரகடனங்களும் தீர்மானங்களும் அறிக்கைகளும் சந்திப்புகளும் எட்டிய – சாதித்த - வெற்றிகள் என்ன?
இதை அவரை ஆதரிப்போர் துணிந்து கூறுவதற்கு முன்வர வேண்டும்.
1. இனப்படுகொலைத் தீர்மானத்தை விக்கினேஸ்வரன் தலைமை ஏற்று மாகாணசபையில் நிறைவேற்றினார். இதனால் தமிழ் மக்களில் பெரும் பகுதியினரிடத்திலே விக்கினேஸ்வரனுக்குப் பெரும் புகழும் மதிப்பும் ஏற்பட்டது. அத்துடன் அவர் மீதான அரசியற் கவர்ச்சியையும் அதிகமாக்கியது. ஆனால், இந்தத் தீர்மானத்தை விக்கினேஸ்வரன் அங்கத்துவம் வகிக்கின்ற தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் இன்னொரு முக்கியஸ்தரான எம். ஏ. சுமந்திரன் அப்பொழுதே விமர்சித்தார். இருவருமே சட்ட அறிஞர்கள். அதிலும் விக்கினேஸ்வரன் நீதியரசராக இருந்தவர்.
முதலில் இந்த முக்கியமான விடயத்தில் ஒரே தரப்பிற்குள் முரண்கள் – வேறுபாடுகள் – அபிப்பிராய பேதங்கள் வந்திருக்கக்கூடாது. அவ்வாறு வரக்கூடிய பாதகச் சூழல் இருந்திருக்குமாக இருந்தால், அதனைக் கருத்திற் கொண்டு, இந்த விடயத்தைக் கவனமாகக் கையாண்டிருக்க வேண்டியது விக்கினேஸ்வரனின் பொறுப்பாகும். அதாவது, இத்தகைய ஒரு முக்கியத்துவம் வாய்ந்த தீர்மானத்தை எடுக்கும்போது உள்வீட்டுக்குள்ளேயே இரண்டக நிலை இருக்கக்கூடாது என்பதை வலியுறுத்தி, அதை இல்லாமல் செய்திருக்க வேண்டும்.
அவ்வாறு செய்யாததன் காரணமாக மாகாணசபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் பத்தோடு பதினொன்றாக வெறும் காகித அறிக்கையாகச் சுருங்கிப் போனது. வெளியே அது எத்தகைய கொதிப்பையும் கவனிப்பையும் உண்டாக்கவில்லை. அரசியல் நெருக்கடிகளை உருவாக்கவில்லை. மட்டுமல்ல, நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தைத் தொடர்ந்து அதைச் சட்ட வலுவான ஒரு விவகாரமாக – விடயமாக - மாற்றி நீதியைக் கோரும் செயல் முறைக்கும் நெருக்கடி நிலைக்கும் கொண்டு செல்லவும் இல்லை. அப்படி வளர்த்தெடுக்கவும் இல்லை.
ஏனெனில் இதைக் கனதியான ஒரு அரசியல் விவகாரமாக விக்கினேஸ்வரன் உணரவில்லை. அவரைப் பொறுத்தவரை இதற்கான தீர்மானத்தை நிறைவேற்றினால் போதும். அதற்கப்பால் அதைச் செயலுருவாக்க வேண்டும். அதற்கான பொறிமுறைகளை உருவாக்கிச் செயற்படுத்த வேண்டும் என்பதைப் பற்றியெல்லாம் பொருட்படுத்தவில்லை. அப்படிச் சிந்தித்திருந்தால் அதை நோக்கி அவர் தொடர்ந்து செயற்பட்டிருப்பார். அதற்கான நிபுணர்களை தமிழ்ப்பரப்பிலும் சர்வதேசப் பரப்பிலும் கண்டு அவர்களை ஓரணியாக்கி, அவர்கள் மூலமாக இந்த விடயத்தை முன்னெடுத்திருப்பார். ஆனால், அப்படியெல்லாம் நடக்கவே இல்லை. இது ஏனென்று எவரும் இதுவரை கேட்டதேயில்லை.
2. தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு 2014 க்கு முன் பின்னாக முன்னெடுத்து வரும் கலங்கலும் குழப்பங்களும் நிறைந்த அரசியல் வழிமுறையில் விக்கினேஸ்வரன் வேறுபட்டுத் தெரிகிறார். தனித்துவமாக நிற்கிறார். விட்டுக்கொடுப்புகளுக்கும் சமரசங்களுக்கும் அப்பால் தன்னுடைய நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கிறார். தமிழ் மக்களின் அரசியல் கோரிக்கையில் தெளிவாக இருக்கிறார். அதிலும் கூட்டமைப்பின் தலைவரும் விக்கினேஸ்வரனை அரசியலுக்கு அழைத்து வந்தவருமான இராஜவரோதயம் சம்மந்தனையும் அவருக்கு அனுசரணையாக இருந்த சுமந்திரனையும் எதிர்த்து நின்று இவற்றையெல்லாம் செய்கிறார் என்றவாறான அவதானம்.
மேம்போக்கான பார்வையில் இந்தத் தோற்றம் சரிபோலவே தெரியும். ஆனால், உள்ளோட்டங்கள் வேறானவை. கூட்டமைப்பில் இத்தகைய வேறு நிலைப்பட்டு - முரண்நிலைப்பட்டுத் தோற்றமளிக்கும் பண்பு பொதுவான ஒன்று. எளிய உதாரணம், யாழ்ப்பாணத்தில் ரணில் விக்கிரமசிங்க, மனோ கணேசன் போன்றோருடன் இணைந்து இலங்கையின் தேசியக் கொடியை சம்மந்தன் ஏந்தியதை மாவை சேனாதிராஜாவும் கூட்டமைப்பின் சில பாராளுமன்ற உறுப்பினர்களும் பகிரங்கமாகவே கண்டித்திருந்தனர், எதிர்த்திருந்தனர். ஆனால், கூட்டமைப்பின் எந்தக் கூட்டத்திலும் இதைக்குறித்து நடைமுறையில் எத்தகைய ஒழுக்காற்று நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. இதைப்போல கொழும்பில் ஒரு கதை. வடக்குக் கிழக்கிலே ஒரு கதை. அரசாங்கத்தோடு கூட்டமைப்பின் தலைமைக்கு நெருக்கமான உறவு. அடுத்த மட்டத்தினர் அரசாங்கத்தை எதிர்ப்பதாகவும் விமர்சிப்பதாகவும் ஒரு தோற்றம். விடுதலைப்புலிகளைச் சாடி, சம்மந்தனும் சுமந்திரனும் விமர்சிப்பர். விடுதலைப்புலிகளை ஆராதித்தும் போற்றியும் அரசியல் செய்வர் ஏனையவர்கள். தமிழ்த்தேசியக் கூட்டமைப்பை விடுதலைப்புலிகள் உருவாக்கவில்லை என்பார் சம்மந்தன். பிரபாகரன் உருவாக்கிய கட்சியாகக் கூட்டமைப்பே உள்ளது என்று சொல்லுவார் சிறிதரன். இப்படி எதிர்நிலைப்பட்டும் முரண்பட்டும் பேசி, தந்திரோபாயமாகத் தமக்கான வெற்றியை நோக்கிய அரசியலை முன்னெடுத்துச் செல்வது தமிழ்த்தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்தோரின் இயல்பும் நடைமுறையுமாகும்.
அவரவர் தத்தமக்குச் சாத்தியமான முறையில் எதையும் எப்படியும் பேசலாம், எப்படியும் செயற்படலாம் என்ற ஒரு உள்நெகிழ்ச்சி கூட்டமைப்பில் உண்டு. இதற்கு ஒருபோதும் எதிர்ப்போ ஒழுக்காற்று நடவடிக்கையோ மேற்கொள்ளப்படுவதில்லை. ஆகவே விக்கினேஸ்வரனும் இதில் ஒரு அங்கமே தவிர, “புதிய புரட்சியாளர்” கிடையாது. தனக்குச் சாதமான ஒரு “லைனை” எடுத்துக் கொண்டு அதிலே கம்பு சுத்துகிறார். மற்றும்படி அவர் ஒன்றும் கூட்டமைப்பின் தலைமைப்பீடத்துக்கு நேரெதிரான நிலைப்பாட்டைக் கொண்டவரும் இல்லை. கூட்டமைப்பின் பிரதான அணுகுமுறைக்கும் வழிமுறைக்கும் எதிரானவரும் இல்லை. அவ்வளவுதான்.
- கருணாகரன்-
(தொடரும்)
No comments:
Post a Comment