நாசிக்கிலிருந்து மும்பை சென்ற விவசாயிகளின் நீண்ட பயணம்வரலாற்றுச்சிற ப்புமிக்கதொரு வெற்றியைப் பெற்றிருக்கிறது. மார்ச் 6ஆம் தேதியன்று 25 ஆயிரம் விவசாயிகளுடன் புறப்பட்ட பேரணி, சுமார் 200 கிலோ மீட்டர் தூரம் நடந்து மார்ச் 12ஆம் தேதியன்று மும்பையைச் சென்றடைந்தது. ஒவ்வொருநாளும் பேரணியில் சென்றவர்கள் எண்ணிக்கை மிக வேகமாக அதிகரித்து, மும்பையைச் சென்றடைகையில் பேரணியில் வந்தோர் எண்ணிக்கை 50 ஆயிரத்தைத் தாண்டி இருக்கிறது.
நீண்ட பயணத்தின் தரம் மிகச் சிறப்பானமுறையில் இருந்திருக்கிறது. பேரணியில் வந்த விவசாயிகள் கடைப்பிடித்த கட்டுப்பாடு, உறுதி மற்றும் கூட்டாகச் செயல்பட்டவிதம் பார்த்தவர்கள் அனைவரையும் மிகுந்த அளவில் இன்ப அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது. பெரும்திரளான ஊர்வலத்தினர் தங்கள் கைகளில் செங்கொடியை ஏந்தியவண்ணம் பயணித்தது பார்த்தவர்களின் கண்களுக்கு, செங்கடல் போல் காட்சி அளித்திருக்கிறது. இதனை தேசிய மற்றும் மாநில அளவிலான ஊடகங்களாலும் தவிர்த்திடமுடியவில்லை. தங்கள் ஊடகங்கள் மூலமாக நாட்டின் அனைத்து முனைகளுக்கும் இதனை எடுத்துச் சென்றன. விவசாயிகளின் நீண்ட பயணம் தேசிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்திய அளவிற்கு, சமீப காலங்களில் வேறெந்த பெரும்திரள் கிளர்ச்சியும் தாக்கத்தை ஏற்படுத்தியதில்லை.
மகாராஷ்ட்ராவில், பாஜக தவிர மற்ற அனைத்து அரசியல் கட்சிகளுமே விவசாயிகளின் நீண்ட பயணத்தையும், அவர்கள் முன்வைத்த கோரிக்கைகளையும் ஆதரித்திருக்கின்றன. மும்பையில் வாழும் சாமானிய மக்கள் மற்றும் பல்வேறு சமூக மற்றும் சுயசேவை அமைப்புகளைச் சார்ந்தவர்கள், பயணத்தில் வந்தவர்களுக்கு உணவு, தண்ணீர் மற்றும் சில இடங்களில் காலணிகளும் அளித்திருக்கின்றனர்.
நீண்ட பயணம், குறிப்பிடத்தக்க வெற்றியுடன் நிறைவடைந்திருக்கிறது. மாநில முதலமைச்சரின் தலைமையின்கீழ் அமைச்சர்கள் குழு ஒன்று, விவசாய சங்கத் தலைவர்களுடன் பேச்சுவார்த்தைகள் மேற்கொண்டு, முக்கியமான கோரிக்கைகளில் பெரும்பாலானவை குறித்து ஓர் ஒப்பந்தத்தை ஏற்படுத்தி இருக்கின்றனர். ஒப்பந்தத்தில் வன உரிமைகள் சட்டத்தை அமல்படுத்துதல் மூலம் பழங்குடியினருக்கு கடந்த பல ஆண்டுகளாகவே பயிரிட்டுவந்த நிலங்களுக்குப் பட்டாக்கள் வழங்குவதை உத்தரவாதப்படுத்துவது, இது தொடர்பாக நிலுவையில் உள்ள விண்ணப்பங்கள் மற்றும் மேல்முறையீடுகள் குறித்து ஆறு மாதங்களுக்குள் தீர்வளிப்பது, விவசாயிகளின் கடன் தள்ளுபடி குறித்து ஆராய்ந்து முடிவெடுப்பது, விவசாய விளைபொருள்களுக்கு விலை நிர்ணயம் செய்வது குறித்து குழு ஏற்படுத்துவது, ஆறுகளை இணைப்பதன் மூலம் நாசிக், பால்கார் மற்றும் தானே மாவட்டங்களில் வாழும் பழங்குடியின மக்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து ஆராய்ந்து அவர்களுக்கு உரிய மாற்று ஏற்பாடுகளுக்கு உத்தரவாதம் அளிப்பது, விதர்பா மற்றும் மரத்வாடா பகுதிகளில் பாசனப் பயிர்களுக்கும் பருத்திப் பயிர்களுக்கும் பூச்சிகள் தாக்குதல்களினால் ஏற்பட்ட இழப்புகளுக்கு நிவாரணம் மற்றும் விவசாயிகளுக்கு ரேஷன்கள் வழங்குதல் முதலானவை இந்த ஒப்பந்தத்தில் இடம்பெற்றுள்ளன.
நீண்ட பயணத்தின் வெற்றியைப் பொதுவாகவே மக்கள் வரவேற்றிருக்கிறார்கள். அதிலும் குறிப்பாக, விவசாயிகளிலேயே மிகவும் அடித்தட்டில் இருக்கின்ற பழங்குடியினரின் கோரிக்கைகளை இவை நிறைவேற்றியிருப்பதால், பழங்குடியினர் மிகவும் மகிழ்ச்சியுடன் இதனை வரவேற்றிருக்கின்றனர்.
சென்ற ஆண்டு ஜூலை 1 – 11 தேதிகளில் மகாராஷ்ட்ரா மாநிலத்தில் விவசாயிகள் மேற்கொண்ட மகத்தான 11 நாள் வேலைநிறுத்தத்திற்குப் பிறகு, இந்த நீண்ட பயணம் நடந்திருக்கிறது. வேலை நிறுத்தம் நடைபெற்ற அந்த சமயத்தில், மகாராஷ்ட்ர அரசாங்கம் கடன் தள்ளுபடி உட்பட விவசாயிகளின் சில கோரிக்கைகளை ஏற்பதாக உறுதி அளித்திருந்தது. ஆனாலும், அது தான் உறுதியளித்தபடி அவற்றை நிறைவேற்றவில்லை. இப்போது நடைபெற்றுள்ள நீண்ட பயணமானது, அப்போது நடைபெற்ற போராட்டத்தின் தொடர்ச்சியாகப் பார்க்கப்பட வேண்டியதாகும்.
இதேபோன்று ராஜஸ்தான் மாநிலத்திலும், விவசாயிகள் சங்கம் சென்ற ஆண்டு போராடிய சமயத்தில் அரசாங்கம் அவர்களின் கோரிக்கைகளை ஏற்பதாகக் கூறி ஒப்பந்தம் செய்துகொண்டது. எனினும் பின்னர் தான் அளித்த உறுதிமொழிக்கிணங்க அது நடந்துகொள்ளவில்லை. இப்போது மகாராஷ்ட்ரா மாநில விவசாயிகளுக்குக் கிடைத்துள்ள வெற்றி, நாடு முழுதும் உள்ள விவசாயிகள் மத்தியிலும், விவசாய இயக்கங்கள் மத்தியிலும் நம்பிக்கையை ஏற்படுத்தி இருக்கிறது.
வரலாற்றுச்சிறப்பு மிக்க நீண்ட பயணத்தை நன்கு திட்டமிட்டு, எவ்விதப் பிசிறுமில்லாது மிகச் சிறப்பாக நடத்தி முடித்ததற்காக மகாராஷ்ட்ர மாநில விவசாயிகள் சங்கத்தின் தலைமை பாராட்டுதல்களுக்கும், வாழ்த்துதல்களுக்கும் உரியதாகும். நீண்ட பயணத்தில் பங்கேற்ற பல்லாயிரக்கணக்கான ஆண்கள் – பெண்கள், அதிலும் குறிப்பாக பழங்குடியின விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள் காட்டிய உருக்கு போன்ற உறுதிதான் இம்மாபெரும் வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றிக்கு அடிப்படையாகும்.
(தமிழில்: ச. வீரமணி)
-பீப்பிள்ஸ் டெமாக்ரசி தலையங்கம்
No comments:
Post a Comment