இனவாத மதவாத மோதல்கள், வன்செயல்கள் மூலம் சிங்கள, தமிழ், முஸ்லீம் மக்களின் பொது எதிரி அவர்களுக்கு மறக்கடிக்கப்பட்டிருப்பதாக முன்னிலை சோஷலிஸக் கட்சியின் அமைப்புச்செயலாளர் குமார் குணரட்னம், தற்போதுள்ள முறுகல் நிலைமை தொடர்பாக “திவயின” ஞாயிறு பத்திரிகைக்கு அவர் வழங்கிய செவ்வி
கேள்வி : நாட்டில் தற்போது ஏற்பட்டிருக்கும் கலவர நிலைமையை முன்னிலை சோஷலிஸக் கட்சி எவ்வாறு பார்க்கிறது. ?
பதில் : நாட்டின் பொது முற்போக்கு மக்கள் நினைப்பது போலவே எம்மிலும் இது தொடர்பாக பெரிய அதிர்ச்சி காணப்படுகிறது. இந்த பிரச்சினையை உடனடியாக தீர்க்கவேண்டும் என்ற நிலைப்பாட்டில் நாம் இருக்கிறோம் . இது முற்றுமுழுதாக இனவாதத்தை அடிப்படியாகக்கொண்டது. எமது நாட்டில் இனவாதமானது காலத்திற்குக்காலம் அந்தந்த அரசியல் கட்சிகளின் தேவைக்கு ஏற்ப வளர்த்து விடப்படும் சூழ்நிலை காணப்படுகிறது.
கேள்வி : நீங்கள் குறிப்பிட்டீர்கள் இது இனவாத பிரச்சினை என்று . ஒவ்வொரு இனமும் ஒவ்வொரு இனத்தவரை இனவாதிகள் என்று குற்றம்சாட்டிக் கொண்டுள்ளனர்.
பதில் : இங்கு பல்வேறு வெளியீடுகள் உள்ளன . சிங்கள இனவாதம் உண்டு , தமிழ் இனவாதம் உண்டு,முஸ்லீம் இனவாதம் உண்டு. சுருக்கமாக கூறுவதானால் இனவாதம் என்ற நிலை எந்த நிலைமையில் எடுத்தாலும் பொது மக்களுக்கு தீங்கு விளைவிப்பதாகவே இருக்கும். இதனால் உண்மையான எதிரி மறைக்கப்பட்டு, போலியான எதிரியுடன் போராடும் நிலமையாகவே இதை நாங்கள் காண்கிறோம். ஒன்றாக இணைந்து பொது எதிரிக்கு எதிராக போராடவேண்டும் . ஆனால் பொதுமக்கள் போலி எதிரியுடன் போராடிக் கொண்டிருக்கிறார்கள் .
கேள்வி : நீங்கள் கூறும் பொது எதிரி யார்?
பதில் : எமது அரசியல் மொழியில் கூறினால் இந்த முறைமை தான் எதிரி. அதற்கு எதிராக போராடவேண்டிய மக்கள் தங்களுக்குள்ளே அடிபட்டுக்கொள்ளும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இந்த துயர நிலைமையை நாம் தோற்கடிக்க வேண்டும்
கேள்வி : அதை எவ்வாறு தோற்கடிப்பது.?
பதில்: இங்கு நாம் காணும் முக்கியமான விடயம் ஒன்று உள்ளது. தயவுசெய்து நீங்கள் அதனை பத்திரிகைகளில் பிரசுரியுங்கள் . இனவாதம் ஒருவகையில் புற்றுநோய் போன்றது. அது மக்களின் போராடும் சக்தியை, ஒற்றுமையாக பொது எதிரியை எதிர்க்கும் சக்தியை வலுவிழக்க செய்யும். அதனால் மக்கள் ஆரோக்கியத்தை இழக்கின்றனர். சிங்களமா? தமிழா? முஸ்லிமா? என்று இல்லை . அவர்கள் இதனால் பலவீனம் அடைகின்றனர். இருப்பவர் இல்லாதவர் இடைவெளிக்கு பொறுப்பாளிகள் இருக்கும்போது, அவர்களுக்கு எதிராக போராடவேண்டிய பொது மக்கள் தங்களுக்கு எதிராகவே இனவாதத்தினால் நோய்வாய்ப்பட்டுள்ளனர் . அவர்களை அதிலிருந்து மீட்டெடுக்க பாரிய சமூக இயக்கமொன்றை உருவாக்கவேண்டிய நிர்ப்பந்தம் உள்ளது. அது உண்மையான எதிரிக்கு எதிரான உண்மையான போராட்டத்தை அணிதிரட்டவே.
கேள்வி : இவ்வாறான நிலைமைகளுக்கு உங்கள் கட்சி தரும் தீர்வு என்ன?
பதில்: சகல இனங்களிடையேயும்; உண்மையான, நிலையான ஒற்றுமையை ஏற்படுத்த வேண்டும் . அரசியல்வாதிகள் ஒற்றுமைப்பற்றி எந்நேரமும் கதைத்தாலும் அவர்களுக்கு உண்மையான ஒற்றுமை தேவை இல்லை . அவர்களுக்கு தேவை பிரிவினையே .இந்த பிரிவினையை அவர்கள் அதிகம் விரும்புகிறார்கள் . அவர்கள் தமது அரசியலில் ஒரு பிரிவை கொண்டு நடாத்துவது இந்தப்பிரிவினை மூலம் தான் . அரசியல்வாதிகள் தங்களை போலியான தேசப்பற்றாளர்களாக காட்டிக்கொள்கிறார்கள். அதனை அவர்கள் ஒடுக்கப்பட்ட மக்களை ஏமாற்ற பயன்படுத்துகிறார்கள். இதனூடாக அவர்கள் அவர்களின் உண்மையான பிரச்சினையை மறைத்து போலி தேசப்பற்றை அவர்களின் தலைகளின்மேல் போட்டு இனவாதத்தை தேசப்பற்று என வரைவிலக்கணப்படுத்தி , தங்களது நிலையை உறுதிசெய்து கொள்கிறார்கள்.
கேள்வி : தேசப்பற்றை போலி என்று ஏன் நீங்கள் குறிப்பிடுகிறீர்கள்?
பதில் : உண்மையான தேசப்பற்று என்றால், அமெரிக்காவின், சர்வதேச நாணய நிதியத்தின், உலக வங்கியின் நிபந்தனைகளுக்கு அடிபணிந்து நடக்கமாட்டார்கள்தானே? போலியான தேசப்பற்றை காட்டி சிங்கள அரசியல்வாதிகள் சிங்கள மக்களை முட்டாளாக்குகின்றனர். தமிழ் அரசியல்வாதிகள் தமிழ் மக்கள் முகம் கொடுக்கும் பிரச்சினைகள் சிங்கள இனம் நாட்டை ஆட்சி செய்வதால் ஏற்படுவதாககூறி தமிழ் மக்களை முட்டாளாக்குகின்றனர். முஸ்லீம் அரசியல்வாதிகளும் இதனையே செய்கின்றனர். இது பேச்சளவில் சுதந்திரம் கிடைத்த நாளில் இருந்து காணப்படும்; நிலைமையாகும். சகல முதலாளித்துவ அரசியல் கட்சிகளின் தலைவர்கள் பிரிவினையை தமது அரசியல் நிலைபேற்றுக்கு பாவித்துக்கொள்கிறார்கள்.
கேள்வி : உண்மையான ஒற்றுமையை கட்டியெழுப்புவது எவ்வாறு ?
அது வெறும் சொற்களால் செய்துமுடிக்க முடியாது. அதற்கு நடைமுறையில் சில
செயற்பாடுகள் நடைபெறுதல் வேண்டும், சிங்கள, முஸ்லீம், தமிழ் உழைக்கும் மக்களின் ஒன்றிணைவு ஏற்படவேண்டும். அதற்காக உள்ள ஊடகம் பொதுஎதிரிக்கு எதிரான போராட்டமே. அவ்விடத்தில் சிங்களவருக்கும், தமிழருக்கும், முஸ்லிம்களுக்கும் தனி போராட்ட கோசத்தின்கீழ் ஒன்றிணைய முடியும். அங்குதான் உண்மையான ஒற்றுமை தோன்றும்.
கேள்வி : சகோதரரே ! சிறுபான்மையினர் பெருபான்மையினருக்கு மேலாக செல்கிறார்கள் ,
பெரும்பான்மை சிறுபான்மையை அடக்கி ஆள்கிறார்கள் போன்ற கருத்துக்கள் இருக்கும்போது நீங்கள் கூறும் இந்த விடயத்தை செய்யமுடியுமா?
பதில் : இலங்கையில் பெருபான்மை சிங்களம், சிறுபான்மை தமிழ்,முஸ்லீம் என்று ஒரு பிரச்சினை உள்ளது. அது ஒரு பிரச்சினை அல்ல அது ஒரு நிலைமை . ஆனால் இவர்கள் அனைவரின் நாடு இலங்கை . சகல இன குழுக்களும் நாங்கள் இலங்கையர் என்று நினைக்க வேண்டும். பெரும்பான்மையினர் அவர்கள் பெரும்பான்மை என்பதால் சிறுபான்மையினரின் உரிமைகளை காக்கும் பொறுப்பு அவர்களை சார்ந்தது. சிறுபான்மை இனங்களுக்கு அரசாங்கத்தினால் எதாவது அநீதிகள் இழைக்கப்படுமானால் பெரும்பான்மை சிங்கள உழைக்கும் மக்கள் அதற்காக அணிதிரள வேண்டும். அவ்விடத்தில் இயல்பாகவே தமிழ் முஸ்லீம் இனங்களிடையே இருக்கு சந்தேகம் அற்றுப்போகும் . அவர்களின் இனவாதம் ஏற்படுவது சந்தேகத்தினை ஏற்படுத்துவது ஆகும். இங்கே பிரச்சினை இருப்பது சிங்கள ஆட்சியாளர்கள் இருப்பதனால் அல்ல . முதலாளித்துவ அரசாங்கம் இருப்பதனால் தான் என்பதை உணரவேண்டும். இது சிங்கள ஆட்சியாளர்களின் பிரச்சினை அல்ல , முதலாளித்துவ ஆட்சியாளர்களினால் ஏற்பட்ட பிரச்சினையாகும். சம்பந்தனுக்கு, ரணிலுக்கு. மைத்திரிக்கு , ராஜபக்சவுக்கு பொருளாதார கொள்கையில் எவ்வித மாற்றமும் இல்லை . அவர்கள் அவ்விடத்தில் ஒன்று தான் . அவர்கள் நவ லிபரல்வாதத்திற்கு நிபந்தனையின்றி கை உயர்த்துகிறார்கள். .சிங்களவர்கள் , தமிழர்களினதும் முஸ்லிம்களினதும் உரிமைக்காக முன்னிற்பார்களானால், அவர்களும் சிங்களவர்களோடு ஒன்றாக போராட்டத்தில் இணைவார்கள். இதில் தான் உண்மையான ஒற்றுமையை கட்டியெழுப்ப முடியும். மேல்மாடியில் முதலாளித்துவ வர்க்கத்தினர் ஒற்றுமையாக அழகாக வாழ்கிறார்கள். இனவாத தீயில் பொதுமக்கள் கருகிப்போகவேண்டாம். இனவாதத்தால் அழிந்துபோவோமா ? இல்லை ஒன்றாக போராடி வெல்வோமா ? என்பதை மக்கள் தீர்மானிக்க வேண்டும்.
கேள்வி : இனவாத மோதல்கள் வரலாறு முழுக்க காணக்கூடியதாக இருந்தது. அவசரகால சட்டம் , ஊரடங்கு சட்டம் , சமூக வலைத்தளங்களை கட்டுப்படுத்துவதன் மூலம் இதனை நிறுத்த முடியுமா?
பதில் : இவற்றுக்கு தற்காலிக இடைவேளை வழங்கமுடியும் . ஆனால் இவை மீண்டும் மீண்டும் எழுந்தவண்ணமே இருக்கும். 1983 கறுப்பு ஜூலையை நாம் கண்டோம் . அதன் மூலம் ஏற்பட்ட அழிவை நாம் அனுபவித்தோம் . இதற்கு நிரந்தர தீர்வை வழங்க எந்த ஆட்சியாளர்களால் இதுவரைக்கும் முடியவில்லை . அதேபோல் இந்த அரசாங்கத்திற்கும் அதை செய்ய முடியாது. இது சகல அரசாங்கங்களினதும் கையாலாகாததனத்தின் பிரதி பலனே. இயலக்கூடிய அரசியல் நிலைமை கட்டியெழுப்பப்படும் வரை இந்த பிரச்சினை இருக்கும். ஆனால் இந்த துன்பம் கட்டாயமானது .நடப்பது நடக்கட்டும் என்று பார்த்துக்கொண்டிருக்க நாம் தயாரில்லை . நாங்கள் முற்போக்கான மக்கள் பிரிவினர் , புத்திசாலிகள் , இடதுசாரிய மக்கள் பிரிவினர் , ஊடகவியலாளர்கள் உட்பட அனைவருடன் இந்த கருத்தாடலை கட்டியெழுப்ப நடவடிக்கை எடுப்போம்.
கேள்வி : ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் தொடர்பான ஆணையாளர் சயிட் ரஹத் அல் ஹ_சைன், இளவரசர் அவர்கள் இலங்கையில் சிறுபான்மை இனங்கள் மீது அடிக்கடி நடாத்தப்படும் வன்முறைகளுக்கு காரணம் வகை கூறல் மற்றும் நல்லிணக்க கடமைகளை அமுல்படுத்தாமை என்று அறிவித்துள்ளார்.
பதில் : ஐக்கிய அமெரிக்கா மற்றும் அவர்களுக்கு வேண்டப்பட்ட நாடுகளின் கைபொம்மையாக இருக்கும் ஐக்கிய நாடுகள் சபைக்கு தெளிவானதொரு நிகழ்ச்சி நிரல் உண்டு . அவர்களுக்கு தமது அதிகார பலத்தை விஸ்தரிப்பதற்காக உலகத்தை பகிர்ந்துகொள்ளும் அரசியல் நிகழ்ச்சி நிரல் ஒன்று உண்டு. அவர்கள் உலகின் பல்வேறு வலயங்களில் இந்த போட்டியில் ஈடுபட்டுள்ளனர். நாம் இருக்கும் இந்த வலயமும் இந்த யுத்தத்தின் ஒரு வலயமாகும். அது இலங்கை அரசாங்கங்களை பாதிக்கிறது. அதனால்தான் அவர்கள் இந்த பிரச்சினையை கொண்டு வருகிறார்கள். அவர்கள் இந்த பிரச்சினையில் தலையிடுவது எமது நாட்டு மக்கள் மீது கொண்டுள்ள அன்பு காரணமாக அல்ல. அவர்கள் முன்வைக்கும் தீர்வுகளில் எமக்கு நம்பிக்கை இல்லை . தீர்வு இருப்பது இந்த உழைக்கும் சிங்கள, தமிழ், முஸ்லீம் மக்களின் கைகளில் மட்டுமே.
கேள்வி: தற்போதுள்ள அரசாங்கம் முகம் கொடுக்கும் உக்கிரமான பிரசினைகளை தீர்த்துக்கொள்ள இனவாத மோதல்களை ஏற்படுத்தியுள்ளதாக சிலர் குற்றம் சாட்டுகிறார்கள்.
பதில் : இந்த அரசாங்கம் மட்டுமல்ல எந்த அரசாங்கமாக இருந்தாலும் மக்களின் பிரச்சினைகளுக்கு அவர்களால் தீர்வுகாண முடியாதபோது , அந்த பிரச்சினையை மூடிமறைப்பதற்கு, இவ்வாறான பிரச்சினைகளை அவர்கள் ஏற்படுத்துகிறார்கள். அது பொது கலையாக உள்ளது.
கேள்வி: அந்த பொது கலையை இந்த அரசாங்கமும் பயன்படுத்துகிறதா ?
பதில் : ஆம், அதைத்தான் நானும் கூறமுற்பட்டேன் . உறுதியாக ஆம். எல்லா அரசாங்கங்களும் அப்படியே. நான் உறுதியாக கூறுகிறேன் 1983 கறுப்பு ஜூலையை , ஜே.ஆர் .பாவித்த விதம் எமக்கு தெரியும் . 1977 இல் ஜே.ஆர் யுத்தம் என்றால் யுத்தம், சமாதானம் என்றால் சமாதானம் என்று கூறினார். அந்தக்காலத்திலும் இனவாத வன்செயல்கள் வந்தபின் அதனை அவர்கள் பயன்படுத்திக்கொண்டார்கள். 83 இல் கறுப்பு ஜூலையை அன்றிருந்த பிரச்சினையை மறைப்பதற்கு பாவித்தார்கள். அப்படியானால் இந்த அரசாங்கமும் அப்படித்தான். இந்த அரசாங்கம் அதிகாரம் தொடர்பான சவாலுக்கு முகம் கொடுத்துள்ளது. பொருளாதாரப் பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்துள்ளது. அதனால் இப்போது கருத்தாடலை இனவாத கருத்தாடலுக்கு கொண்டுசெல்ல அவர்களுக்கு இது சந்தர்ப்பமாக அமைந்துள்ளது.
கேள்வி: இனங்களுக்கிடையே நல்லிணக்கம் சொற்களுக்கு மட்டும் மட்டுப்படுத்தப்பட்டது ஒன்றாக அமைந்துவிடுமா ?
பதில் : சிங்கள மக்களின் கலாச்சார மற்றும் வரலாற்று பெறுமதியை முஸ்லிம்களும் தமிழர்களும் அறிந்துக்கொள்ள வேண்டும். அதேபோல் முஸ்லிம்களின் தமிழ் மக்களின் கலாசார விழுமியங்களை சிங்களவர்களும் தெரிந்துகொள்ள வேண்டும். சில இடங்களில் கெட்ட பண்புக்கூறுகள் , இனவாத பண்புக்கூறுகள், பிரிவினை கூறுகள் இருப்பது உண்மையே .இருந்தாலும் நாம் சகல கலாசாரங்களிலும் உயர்ந்த மற்றும் அபிவிருத்தியடைந்த லட்சணங்களை, கூறுகளை உள்வாங்கிக்கொள்ள வேண்டும். நல்லிணக்கத்தை ஏற்படுத்துவது இனவாதத்தை விதைப்பதுபோல் இலகுவானதல்ல. இதற்கு தைரியமிக்க , முற்போக்கான , விடாமுயற்சியுடைய , தைரியத்துடன் உயிர் தியாகம் செய்யக்கூடிய மக்கள் அவசியம் . இந்த யதார்த்தமிக்க கனவில் நாங்கள் இருக்கிறோம் . மிகப்பெரிய மக்கள் இயக்கத்தை நாங்கள் கட்டியெழுப்புவோம்.
முன்னிலை சோஷலிஸக் கட்சியின் அமைப்பு செயலாளர் குமார் குணரட்னம்
கலந்துரையாடியது – சிரிமன்ன ரத்ன சேகர
நன்றி - தேனீ
No comments:
Post a Comment