28 April 2009

நோயாளர்களை தம்புள்ள வைத்தியசாலையில் அனுமதிக்க நடவடிக்கை

வன்னி மோதல் பகுதிகளிலிருந்து வரும் காயமடைந்தோர் மற்றும் நோயாளர்களில் ஒரு தொகுதியினரை தம்புள்ள வைத்தியசாலையில் அனுமதிப்பதற்கான துரித நடவடிக்கைகள் மேற்கொள்வதற்கான கலந்துரையால் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் ஜனக பண்டார தென்னக்கோன் தலைமையில் நேற்றுக் காலை 10.00 மணியளவில் தம்புள்ள வைத்தியசாலையில் நடைபெற்றது. வைத்தியர்கள், சிற்றூழியர்கள், பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிகள், பிரதேச சபைத் தலைவர்கள் இதில் கலந்து கொண்டனர்.

முப்பது குடும்பத்தினரை தம்புள்ள வைத்தியசாலையில் அனுமதிப்பதற்கான ஆயத்தங்கள் நேற்று செய்யப்பட்டிருந்தன. நோயாளர்கள் யாவரும் தம்புள்ள வைத்தியசாலையின் புதிய கட்டிடத் தொகுதியில் தங்குவதற்கு வசதிகள் செய்யப்பட்டுள்ளன. வைத்தியசாலை புதிய கட்டிடத் தொகுதி பூர்த்தி செய்யப்பட்ட போதிலும் அங்கு வசதிகள் செய்யப்படாத நிலையிலும் உடனடி நடவடிக்கையாக இது மேற்கொள்ளப்படுவது குறிப்பிடத்தக்கது. இதேவேளை, தம்புள்ள பொருளாதார மத்திய நிலைய வர்த்தக நிலைய சங்கமும், பரோபகாரிகள் சிலரும், நோயாளருக்கான பாய்கள், மெத்தைகள், உணவு வசதிகள் மற்றும் உபகரணங்கள் என்பனவற்றை வழங்கியுதவியுள்ளனர்.

No comments:

Post a Comment