29 April 2009

மூதூர் கிழக்கு மக்கள் வெளியேறிய மூன்றாவது ஆண்டு நிறைவு

2006 ஆம் ஆண்டு கிழக்கு மாகாணத்தில் நிலவிய யுத்த சூழ்நிலை காரணமாக தமது இருப்பிடங்களை விட்டு வெளியேறிய மூதூர் கிழக்கு மக்கள் இன்று மட்டக்களப்பில் தமது வெளியேற்றத்தின் மூன்றாவது ஆண்டு நிறைவை நினைவு கூர்ந்து கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

2006 ஆம் ஆண்டு முதல் கிழக்கு பிரதேசத்திலிருந்து வெளியேறிய குடும்பங்களில் சம்பூர் மேற்கு ,சம்பூர் கிழக்கு,கூணித்தீவு,கடற்கரைச்சேனை ஆகிய கிராம சேவையாளர் பிரிவுகளைச் சேர்ந்த சுமார் 1750 குடும்பங்கள் இது வரை மீள் குடியேற்றம் இன்றி மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலுள்ள நலன்புரி நிலையங்களிலேயே தொடர்ந்தும் தங்கியிருக்கின்றன.

இக்கிராமங்கள் உயர் பாதுகாப்பு வலயமாக அரசாங்கத்தினால் பிரகடனப் படுத்தப்பட்டுள்ளதால் தான் இவர்களின் மீள் குடியேற்றத்திலும் தடை ஏற்பட்டுள்ளது.இவர்களின் கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டு வருகின்ற போதிலும் இது வரை சாதகமான பதில்கள் இல்லை. இவர்களை குடியேற்ற அரசாங்கம் தெரிவு செய்துள்ள மாற்றுக் காணிகள் பொருத்தமற்றது என்பதால் இவர்கள் அதனை நிராகரித்து விட்டனர்.

தமது சொந்த கிராமத்தில் மீள் குடியேற்றம் செய்யப்பட வேண்டும் அல்லது உயர் பாதுகாப்பு வலய எல்லை குறைக்கப்பட்டு கடற்கரைச்சேனை கிராம சேவையாளர் பிரிவையாவது விட்டுத் தரவேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்து கோட்டைமுனை மெதடிஸ்த தேவாலய முன்றலில் இக்கிராமங்களைச் சேர்ந்த நூற்றுக் கணக்கான ஆண்களும் பெண்களும் இன்று காலை முதல் மாலை வரை பிரார்த்தனையிலும் உண்ணாவிரதத்திலும் ஈடுபட்டுள்ளனர்.

மூதூர் கிழக்கு இடம்பெயர்ந்தோர் நலன்புரிச் சங்கம் எற்பாடு செய்துள்ள இப்போராட்டத்திற்கு மட்டக்களப்பு பல்சமய ஒன்றியம் ஆதரவு வழங்கியுள்ளது.இப் போராட்டத்தில் மட்டக்களப்பு - திருகோணமலை ஆயர் கலாநிதி வண.கிங்ஸ்லி சுவாம்பிள்ளை ஆண்டகை, இராமகிருஷ்ண மிஷன் முதல்வர் சுவாமி அஜ்ராத்மனாந்தாஜி உட்பட சர்வ மத பிரமுகர்கள்,சமூக அமைப்பகளின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டு ஆதரவு வழங்கியுள்னர்- வீரகேசரி

No comments:

Post a Comment