24 April 2009

இலங்கை நிலவரம் தொடர்பாக பிரதமர் தலைமையில் விஷேட கூட்டம் இந்திய விசேட தூதுவர்கள் இலங்கை வருகை

இலங்கை நிலவரம் தொடர்பாக இந்தியப் பிரதமர் மன் மோகன் சிங் தலைமையில் அமைச்சர்கள் மட்டத்திலான இரண்டு கூட்டங்கள் கடந்த புதன், வியாழன் ஆகிய நாட்களில் புது டில்லியில் நடந்தன. இதில் இந்திய வெளியுறவு அமைச்சர், பாதுகாப்பு அமைச்சர், இந்திய வெளியுறவுச் செயலர் மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் போன்றோர் கலந்துகொண்டிருந்தனர். இக் கூட்டத்தில் கூட்டத்தின் முடிவில் வெளியிடப்பட்டுள்ள இந்திய வெளியுறவுத்துறை அறிக்கையில், இலங்கை அரசிடம் இந்தியாவின் கரிசனைகளை தெரிவிப்பதற்காக விசேட தூதுவர்களான இந்திய வெளியுறவுச் செயலாளர் சிவ்சங்கர் மேனன், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் நாராயணன் ஆகியோர் இன்று ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அவர்களையும் பாதுகாப்பு செயலாளர் அவர்களையும் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்கள்.

தவிர இலங்கை நிலவரம் தொடர்பில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி பிரிட்டிஷ் வெளியுறவுத் துறை அமைச்சர் டேவிட் மிலிபாண்ட் அவர்களுடன் தொலைபேசியில் உரையாடியுள்ளார்.

சிக்குண்டுள்ள கடைசி நபர் மோதல் பகுதியிலிருந்து வெளியேறி பாதுகாப்புமிக்க பகுதிகளுக்கு வரும் வரையில் மோதல்களை நிறுத்திவைக்க வேண்டும் என்று இலங்கை அரசாங்கத்திடம் கேட்டுக்கொள்வதாக அமைச்சர் பிரணாப் முகர்ஜி கூறியுள்ளார். இலங்கையின் இனப்பிரச்சினைக்கு இராணுவத் தீர்வு மட்டும் தீர்வாகிவிட முடியாது. அரசியல் தீர்வு ஒன்றும் எட்டப்பட வேண்டும் என்பதை இலங்கையிடம் இந்தியா மீண்டும் மீண்டும் வலியுறுத்தி வந்துள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இலங்கை நிலவரம் குறித்து பேசுவதற்காக அமெரிக்க அரசுத்துறைச் செயலாளர் ஹிலாரி கிளிண்டனையும் ஏனைய நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களையும் தான் தொடர்புகொள்ள இருப்பதாக தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment