16 April 2009

புலிகளின் இந்திய விரோத பிரச்சாரம்

புலிகள் திட்டமிட்ட வகையில் அண்மைக்காலமாக இந்திய விரோத பிரச்சாரங்களை, செயற்பாடுகளை தமது இணையத்தளங்கள் ஊடாகவும், வேறு வகையிலும், புலம் பெயர் தளத்திலும் உள்ளுரிலும் செய்து வருகிறார்கள்.

ஒரு மாதத்துக்கு முன்னர் வட இந்தியாவிலிருந்து டாங்கிகள் ரயிலில் ஏற்றப்பட்டு கொச்சின் துறைமுகத்துக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்து இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது 3000 இந்திய வீரர்கள் இலங்கை படையினருடன் சேர்ந்து சண்டையிடுவதாகவும் வதந்திகளை பரப்பினார்கள். அது மாத்திரமல்லாமல் புல் மோட்டையில் காயமடைந்தவர்களின் மனிதாபிமான பணியில் ஈடுபட்டிருக்கும் மருத்துவர்கள், ஊழியர்களையும் இந்தியப் படையினர் படை முகாம் நடத்துகிறார்கள,; அங்கிருந்து செல்கள் ஏவப்படுகின்றன என்று பிரச்சாரம் மேற்கொண்டார்கள்.

இந்தியாவின் கோடிக்கணக்கான மக்களின் நம்பிக்கையை பெற்ற தலைவரான சோனியா காந்தி அவர்களை குரூரமாக சித்தரித்து கேலிச்சித்திரங்கள் வரைந்து தமது இணையங்களிலும், ஆர்பாட்டங்களிலும் பயப்படுத்துகிறார்கள்.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் சம்பந்தன் தலைமையிலான அணியினர் அண்மையில் இந்திய வெளிவிவகாரச் செயலாளரின் அழைப்பை ஏற்று டில்லிக்கு செல்ல தீர்மானித்தபோது புலிகளின் உத்தியோகபூர்வ இணையமான புதினம் இவர்கள் போராட்டத்திற்கும், ஒட்டு மொத்த தமிழினத்திற்கும் தீங்கிழைத்து விட்டார்கள். இவர்கள் புலிகளின் தயவில்தான் பாராளுமன்ற பதவிகளுக்கு வந்தவர்கள். கடந்த ஏழு வருடங்களாக அந்த பதவிகளையே வகிப்பவர்கள். இவர்களின் நடவடிக்கையால் புலம் பெயர் நாடுகளில் ஆர்பாட்டம் நடத்தும் ஆட்கள் மத்தியில் கண்கள் சிவக்கும் அளவிற்கு கோபம் ஏற்படுத்தியிருக்கிறது. இவர்கள் தமிழர்களை முதுகில் குத்திவிட்டார்கள் என்பது போலெல்லாம் எழுதுகிறார்கள்.

அது மாத்திரமல்லாமல் தமிழகத்திலுள்ள சந்தர்ப்பவாத அரசியல் சக்திகளை பயன்படுத்தி பிரிவினைவாத கோசங்களை எழுப்புவதும், இந்திய விரோத நடவடிக்கைகளை மேற்கொள்வதிலும் அவர்களின் முகவர்களும் உலகளாவியளவில் செயற்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

புலிகளது மாத்திரமல்ல உலகளாவியளவில் இந்திய விரோத சக்திகளின் மறைகரங்களும் இதில் இருக்கின்றனவா என்ற கேள்வி தவிர்க்க முடியாது எழவே செய்கிறது.
இந்தியாவின் துறைசார் அதிகாரிகள் மக்களால் தெரிவு செய்யப்பட்டவர்கள் அல்ல என்ற நகைப்பிற்கிடமான கண்டுபிடிப்பையும் ‘தமிழ் நெற்’ இணையம் செய்துள்ளது. வன்மமும் குரூரமும் தொனிக்க இந்திய அதிகார பீடத்திற்கு எதிராகவும், காங்கிரஸ் கட்சிக்கு எதிராகவும், இந்தியாவின் தேசிய கட்சிகளுக்கு எதிராகவும் சோனியாகாந்தி போன்ற ஜனநாயக பலம் பொருந்திய தலைவர்களுக்கு எதிராகவும் அச்சுறுத்தும் பாணியில் எழுத்துக்கள் அமைகின்றன.
இந்தியா போன்றதொரு பிரமாண்டமான ஜனநாயக நாடு இலங்கைக்கு பக்கத்தில் இருக்கிறது. புலிகளின் பாசிச ராச்சியம் உருவாவதற்கு தடையாக இருக்கிறதென்பதே இவர்களின் அங்கலாய்ப்பாகும்.

தமிழ் நாட்டிலும் புலம் பெயர்ந்த தமிழர்கள் மத்தியிலும் இருக்கக்கூடிய உண்மைக்குப் புறம்பான பாமர உணர்வுகளை கிளறி இந்திய விரோத பிரச்சாரங்களை அவர்கள் மேற்கொண்டு வருகிறார்கள்.

மேலும் இங்கு ஒரு ஜனநாயகத்துடன் கூடிய அதிகாரப் பகிர்வு கட்டமைப்பு உருவாவதில் இந்தியா யதார்த்தபூர்வமாக பங்களிப்பதையும் இந்த சக்திகள் விரும்பவில்லை. சதா மரணமும், பசி பட்டினியும், ஊனமும் என்று வாழ்வதையே இந்த சக்திகள் விரும்புகின்றன.
புலம் பெயர்ந்த நாடுகளிலுள்ள இளந்தலைமுறையினர் ஜனநாயக சூழலில் பிறந்து வளர்ந்தவர்கள் அவர்களுக்கு இலங்கையில் புலிகளால் உருவாக்கப்பட்டிருக்கும் குரூர நிஜம் தெரியாது இருட்டிலும், பொய்யிலும் அவர்களை வைத்துக் கொண்டு அவர்களின் மனதில் நஞ்சை வார்த்து புலிகளின் நிகழ்ச்சி நிரலை முன்னெடுத்துச் செல்கிறார்கள்.
ஏற்கனவே உள்நாட்டில் ஆயிரக்கணக்கான இளைஞர்களின் அர்ப்பணிப்பை விரயமாக்கிய புலிகள் இப்போது வட அமெரிக்காவிலும், ஐரோப்பாவிலும் அதனை செய்து கொண்டிருக்கிறார்கள்.

இது ஒட்டு மொத்த தமிழ் சமூகத்தின் அழிவிற்கான பாதையே.
ஐ.நா விற்கும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் சர்வதேச மனித உரிமை அமைப்புக்களுக்கும் தெளிவாக புரிந்த விடயம் ஒன்றிருக்கிறது. அதாவது புலிகள் இரண்டு லட்சம் மக்களை பணயம் வைத்திருக்கிறார்கள் என்பதே அது. அந்த மக்களில் சிறார்களையும், இளைஞர்களையும், யுவதிகளையும் அன்றாடம் யுத்தத் தேவைகளுக்காக பலாத்காரமாக ஈடுபடுத்திக் கொண்டு புலிகளின் பிடியிலிருந்து தப்பிச் செல்ல முனைபவர்களை சுட்டுக் கொண்டும் புலிகளின் நலன்களை பாதுகாப்பதற்கான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன என்பதை சர்வதேச சமூகம் நன்கு தெரிந்து வைத்திருக்கிறது.

உணர்வுபூர்வமாக தம் உறவுகளுக்காக குரல் கொடுப்பவர்களை போராடுபவர்களுக்கு தார்மீக ஆதரவை வழங்கும் அதேவேளை புலிகளின் நலன்களுக்காக தவறாக வழிநடத்தப்படுபவர்களுக்கு இந்த மனித பேரவலத்தின் உண்மையான தார்ப்பரியம் என்னவென்பதை தமிழ் சமூகத்தின் மீது அன்பும் அக்கறையுமுடையவர்கள். உண்மையின் அடித்தளத்தில் பிரச்சினைகளை அணுகுபவர்கள் புரிய வைக்க வேண்டும்.

தி.ஸ்ரீதரன்

No comments:

Post a Comment