22 April 2009

நரகத்து வாழ்வு தமிழ் மக்களுக்கு விதிக்கப்பட்டதல்ல. இனியொரு விதி செய்வோம்.!

புதுமாத்தளன் பகுதியில் வெறும் 20 ச.கி.மீ பரப்பளவினுள் முடக்கப்பட்ட மக்கள் புலிகளின் மண் அணை அரண் படையினரால் உடைக்கப்பட்டதன் பின்பு ஆயிரக்கணக்கில் வெளியேற தொடங்கியிருக்கிறார்கள். உடைக்கப்பட்ட பகுதியினூடாக மாத்திரமல்ல கடற்கரை ஊடாகவும் படகுகள் மூலம் பல நூற்றுக்கணக்கானோர் வெளியேறியுள்ளனர்..

கடந்த இரண்டு மூன்று நாட்களில் மாத்திரம் லட்சம் பேர்வரை அரச கட்டுப்பாட்டுப் பகுதிக்கு வந்துள்ளார்கள். யாழ்ப்பாணத்திலும், வவுனியாவிலும் அவர்கள் தற்காலிகமாக தங்க வைக்கப்பட்டுள்ளார்கள். இன்னும் பல்லாயிரக்கணக்கானோர் யுத்த சூனியப் பிரதேசத்தில் மரணத்தின் கோர முகத்தைப் அனுபவித்துக் கொண்டு வாழ்கிறார்கள்.

இந்த மக்களின் மனங்களில் நம்பிக்கையை கட்டியெழுப்புவதே இங்கு பெரும் சவாலான பணியாகும்.
சமகாலத்தில் உலக மானிடம் படாத துன்பங்களையெல்லாம் அவர்கள் பட்டிருக்கிறார்கள். அவர்களின் இழப்புக்கள், துயரங்கள் வார்த்தைகளால் விவரிக்க முடியாதவை. எத்தனை தடவை அவர்கள் இடம் பெயர்ந்திருக்கிறார்கள். எத்தனை பிள்ளைகளை, சொந்த பந்தங்களை, உற்றார் உறவுகளை இழந்திருக்கிறார்கள்.

இத்தனை சுமைகளுடன் அவர்கள் உயிர் வாழ்தலுக்காக ஓடிய ஓட்டம் ஆளில்லா வானூர்தியிலிருந்து எடுக்கப்பட்ட படங்கள் உறுதி செய்கின்றன. மனிதர்களில் ஒரு பகுதியினர் இவ்வாறு உயிர் வாழ்தலுக்காக ஓடிக்கொண்டிருக்கும் போது நாம் நாகரீக உலகை சேர்ந்தவர்களென கூறிக்கொண்டு வாழ்வது அவமானகரமானதாகும்.

உயிர்ப் பையை பிடித்துக் கொள்வதற்கான இந்த ஓட்டத்தில் ஆங்காங்கே துப்பாக்கிச் சூட்டுக்கும் செல் வீச்சுக்கும் ஆளாகி உயிரை பாதுகாக்கும் ஆசை நிராசையாகி போனவர்களை நினைத்துப் பாருங்கள். வெட்டவெளியில் மானிட பூச்சிகளாய் வீழ்ந்து போனவர்களை நினைத்துப் பாருங்கள்.

வாழ்வதற்கான ஓட்டத்தில் தோற்றுப் போனவர்கள், அவர்களின் பிரிவால் துயருரும் உற்ற சுற்றத்தை நினைத்துப் பாருங்கள்.

இயற்கையாய் மனிதருக்குரிய அத்தனை அவயங்களுடனும், தன்னம்பிக்கையுடனும் வாழ்ந்த மனிதர்கள் ஒரேயடியாக ஊனமுற்றுப் போகும்போது அந்த மனிதரின் மனோநிலையை நினைத்துப் பாருங்கள்.

பிறந்தவுடனேயே ஊனமுற்றுப்போன குழந்தையின் கதறலை நினைத்துப் பாருங்கள்.
பீரங்கிகள், விமானக்குண்டுகள், தற்கொலை குண்டுகள் நடுவே காப்பரணுக்குள் வாழ்ந்த, வாழ்கின்ற சந்ததியை நினைத்துப் பாருங்கள்.

சமகாலத்தில் இவ்வாறு வருடக்கணக்கில் யாரும் காப்பரண்களுக்குள் வாழ்ந்ததில்லை.
ஏன் இவற்றை இங்கு குறிப்பிடுகிறோம். ஏன் இவற்றை இங்கு ஆழமாக சிந்திக்க கடமைப்பட்டுள்ளோம்
ஏதோ தவறு நேர்ந்துவிட்டது, மனிதர்கள் துன்பங்களை அனுபவித்து விட்டார்கள் என்று எளிமையாக சமாதானம் சொல்லிவிட்டு செல்ல முடியாது.
இந்த இரத்த கணக்கிற்கு விடை வேண்டும். ஏனெனில் பயங்கரவாதம் ஒழிந்து விட்டால் சிறுபான்மை சமூகங்களுக்கு பிரச்சினையில்லை என்றவொரு தோற்றப்பாடு, கருத்து தற்போது உருவாகியிருக்கிறது.

60 ஆண்டுகளுக்கு மேலாக தாம் இந்த நாட்டில் சமத்துவமாக வாழ்வதற்கான கோரிக்கையை தமிழர்கள் வலியுறுத்தி வந்திருக்கிறார்கள். இறுதி 30 ஆண்டுகளில் தமது உரிமைகளுக்காக அவர்கள் செலுத்திய விலை இங்கு வார்த்தைகளால் விவரிக்க முடியாது.

இன உரிமைக்கான, சமத்துவத்துக்கான தமிழர்களின் கோரிக்கை அவர்கள் மத்தியிலேயே புலிகளால் அறிமுகப்படுத்தப்பட்ட ஜனநாயக விரோத போக்குகளால் பலவீனப்படுத்தப்பட்டது. தமது இன உரிமைக்காகவும், ஜனநாயகத்திற்காகவும் அவர்கள் போராட வேண்டியிருந்தது.
வாழ்க்கை ஈவிரக்கமற்றதாக மாறியது. இறுதியில் தற்போதைய குரூர நிலையை எய்தியுள்ளது.
அவர்கள் பிச்சைக்காரர்களை விட கீழான நிலையில் அடிமைகளாக வௌ;வேறு எஜமானர்களுக்கு கீழ் வாழ நிர்பந்திக்கப்பட்டார்கள்.

தற்போது அதன் கோர முகத்தை நாம் கண்ணால் கண்டுகொண்டிருக்கிறோம். வைத்தியசாலை விறாந்தைகளில் காயமடைந்த குழந்தைகளின் கதறலை கேட்கிறோம். இனம்புரியாத மனித அவல ஓலங்கள் எம் காதுகளை நிறைக்கின்றன.

இரத்த வாடையும் மனிதர்களின் கோர மரணமும் எங்கள் கண்கணில் அன்றாட காட்சிகளாகி விட்டன.
பட்டினியின் கோரச்சாயலுடன் எமது மக்களை பார்க்கின்றோம்.

எமது கையறு நிலை எம்மீதே எமக்கு கோபத்தை வரவழைக்கிறது.

இப்படியே ஒரு சமூகம் இனியும் வாழ்ந்து முடிக்க முடியாது. அதனை அனுமதிக்கவும் முடியாது

தமிழர்கள் தமது பிரதேசங்களில் தங்களைத் தாங்களே நிர்வகிப்பதற்கான கட்டமைப்புக்கள் ஏற்படுத்தப்படுவது தற்போதைய மனிதாபிமானப் பணிகளுடன் சமாந்தரமாக முன்னெடுக்கப்படுவது அவசியமானதாகும்.

இது முஸ்லீம், மலையக மக்களுக்கும் பொருத்தமானவை.
பல்லினங்களின் ஜனநாயக தேசமாக இலங்கையை கட்டியெழுப்புவதே நாம் இந்த இழப்புக்களுக்கும் துயரங்களுக்கும் ஈடுகட்டகூடிய உண்மையான நிவாரணமாக இருக்க முடியும்.

தி. ஸ்ரீதரன்

No comments:

Post a Comment