பயங்கரவாதிகளிடமிருந்து தப்பி வந்துள்ள மக்களின் வாழ்க்கையை மீளக் கட்டியெழுப்புவதற்கான பேச்சுவார்த்தைகளே அவசியம்- ஜனாதிபதி
புலிகளோடு பேச்சு நடத்த வேண்டிய எத்தகைய அவசியமும் அரசாங்கத்துக்கு கிடையாது. மாறாக பயங்கரவாதிகளிடமிருந்து தப்பி வந்துள்ள மக்களின் வாழ்க்கையை மீளக் கட்டியெழுப்புவதற்கான பேச்சுவார்த்தைகளே அவசியமென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஸ்ரீலங்கா சுதந்திர ஆசிரியர் சங்கத்தினரை அலரிமாளிகையில் சந்தித்த நிகழ்வொன்றில் தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில் சர்வதேச அச்சுறுத்தல்கள், அழுத்தங்களுக்கு மத்தியிலேயே அரசாங்கம் தாய்நாட்டைப் பாதுகாக்கும் நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது. இதற்கு பூரண ஆதரவு வழங்க வேண்டியது சகலரதும் கடமை என்றார்.
தன்னுடன் இங்கிலாந்து பிரதமர், அவுஸ்திரேலியப் பிரதமர் மற்றும் ஐக்கிய நாடுகள் சபை விசேட பிரதிநிதிகளும் தொலை பேசி மூலம் தொடர்புகொண்டு பேசியவேளை அவர்களுடனும் இதுபற்றியே கலந்துரையாடியதாகவும் குறிப்பிட்ட ஜனாதிபதி எமக்கு பாரிய அழுத்தங்கள் வருகின்றன. யுத்தத்தை நிறுத்தச் சொல்கின்றார்கள். எமக்கு நிதியுதவி வழங்க முடியாது என அழுத்தம் கொடுக்கின்றார்கள்.எத்தகைய அழுத்தம்,அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள நேரிட்டாலும் நாம் தாய்நாட்டைப் பாதுகாக்கும் போராட்டத்தைக் கைவிடப்போவதில்லை என்று தெரிவித்தார்.
No comments:
Post a Comment