25 April 2009

கிளிநொச்சியிலிருந்து புதுக்குடியிருப்பு, புதுமாத்தளன், பகுதிகளுக்கு ஊடகவியலாளர்கள்

பாதுகாப்பு அமைச்சின் ஏற்பாட்டில் உள்ளூர் மற்றும் வெளிநாட்டு ஊடகவியலாளர்கள் கிளிநொச்சி , புதுக்குடியிருப்பு, புதுமாத்தளன் , பகுதிகளுக்கு கொழும்பு ரத்மலானை விமான நிலையத்தில் இருந்து இலங்கை விமானப் படைக்குச் சொந்தமான உலங்கு வானூர்தி மூலமாக நேற்று அழைத்துச் செல்லப்பட்டனர்.

ஊடகவியலாளர்கள் முதலில் கிளிநொச்சிப் பகுதிக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அங்கு அவர்களுக்கு கிளிநொச்சியில் இடம்பெற்ற படை நடவடிக்கைகள் தொடர்பில் 58ஆவது படைப் பிரிவின் கட்டளைத் தளபதி சவிந்திர சில்வா விளக்கம் அளித்தார். மேலும் விடுதலைப்புலிகளிடம் இருந்து படையினரால் கைப்பற்றப்பட்ட ஆயுதங்கள் குறித்த விபரங்களும் ஊடகவியலாளர்களுக்கு வழங்கப்பட்டன.

கிளிநொச்சியிலிருந்து புதுக்குடியிருப்பு, புதுமாத்தளன் பகுதிகளுக்கு ஊடகவியலாளர்கள் அழைத்துச் செல்லப்பட்டனர்.கிளிநொச்சியிலிருந்து புதுக்குடியிருப்பு வரை செல்லும் பாதையில் கட்டிடங்கள் எதனையும் காண முடியாதிருந்தது. இடையிடையே அமைந்திருந்த நகரங்கள் கூட அங்கு இருந்த இடம் தெரியாது அழிந்து போயிருந்தன. அங்கு உக்கிரமான பேர் இடம்பெற்றதற்கான சான்றுகளே பெருமளவில் காணப்படுகின்றன.

புதுக்குடியிருப்பு என்ற ஒரு நகரம் இருந்த அடையாளமே அங்கு காணப்படவில்லை. புதுமாத்தளன் பகுதிக்கு வந்த மக்களை இராணுவத்தினர் ஆங்காங்கே உள்ள தென்னை மற்றும் பாரிய மர நிழலில், வெறுந்தட்டாந்தரையில் தங்க வைத்துள்ளனர்.

அவர்களின் நிலை மிகவும் பரிதாபகரமானதாகவே இருந்தது. தம்மிடமுள்ள அனைத்தையும் இழந்து, மனநிலை பாதிக்கப்பட்டு உயிரை மட்டுமே கையில் பிடித்தபடி இருந்த அவர்களின் நிலை உள்ளத்தை நெகிழ வைத்தது. எனினும் இராணுவத்தினர் அவர்களுக்கு உணவும் குடிதண்ணீரும் வழங்கி வருவது சிறிது ஆறுதலைத் தருவதாக இருந்தது.

அங்கிருந்த மக்கள் அனைவரும் இராணுவத்தினரின் சோதனைக்காகவே காத்திருப்பதாக அறிய முடிந்தது. அவர்கள் பகுதி பகுதியாக பரிசோதனை செய்யப்பட்டே வேறிடங்களுக்கு அனுப்பப்படுகின்றனர். உடைமைகள் சோதனை, உடல் சோதனை என்று வாட்டி வதைக்கப்படும் அவல நிலை. அந்தச் சோதனை நடவடிக்கை முடியும்வரை அங்கே அவர்கள் மழையில் நனைந்தும், வெயிலில் காய்ந்தும் துவண்டு கிடக்கத்தான் வேண்டியிருக்கின்றது.
இதனிடையே மலசலகூட வசதிகள் இன்றியும் மக்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். புதுக்குடியிருப்புப் பகுதியில் படையினரே நிலைகொண்டிருக்கின்றனர். இடிபாடுகள் சீர் செய்யப்பட்டு அபிவிருத்தி நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டிருப்பதைக் காணக் கூடியதாக இருந்தது." என்றார்.

பின்னர் மக்கள் பாதுகாப்பு வலயப் பிரதேசத்தில் இருந்து வெளியேறி வந்து இரணைப்பாலைச் சந்தியில் வீதியோரங்களில் தங்கியுள்ளவர்களை செய்தியாளர்கள் சந்தித்துக் கலந்துரை யாடினர். முல்லைத்தீவிலிருந்து இடம்பெயர்ந்து இவ்வாறு இரணைப்பாலைச் சந்தி வீதியோரங்களில் தங்கியுள்ள மக்களைச் சந்தித்துக் கலந்துரையாடிய போது அவர்கள் தமக்குக் குடிதண்ணீர் வசதி, உணவுவசதி போன்றவை வழங்கப்படுவதாகத் தெரிவித்தனர்.

எறிகணைத் தாக்குதல்களையடுத்தே தாம் முல்லைத்தீவிலிருந்து இடம்பெயர்ந்ததாகக் கூறிய மக்கள், எந்தத் தரப்பினரது எறிகணை தம்மைத் தாக்கியது என்பதைக் கூற மறுத்துவிட்டதாக எமது இணைய தள செய்தியாளர் தெரிவித்தார்.

போர்ப்பிரதேசத்தில் இருந்து இடம்பெயர்ந்து பெரும் எண்ணிக்கையில் வவுனியாவுக்கு வந்துள்ள பொதுமக்களின் நலன்கள் அடிப்படைத் தேவைகளைக் கவனித்துப் பராமரிக்கும் பணிகளை மேற்கொள்வதற்கு வவுனியா அரசாங்க அதிபருக்கு மேலதிகமாக அனுராதபுரம், பொலன்னறுவை, கண்டி ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த அரசாங்க அதிபர்களும் வவுனியா மாவட்டத்திற்கான அரசாங்க அதிபர்களாக நியமிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டிருக்கின்றது.
இடம்பெயர்ந்து வந்துள்ள மக்களுக்கான நிர்வாக நடவடிக்கைகளுக்கான தலைமை அதிகாரியாக முன்னாள் யாழ். மாவட்ட ஆயுதப்படைகளின் தளபதியாகப் பணியாற்றிய மேஜர் ஜெனரல் ஜி.ஏ.சந்திரிசிறியை அரசாங்கம் நியமித்துள்ளது.

இடம்பெயர்ந்து வந்துள்ள மக்களுக்கான சேவைகளை இலகுபடுத்தும் நோக்கத்துடன் இந்த நியமனங்கள் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கண்டி மாவட்ட அரசாங்க அதிபர் கோத்தபாய ஜெயரட்ண, இடம்பெயர்ந்த மக்களுக்கான முகாம்கள் மற்றும் தங்குமிடங்களை அமைக்கும் பணிகளுக்குப் பொறுப்பாக இருந்து செயற்படவுள்ளார்.

உணவு மற்றும் சுகாதார, பொது வசதிகள் தொடர்பான பணிகளுக்குப் பொறுப்பாக பொலன்னறுவ மாவட்ட அரச அதிபர் டி.ஏ.லால் விமல் செயற்படவுள்ளார். நீர் விநியோகம், மின்சார வசதிகள் மற்றும் அடிப்படை வசதிகளுக்குப் பொறுப்பாக அனுராதபுரம் மாவட்ட அரசாங்க அதிபர் எச்.எம்.கே.ஹேரத் நியமிக்கப்பட்டுள்ளார்.

வவுனியா அரசாங்க அதிபர் திருமதி சாள்ஸ் இடம்பெயர்ந்தோரின் நலன்களுக்குப் பொறுப்பாக இருந்து செயற்படுவார். அனுராதபுரம், பொலன்னறுவை, கண்டி ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த அரசாங்க அதிபர்கள் வெள்ளியன்று வவுனியா அரச செயலகத்திற்கு வருகை தந்து தமது பொறுப்புக்களை ஏற்றனர். அத்துடன் இடம்பெயர்ந்த மக்கள் தங்கியுள்ள நிவாரண இடைத்தங்கல் முகாம்கள், நிவாரண கிராமங்கள் என்பவற்றையும் சென்று பார்வையிட்டனர்

நன்றி- வீரகேசரி இணையம்

No comments:

Post a Comment