புலிகளை சரணடையக் கோருகிறது - இராணுவ ரீதியிலான தீர்வு முயற்சி ஐக்கியத்தை பாதிக்கும் அமெரிக்கா
புலிகள் ஆயுதங்களை களைந்து மூன்றாம் தரப்பினரிடம் சரணடைய வேண்டும். மோதல் தவிர்ப்பு வலயத்தில் சிக்கி அல்லலுறும் அப்பாவி பொது மக்களின் பாதுகாப்பே மிகவும் முதன்மையானது. இலங்கையில் யுத்த நிறுத்தத்தை ஏற்படுத்த இந்திய அரசாங்கம் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளுக்கு முழுமையான ஆதரவை அமெரிக்கா வழங்கும் என அமெரிக்க இராஜாங்க திணைக்களப் பேச்சாளர் ரொபர்ட் வூட்ஸ் தெரிவித்துள்ளார்.
மேலும் இலங்கை அரசும் புலிகளும் உடனடியாக யுத்தத்தை நிறுத்த வேண்டும் என தெரிவித்துள்ள அமெரிக்கா இனப்பிரச்சினைக்கு இராணுவ ரீதியில் தீர்வு காணும் ஆர்வத்தை இலங்கை அரசாங்கம் தொடர்ந்தும் கொண்டிருந்தால் அது ஐக்கியத்திற்கும் நல்லிணக்கத்திற்கும் பாதிப்பை ஏற்படுத்தும் எனவும் எச்சரித்துள்ளது.
அமெரிக்க ஜனாதிபதியாக பராக் ஒபாமா பதவியேற்றபின் இலங்கை விவகாரம் தொடர்பாக வெள்ளை மாளிகை விடுத்துள்ள முதலாவது அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் பேச்சாளர் ரொபட் வூட்ஸ் நேற்று முன்தினம் செய்தியாளரிடம் கருத்து தெரிவிக்கையில் மேலும் கூறியதாவது,
இலங்கை அரசாங்கத்தின் யுத்த முன்நகர்வுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தும் நோக்கிலேயே உயர்மட்ட இந்திய இராஜதந்திரிகள் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட் டுள்ளனர். மோதல் தவிர்ப்பு வலயத்தில் சிக்கி அல்லலுறும் அப்பாவிப் பொதுமக்களது பாதுகாப்பே மிகவும் முதன்மையானது.
பல்லாயிரக்கணக்கான பொது மக்கள் மோதல் தவிர்ப்பு வலயத்திலிருந்து அரசாங்கக் கட்டுப்பாட்டுப் பிரதேசங்களுக்கு வருகை தந்துள்ள போதிலும், பெரும் எண்ணிக் கையிலான பொதுமக்கள் கொல்லப்பட்டும் காயமடைந்தும் உள்ளனர்.மேலும், ஆயிரக்கணக்கான பொதுமக்கள் மோதல் தவிர்ப்பு வலயத்தில் சிக்கியுள்ளனர்.
பிரதி இராஜாங்கச் செயலாளர் ரிச்சர்ட் பௌச்சர், இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ரொபர்ட் ஓ பிளெக் ஆகியோர் டோக்கியோ உதவி வழங்கும் நாடுகளுடன் இலங்கை நிலைவரம் குறித்து பேச்சுவார்த்தை நடத்தி யுள்ளனர். இணைத்தலைமை நாடுகள், ஜீ8 நாடுகள் ஆகியன இலங்கையில் யுத்த நிறுத்தத்தை ஏற்படுத்த பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அப்பாவிச் பொது மக்களை மனிதக் கேடயமாக தமிழீழ விடுதலைப் புலிகள் பயன்படுத் தக் கூடாது. ஆயுதங்களை களைந்து மூன்றாம் தரப்பினரிடம் புலிகள் சரணடைய வேண்டும் என்றார்.
இதேவேளை, வன்னியில் இடம்பெற்று வரும் யுத்த முன்நகர்வுகளின் போது சிவிலி யன்களுக்கு ஏற்படும் இழப்புக்கள் தவிர்க் கப்பட வேண்டும் எனவும், இவ்வாறான இழப் புக்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என ஒபாமா தலைமையிலான அமெரிக்க அரசாங்கம் கூறியுள்ளது.
இலங்கையில் உடனடியாக யுத்த நிறுத்தம் அமுல்படுத்தப்பட வேண்டுமெனவும் வெள்ளைமாளிகை விடுத்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
யுத்த வலயத்தில் சிக்கியுள்ள பொதுமக்கள் வெளியேறுவதற்கு உகந்த வகையில் இலங்கை அரசாங்கமும், தமிழீழ விடுதலைப் புலிகளும் யுத்த நிறுத்தத்தை அமுல்படுத்த வேண்டுமென அமெரிக்கா கோரியுள்ளது.
யுத்தம் காரணமாக பாரிய பேரவலத்தை எதிர்நோக்கியுள்ள அப்பாவி பொதுமக்கள் தொடர்பில் வாஷிங்டன் அதிக கவலை கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அரசாங்கத்திற்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான யுத்தம் காரணமாக அப்பாவி பொதுமக்களின் உயிர்கள் காவு கொள்ளப்படுவதாக சுட்டிக்காட்டப்படுகிறது.
யுத்தத்தில் ஈடுபட்டுள்ள சகல தரப்பினரும் உடனடியாக யுத்தத்தை கைவிட்டு பொது மக்கள் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டுமென ஒபாமா அரசாங்கம் கோரியுள்ளது.
அமெரிக்கா, ஐக்கிய நாடுகளின் பாதுகாப்புப் பேரவை, பிரித்தானியா, இந்தியா, அவுஸ்திரேலியா மற்றும் பிரான்ஸ் உள்ளிட்ட பல நாடுகள் இலங்கையில் யுத்த நிறுத்தம் அமுல்படுத்தப்பட வேண்டுமென இந்தவாரம் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
மோதல் தவிர்ப்பு வலயத்தின் மீது இலங்கை அரசாங்கம் மேற்கொண்டு வரும் எறிகணைத் தாக்குதல்களை உடனடியாக நிறுத்தி, சர்வதேச தொண்டு நிறுவன ஊழியர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் மோதல் தவிர்ப்பு வலயத்திற்கு செல்ல அனுமதியளிக்கப்பட வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டது
வீரகேசரி இணையம்
No comments:
Post a Comment