இலங்கையில் உள்ள பயங்கரவாதிகள் மீது இரக்கம் காட்ட முடியாது : பிரணாப் இலங்கையில் செயல்படும் பயங்கரவாதிகள் மீது இரக்கம் காட்ட முடியாது என்று வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி திட்டவட்டமாகக் கூறியுள்ளார். அங்கு போர் பகுதியில் சிக்கியுள்ள தமிழர்கள் காப்பாற்றப்பட வேண்டும் என்பதில்தான் இந்திய அரசு தற்போது அக்கறை செலுத்துகிறது என்றும் அவர் கூறியுள்ளார்.
கொல்கத்தாவில் புதன்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்த அவர் மேலும் கூறியது: இலங்கையில் புதன்கிழமை காலை வரை 58,600 பேர் பாதுகாக்கப்பட்ட பகுதிக்கு வந்துள்ளனர்.
இந்தியா கூறும் சில விஷயங்களை இலங்கை அரசு ஏற்றுக் கொள்வதில்லை என்று கூறப்படுவதில் உண்மையில்லை. சர்வதேச சமூகம் என்ன கூறுகிறதோ அதன்படி நடந்து கொள்ள வேண்டும் என்று இலங்கையிடம் நாங்கள் தெரிவித்துள்ளோம். மனித உரிமைகளை மீறும் செயல்களிலோ, சுதந்திரத்தை பறிக்கும் நடவடிக்கைகளிலோ இலங்கை அரசு ஈடுபடக் கூடாது என்று வலியுறுத்தியுள்ளோம். தமிழர்களைக் காப்பதன் மூலம் சர்வதேச சமூகத்தின் நம்பிக்கையை இலங்கை பெற வேண்டும்.
பொதுமக்கள் பாதுகாப்பாக வெளியேறும் வரை போரிடக் கூடாது என்று இந்திய அரசு கூறியுள்ளது. போர் நிறுத்தம் என்ற வார்த்தையைப் பயன்படுத்தவில்லை. பயங்கரவாதம் எந்த நாட்டில் எந்த உருவத்தில் இருந்தாலும் அதற்கு இந்திய அரசு இரக்கம் காட்டாது. பொதுமக்களின் பாதுகாப்புக்கு எந்தப் பிரச்னையும் ஏற்பட்டு விடக் கூடாது என்பதுதான் முக்கியம்.
இலங்கையில் போர் முனையில் இன்னும் எத்தனை பேர் சிக்கியுள்ளனர் என்பது தெளிவாகத் தெரியவில்லை. 10 ஆயிரம் முதல் 15 பேர் வரை அங்கு இருக்கலாம் என்று இலங்கை அரசு கூறுகிறது. ஆனால் 40 ஆயிரம் பேர் சிக்கியிருப்பதாக ஐ.நா. தெரிவித்துள்ளது.
இந்தியாவில் இருந்தும் பிற நாடுகளில் இருந்தும் அனுப்பப்பட்டுள்ள நிவாரணப் பொருள்களை சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் மூலம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இலங்கை அரசு பகிர்ந்தளிக்க வேண்டும் என்று பிரணாப் கூறியுள்ளார்.
நன்றி- தினமணி
No comments:
Post a Comment