23 April 2009

மோதலற்ற பகுதியில் சிக்கியுள்ள மக்கள் குறித்து அமெரிக்கா கவலை

இலங்கையில் மோதல் நடக்கும் இடங்களிலிருந்து ஆயிரக்கணக்கான மக்கள் இடைத்தரிப்பு முகாம்களை நோக்கி வெளியேறி வருவதை ஒரு சாதகமான நிகழ்வு என்று வர்ணித்திருக்கின்ற அமரிக்க அரசுத்துறை இருந்த போதிலும், அங்கு இன்னமும் அகப்பட்டிருக்கின்ற மக்களின் நிலை குறித்து தாம் கவலை கொள்வதாக கூறியுள்ளது.
இது தொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள அமெரிக்க அரசுத்துறையின் சார்பிலான பதில் பேச்சாளர் ராவர்ட் வுட் அவர்கள் மோதலில் ஈடுபடுகின்ற இரு தரப்பினரும், மோதலற்ற பிராந்தியமாக வரையறுக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மக்கள் மீது எறிகணைகளை வீசுவதையும், சுடுவதையும் நிறுத்த வேண்டும் என்று கூறியுள்ளார்.
மோதல் பகுதியில் இருந்து வெளியேற விழையும் மக்களை விடுதலைப்புலிகள் தடுப்பதான சம்பவங்கள் குறித்து தமக்கு தகவல்கள் கிடைத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். அந்த பகுதியில் இருந்து எஞ்சிய மக்களை வெளியேற்றும் விடயத்தில் இலங்கை அரசாங்கம் இராஜதந்திர நடைமுறைகளை கையாள வேண்டும் என்றும் அவர் கோரியுள்ளார்.
இந்த விடயத்தில் அமெரிக்கா மாத்திரமல்லாமல், மேலும் பல நாடுகளும் மிகவும் தீவிரமாக முயன்று வருகின்றன என்றும், அதற்கு விடுதலைப்புலிகளும், இலங்கை அரசாங்கமும், செவி சாய்க்கவில்லை என்றும், இருந்த போதிலும் இந்த விடயத்தில் தாம் தொடர்ந்து அழுத்தங்களை மேற்கொள்வதுடன், மிகவும் உயர் மட்டத்திலான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் கூறினார். அதேவேளை மோதலற்ற பகுதிகளில் அகப்பட்டுள்ள மக்களுக்கு உதவ ஐநா நிறுவனங்கள் அனுமதிக்கப்பட வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார்.
நன்றி- பி.பி.சி

No comments:

Post a Comment