இடம்பெயர்ந்த மக்களுக்கான உதவிகள் தொடரும் : ஐ.நா.
இலங்கையின் வட.கிழக்கு பகுதிகளில் போர் சூழலால் அங்கிருந்து வெளியேறியுள்ள பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு உதவும் நடவடிக்கைகளைத் தொடர்ந்து முன்னெடுத்து வருவதாக ஐ.நா வின் அகதிகளுக்கான உயர் ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.
இதுவரை 1,60,000 மக்கள் போரினால் அரச கட்டுப்பாட்டு பகுதிகளுக்கு இடம் பெயர்ந்துள்ளனர் என்பதை உறுதிப்படுத்தியுள்ள ஐ.நா சபை அவ்வாறு வந்தவர்களில் 1,40,000 பேர் வவுனியாவிலுள்ள 32 முகாம்களிலும், 11,000 பேர் யாழ்ப்பாணத்திலும், சுமார் 5,000 மக்கள் திருகோணமலையிலுள்ள முகாம்களிலும் தங்க வைக்கப்பட்டுள்ளதாக ஐ. நாவின் அகதிகளுக்கான உயர் ஸ்தானிகராலயத்தின் பேச்சாளர் வில்லியம் ஸ்பிண்டலர் ஜெனீவாவில் தெரிவித்துள்ளார்
தற்போது களநிலைமை மிகவும் மோசமடைந்திருப்பதாகவும், மனிதாபிமான பணிகளை மேற்கொள்வதில் கடுமையான அழுத்தங்களை ஏற்படுத்துகிறது. இன்னமும் கூடாரங்கள் கிடைக்கப் பெறாதவர்கள் கடும் வெயிலில், மரத்தடிகளில் இருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது எனவும், பெருந்தொகையான மக்கள் போஷாக்கின்றி இருப்பதாகவும், மருத்துவ வசதிகள் மட்டுப்படுத்தப்பட்ட நிலையிலேயே இருப்பதாகவும் பணியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
அப் பிரதேசங்களில் நீர் மற்றும் சுகாதார வசதிகளின் பற்றாக்குறை நீக்கும் வகையில் அவர்களுக்கு கூடுதலான வளங்களை செய்து தரும்படி இலங்கை அரசை கோரியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. பொது மக்களுடன் தங்கியுள்ள முன்னாள் போராளிகளை தனியாக பிரிக்கும் நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு கோரப்பட்டுள்ளதாக வில்லியம் ஸ்பிண்டலர் தெரிவித்தார்.
No comments:
Post a Comment