23 April 2009

யுத்தபூமியிலிருந்து மீட்டெடுத்த மக்களை தொடர்ந்து பராமரிக்க கோரிக்கை – த.சித்தார்த்தன்

யுத்த பூமியிலிருந்து ஒரு லட்சத்துக்கும் அதிகமான மக்களை மீட்டெடுத்தமை மாத்திரமல்லாமல், அவர்களைத் தொடர்ந்து பராமரிப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்கும்படி தமிழீழ மக்கள் விடுதலை கழகத்தின் (புளொட்) தலைவர் த. சித்தார்த்தன் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கு எழுதிய கடிதத்தில் கேட்டுக்கொண்டுள்ளார்.

மேலும் குறிப்பிடுகையில் அம் மக்கள் தங்களுடைய சொந்த வீடுகளில் சென்று குடியேறினால் தான் உண்மையான சுதந்திர வாழ்க்கையை அவர்கள் நெடுங்காலத்திற்கு பின்பு வாழமுடியும் என்பதையும் சுட்டிக்காட்டி, அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் கேட்டுக்கொண்டுள்ளார். மற்றும் மதகுருமார் பலர் அகதி முகாம்களில் இருப்பதனால் அவர்களுடைய மத அனுஷ்டானங்களின் பிரகாரம் வாழமுடியாத நிலைமையில் உள்ளதாகவும், எனவே மதகுருமார் தனியான ஓரிடத்தில் வாழக்கூடிய வகையிலான ஏற்பாடுகளைச் செய்து கொடுக்குமாறும் கேட்டுள்ளார். பொதுவாகவே மதகுருமார்கள் உரியமுறையில் பராமரிக்கப்பட வேண்டுமென்பதைச் சுட்டிக்காட்டிய் த. சித்தார்த்தன் அவர்கள் இந்து மதகுருமார்க்கு விசேட பிரச்சினைகள் பல உள்ளதையும் குறிப்பிட்டார். குறிப்பாக அவர்கள் மற்றையவர்கள் சமைத்த உணவுகளை உண்ண முடியாத சில விசேட பிரச்சினைகள் அவர்களுக்கு உள்ளன. எனவே சகல மதங்களைச் சேர்ந்த குருமார்களையும் அவர்களுக்கென ஒரு தனி இடத்தில் தற்காலிகமாக வைத்திருப்பதற்கு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.

No comments:

Post a Comment