20 May 2009

இத்தனை ஆண்டுகாலமாக இருந்த ரணத்தை ஆற்றுவதற்கு வழிபார்க்க வேண்டும் - ஜோன் ஹோம்ஸ்

ஒரு சமுதாயம் இன்னொரு சமுதாயத்தை வென்று விட்டது என்ற வெற்றிக்களிப்பு கொள்ளாது, இந்த நேரத்தில் இத்தனை ஆண்டுகாலமாக இருந்த ரணத்தை ஆற்றுவதற்கு வழிபார்க்க வேண்டும். அத்துடன் அனைத்து சமுதாயத்தினரும் சம உரிமையுடன் வாழ வேண்டும்" என ஐ.நாவின் மனிதாபிமான பணிகளுக்கான துணை பொதுச்செயலர் ஜோன் ஹோம்ஸ் பிபிசி தமிழோசைக்கு வழங்கிய செவ்வியில் தெரிவித்துள்ளார்.
இலங்கையின் தற்போதைய நிலவரங்கள் தொடர்பாக ஐ.நாவின் மனிதாபிமான பணிகளுக்கான துணை பொதுச்செயலர் ஜோன் ஹோம்ஸ் பிபிசி தமிழோசைக்கு வழங்கிய செவ்வி.
தமிழோசை: கொல்லப்பட்டவர்களின் உடல்கள் கொழும்புக்கு கொண்டுவரப்பட்டு பொது மக்களின் பார்வைக்கு வைக்கப்படலாம் என்பது போன்ற அச்சங்கள் நிலவுகின்றனவே
ஜோன் ஹோம்ஸ்: "எப்படி செய்வது சரியான ஒன்றாக இருக்காது என்பது என்னுடைய தனிப்பட்ட கருத்து. இப்போது என்ன செய்ய வேண்டும் என்றால், இது தான் இலங்கை அரசாங்கத்திற்கும் நான் சொல்வது, ஒரு சமுதாயம் இன்னொரு சமுதாயத்தை வென்று விட்டது என்ற வெற்றிக்களிப்பு வேண்டாம். இந்த நேரத்தில் இத்தனை ஆண்டுகாலமாக இருந்த ரணத்தை ஆற்றுவதற்கு வழிப்பார்க்க வேண்டும். அனைத்து சமுதாயத்தினரும் சம உரிமையுடன் வாழ வேண்டும்."
தமிழோசை: அதே நேரம் விடுதலைப் புலி உறுப்பினர்கள் பலர் சரணடைந்துள்ளனர், சிலர் காயமடைந்த நிலையில் உயிருடன் பிடிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் எப்படி நடத்தப்படுகிறார்கள். எத்தனை பேர் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள். அவர்களுக்கு சட்டபூர்வ வசதிகள் கிடைக்கின்றனவா என்பது குறித்து ஐநாவுக்கு எதாவது தெரியுமா
ஜோன் ஹோம்ஸ்: எத்தனை பேர் இருக்ககிறார்கள் என்பது எனக்கு தெரியாது. முதலில் விடுதலைப்புலிகளின் மூத்த தலைவர்கள் தவிர மற்றவர்கள் மீது நடவடிக்கை இருக்காது என இலங்கை அரசு கூறியது. முன்பு மக்கள் இடம்பெயர்ந்து முகாம்களுக்கு சென்ற போது ஏராளமான மக்களின் விபரங்கள் சேகரிக்கப்பட்டுள்ளன. இதில் விடுதலைப்புலிகளுடன் தொடர்பு கொண்டவர்களும் இருந்தனர். இவையெல்லம் முன்னர் நடந்தது. ஆகவே அனைவரும் முறையாக சட்டத்திற்கு உட்பட்டு நடத்தப்பட வேண்டும் என்று நான் நம்புகிறேன்."
தமிழோசை: அங்கே போர் உக்கிரமாக நடந்து கொண்டிருந்தபோது மருத்துவ சிகிச்சைகளை வழங்கி வந்த மூன்று மருத்துவர்கள் தற்போது அரசால் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.அவர்கள்தான் அங்குள்ள நிலைமை குறித்து சர்வதேச ஊடகங்களுக்கும் தகவல் வழங்கி வந்தனர்.அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய ஐநா என்ன செய்கிறது ?
ஜோன் ஹோம்ஸ்: "எங்களுக்கு அவர்களிடம் இப்போது தொடர்பில்லை, ஒருவர் காயமடைந்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு பின்னர் அங்கிருந்து விடுவிக்கப்பட்டார் என்று அறிய வருகிறோம். நான் முன்பு கூறியது போல, போர்ப்பகுதியில் மிக மிக இக்கட்டான சூழ்நிலையில், மிகவும் சிறப்பாக பணியாற்றிய இவர்கள் முறையாக நடத்தப்பட வேண்டும் அவர்களை கைது செய்ய கூடாது என்பதை கூறுகிறேன்." தமிழோசை: விடுதலைப் புலிகளின் அரசியல் பிரிவு தலைவர் நடேசன், சமாதானச் செயலகத்தின் பொறுப்பாளர் புலித்தேவன் உள்ளிட்டோர் இராணுவத்திடம் சரணடையும் நோக்கில் வெள்ளைக் கொடியை ஏந்தியபடி வந்தபோது, அவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டதாக சில செய்திகள் உலவுகின்றன. சரணடைவது தொடர்பாக விடுதலைப் புலிகளுக்கும் ஐ நா உள்ளிட்ட நிறுவனங்களுக்கும் இடையே பேச்சுவார்த்தைகள் நடந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து உங்களுக்கு ஏதாவது தெரியுமா?
ஜோன் ஹோம்ஸ்: "பல்வேறு இடங்களில் இது போன்ற தகவல் வந்துள்ளது என்பதை நான் அறிவேன். நாங்கள் அவற்றை பகிர்ந்து கொண்டோம். என்ன நடந்தது என்பது எங்களுக்கு தெளிவாக தெரியவில்லை.சரண் அடைவது என்பது அவர்களது கோட்பாட்டிற்கு மாறானது என்பதால், அவர்களது தரப்பே அவர்களை சுட்டு கொன்று விட்டது என்று கூறப்படுகிறது, இதற்கு எதிர் மாறாகவும் கூறப்படுகிறது. எதையும் எங்களால் உறுதி செய்ய முடியாமல் இருக்கிறது, இவை அனைத்துமே கடைசி நேரத்தில் நடந்துள்ளதால் எதுவும் சொல்ல முடியாமல் இருக்கிறது" தமிழோசை:ஆனால் அதே நேரத்தில் விடுதலைப் புலிகள் என்ன செய்ய முன்வந்தார்கள் என்பது குறித்து உங்களால் உறுதியாக சொல்ல முடியுமா ?
ஜோன் ஹோம்ஸ்:"என்னால் விபரமாக கூற முடியாது. விடுதலைப்புலிகளிடம் இருந்து நேரடியாக நான் கேட்கவில்லை. ஆனால் அவர்கள் திங்கட்கிழமை மூன்றாம் தரப்பிடம் சரணடைய தயாராக இருப்பதாக ஒரு சிலர் சொன்னார்கள், கடைசி நேரத்தில் சொன்னார்கள். அது மிகவும் காலம் தாழ்ந்து விட்டது என்று தான் சொல்ல வேண்டும். அதற்கு பின்னர் என்ன நடந்தது என்பதை என்னால் சொல்ல முடியாது. " தமிழோசை: விடுதலைப்புலிகள் சரணடைய முன் வந்தது குறித்து ஐநா இலங்கை அரசு மற்றும் புலிகளுக்கு இடையேயான பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டதா?
ஜோன் ஹோம்ஸ்:" அப்படியான ஒரு பேச்சுவார்த்தை இடம்பெறவில்லை. அந்த கோணத்தில் பேச்சுவார்த்தை நடந்ததாக நாங்கள் அறியவில்லை. சரண் அடைந்தால் தீங்கு நேராது என்று பொதுவாக அரசாங்கம் சொல்லி இருந்ததாக நாங்கள் அறிகிறோம். " தமிழோசை: இது ஒரு புறம் இருக்க, கடந்த ஏப்ரல் மாதம் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் உள்நாட்டில் இடம்பெயர்ந்தோருக்கான முகாம்களுக்கு வந்த நிலையில், அந்த முகாம்கள் மிகவும் ஜன நெருக்கடியுடன் காணப்படுவதாகவும், குடிநீர், கழிப்பறை வசதிகள் போதுமானதாக இல்லை என்றும் ஏற்கனவே ஐநா தெரிவித்திருந்தது. தற்போது மேலும் 70 ஆயிரம் பேர் வந்துள்ள நிலையில் அங்கே நிலைமை எப்படியுள்ளது?
ஹோம்ஸ்: "மனிக்பார்ம் பகுதியில் இருக்கும் பிரதான முகாமில் ஜனநெருக்கடி ஏற்பட்டு விடும் என்று கூறியுள்ளோம். புதியதாக இடங்கள் சுத்தம் செய்யப்பட்டு தயார் செய்யப்பட்டு வருகின்றன. இது கொஞ்சம் உதவியாக தான் இருக்கும். ஆனால் பொதுவாக எல்லா மக்களையும் ஒரே இடத்தில் வைத்திருப்பது நல்லதல்ல. அவர்களை யாழ்ப்பாணம், திருகோணமலை, மன்னார் போன்ற மற்ற இடங்களுக்கு கொண்டு செல்லலாம் என சொல்லி வருகிறோம். ஏனென்றால் ஒரே இடத்தில் இருந்தால் அடிப்படை வசதிகள் கிடைப்பதில் கூட சிரமம் இருக்கும்.
அத்தோடு முகாமில் இருக்கும் அனைவரும் சர்வதேச சட்டத்திட்டங்களுக்கு உட்பட்டு நடத்தப்பட வேண்டும், அவர்களுக்கு உறவினர்கள் பற்றிய விபரங்கள் எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சிக்கீரம் தெரிய வேண்டும். பதிவு செய்தல் மற்றும் அடையாள அட்டைகள் சீக்கிரமாக கொடுக்கப்பட வேண்டும், அப்போது தான் அவர்கள் சுதந்திரமாக உலவ முடியும். இராணுவம் முகாமுக்குள் இருக்க கூடாது. முகாமுக்கு வெளியே இருக்கலாம். அத்தோடு மக்கள் விரைவாக வீடுகளுக்கு திரும்ப அனுமதிக்கப்பட வேண்டும் என்று இலங்கை அரசாங்கத்திடம் கூறி வருகிறோம்.
கண்ணிவெடிகள், வெடிபொருட்களை அகற்ற வேண்டும் என்பதை ஒப்புகொள்கிறோம், இருந்தபோதிலும் மக்கள் விரைவாக வீடு திரும்ப அனுமதிக்க வேண்டும்"என்றார் ஜநாவின் மனிதாபிமான பணிகளுக்கான துணைப் பொதுச் செயலர் ஜோன் ஹோம்ஸ்
பாதிக்கப்பட்டுள்ள அப்பாவி பொது மக்கள் குறித்து ஐ.நா. கவனம் செலுத்தி வருகிறது
புலிகளுக்கு எதிரான இராணுவ நடவடிக்கைகள் முடிவடைந்துள்ளதாக அரசாங்கம் பிரகடனம் செய்துள்ள அதேவேளை இலங்கை நிலைவரம் குறித்து உன்னிப்பாக அவதானித்து வருவதாக ஐ.நா. அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
மோதல்கள் காரணமாக இடம்பெயர்ந்த பல்லாயிரக்கணக்கான அப்பாவி பொது மக்களின் துயரங்கள் தொடர்பில் கவனம் செலுத்தவேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஐ.நா.வின் மனிதாபிமான விவகாரங்களுக்கான பிரதி ஆணையாளர் சேர் ஜோன் ஹோம்ஸ் நியுயோர்க்கில் ஊடகவியலாளர் மாநாட்டில் கருத்து தெரிவிக்கையிலேயே மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
வன்னி நிலைமைகள் தொடர்பில் இதுவரை பூரண தெளிவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். மோதல்கள் முடிவுக்கு வந்ததன் மூலம் நிச்சயமாக நாம் அதிலிருந்து விடுபட்டுள்ளோம். அந்த வலயத்திலிருந்து அனைத்து மக்களும் வெளியேறியுள்ளார்கள். இந்நிலையில் அவர்களின் பாதுகாப்பு அவசியமானதாகும் என்றும் ஹோம்ஸ் தெரிவித்தார்
நன்றி – வீரகேசரி

No comments:

Post a Comment